Wednesday, November 2, 2016

மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு!


வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்..???*
"தனிக் கல்லில் செதுக்கப்பட்ட குளிகன்: பழநி அருகே மூதேவி கோவில் கண்டுபிடிப்பு', என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது.இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், "ஜேஷ்டா தேவி' என்று அழைப்பர். "ஜேஷ்டா' என்றால், முதல் என்று பொருள். தமிழில், "சேட்டை' என்று கூறுகின்றனர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார்.

அவளை, தூம்ர வாராஹி என்றும், "ஜேஷ்டா' என்றும் குறிப்பிடுகின்றன, பலவித தாந்த்ரீக புத்தகங்களில் இதைக் காணலாம்.முதலில், தூம்ர வாராஹி என்பவள், சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்துக்கு பிறகும், தொடர்ந்து இருப்பவள். "தூம்' என்றால், "புகை' என்று பொருள். பிரளயம் முடிந்த பிறகு, மிஞ்சி நிற்பது என்னவென்றால், புகை மட்டுமே. அவள், புகை மண்டலத்தையே விழுங்கி விட்டவள் என்று பொருளாகும். அதைப் போலவே, சிருஷ்டி ஆரம்பிக்கும் முன்பும், அதே புகை தான் முதலில் மேகத்திலிருந்து கிளம்பும். அதனால், முதலில் அவளே தோன்றுவதால், அவள், தேவர்களுக்கும் முன்னால் வந்தவள் என்று கருத்துக் கொள்ளப்படுகிறது. இந்த காரணத்தினால், அவள் முதல் தேவி என்று கருதப்படுகிறாள்.

இரண்டாவது கருத்துப்படி, பாற்கடலிலிருந்து, லட்சுமி தேவி மேலே வருவதற்கு முன், இந்த தேவி வந்ததாகவும், அவளை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும், அதன் காரணமாக அவளை, "தூம்ர காளி' என்று அழைக்கிறார்கள் என்றும் கருதப்படுகிறது. அந்த கோவில், காஷ்மீரில் கவர்னர் மாளிகைக்கு பின்னால், சிறிய குன்றின் மீது உள்ளது. செல்வம் தருவாள்: ஆழ்வார்களில் ஒருவரான திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில், இந்த தேவி, முதல் தேவி என்றும், ஜேஷ்டா தேவி என்றும் கூறி பூஜிக்கப்பட்டாள். சமஸ்கிருத சொல்லான ஜேஷ்டா என்பதற்கு, தமிழில், "முதல் தேவி' என்று தான் பொருள். அவளை பூஜித்தவர்களுக்கு, நிறைய செல்வமும், பதவியும், பலவித சவுபாக்கியங்களும் அருளியதாக தெரிகிறது. அந்த கால கட்டத்தில், சமுதாய மக்களின் மனதை, வைஷ்ணவ சமயத்தில் திருப்புவதற்காக, அந்த தேவியை, தமிழில் சேட்டை என்றும், மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும், நாராயணனும், லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல அவர்களை நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது.

தேவியின் பெயரான முதல் தேவி என்ற சொல், காலப்போக்கில், சொல் திரிந்து, மூதேவியாக மாறிவிட்டது என்று தெரிகிறது. அதற்கு உகந்தது போல, அவள் உருவமும் பெருத்த உடலோடும், பெருத்த வயிறு கொண்டும் செதுக்கப்பட்டு இருக்கிறது. டில்லி நேஷனல் மியூசியத்தில், ஜேஷ்டா தேவி என்ற பெயருடைய பெரிய சிலை, தமிழ்நாட்டில் இருந்து தான் கொண்டு வரப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது. எப்படி வர்ணிப்பது?தூமாவதி, அழுக்கு படிந்த உடலோடும், முகத்தோடும், தலையை வாராமல், கோரமாக தலை மயிர் கொண்டவளும், உடம்பு நீளமாகவும், வயிறு ஒட்டியும், கண்கள் இரண்டும் முழுமையாகத் திறந்து கொண்டு, கண்களாலேயே விழுங்கி விடுபவள் போன்றும் காட்சி அளிக்கிறாள்.

மிகவும் முக்கியமாக, அவள் இரண்டு கைகளும், முறத்தைப் பிடித்துக் கொண்டு, புடைப்பது போல இருக்கின்றன. சில சமயங்களில், அவள் நின்று கொண்டும் புடைப்பது போல, சிற்பிகள் வடித்துள்ளனர். அவள் சவாரி செய்வது கழுதை மீது. அவளுடைய இடது மேல் கையில், ஒரு கொடி இருக்கும்; அதில், காகத்தின் வரைபடம் உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிகள், முறம் பிடித்துக் கொண்டு நிற்கிற அல்லது உட்கார்ந்து கொண்டு இருக்கும் தேவியைத் தான் பூஜை செய்கின்றனர். அவளை, பசி நிறைந்த தேவி என்று கூறி, பூஜை செய்கின்றனர். அந்த தேவியின் சிற்பத்தில், அவள் கையில் இருக்கும் முறத்தில், சிறிய சிறிய நெல் விதைகள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெல் விதைகள், "ஆத்மா' என்றும், அவளை பூஜை செய்யும் ஆத்மாக்கள் சில, சரியான மனப் பக்குவமடையாததாகவும், சில பக்குவப்பட்டதாகவும் இருக்கும். அவள், பக்குவப்படாத ஆத்மாக்களை, கீழே முறத்திலிருந்து தள்ளிவிட்டு, சுத்தமான ஆத்மாக்களை, தன்னோடு சேர்த்துக் கொள்கிறாள்.

கழுதை வாகனம் :கழுதையின் மீது, அத்தனை துணிகளையும் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று, சலவைத் தொழிலாளி துவைக்கிறார். மறுபடியும், அதே கழுதையின் மீது, துவைத்த துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்புகிறார்.அதே மாதிரி தான், தூமாவதி அல்லது ஜேஷ்டா தேவி, பூஜையில் ஈடுபடும் ஆத்மாக்களை, துணி துவைப்பது போல, பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், சோதனைகளையும் கொடுத்து, மனப் பக்குவப்படுத்துகிறாள்.அதில், அந்த ஆத்மாக்கள் திருந்தி விட்டால், தன் மடியில் எடுத்துக் கொண்டு விடுகிறாள்.

இந்த காரணத்தினால் தான், சில சில ஆத்மாக்கள், பல ஜென்மங்கள் எடுத்து, அவள் பூஜையை செய்ய முற்படுகின்றன.இன்னும் சொல்லப் போனால், "ஜேஷ்டா' என்கிற தூம்ர வாராஹியை பூஜை செய்ய, பூர்வஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. காரணம், அந்த ஜேஷ்டா என்கிற தூமாவதி, தூம்ர வாராஹி, தூம்ர காளி என்ற பெயரில், மாயை என்றும், மகா நித்திரை என்றும், காள ராத்திரி, மகா ராத்திரி, மோஹ ராத்திரி என்றும், தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.தூம்ர வாராஹியும், மகா வாராஹியும், ஒரே தேவியின் பெயர்கள். அவர்களின் அம்சங்களும், பணிகளும் வேறு. ஆனால், மூல சார ஸ்வரூபம் ஒன்றே தான். அவள், இரவு நேரம் பூஜிக்கப்படும் தெய்வமாகும். இந்த கருத் தை வைத்துக் கொண்டு தான், ஆழ்வார் அவளை, "மூதேவி' என்று கூறி தள்ளி விட்டாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

காகம்:ஜேஷ்டா அல்லது தூமாவதி என்பவள், வேறு யாரும் இல்லை. அவள் இறந்தவர்களோடு சம்பந்தப்பட்டவள். அவளே யமி ரூபம். அந்த தூமாவதி என்று கூறும் வாராஹியின் கோவில், புவனேஸ்வரில் உள்ளது. அவளுக்கு பெயர் யமி என்று சுவரில் எழுதப்பட்டுள்ளது.தமிழில், சேட்டை என்ற பெயராகும். சேட்டை அல்லது ஜேஷ்டா அல்லது தூம்ர வாராஹி அல்லது மகா வாராஹி ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதாரத்தில், அவருடைய சக்தியாக இருக்கிறாள். அவள் மிகவும் நியாயமான தீர்ப்பை தரும் தர்ம தேவதை.
## ஆன்மீகம் வாட் குழு ## 8098237071

Sunday, October 30, 2016

நல்ல நிர்வாகம் கம்பெனி மேனேஜர்

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...
நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

Tuesday, October 18, 2016

வாஷிங் பவுடர் நிர்மா வளர்ந்த கதை


கர்சன்பாய் படேல் தனது மகளை ஒரு கார் விபத்தில் இழந்தார். அவளின் நினைவாக அவர் தொடங்கிய ப்ராண்டை தன் சொந்த குழந்தையை போல பாவித்து வளர்த்தெடுத்துள்ளார் என்றால் மிகையாகாது. ‘சப்கி பசந்த் நிர்மா’ அதாவது ‘எல்லாருடைய விருப்பமும் நிர்மா’ என்ற பொருள் தரும் விளம்பர வாசகத்தை அறியாதோர் இருக்கமுடியாது. வீடு வீடாக சென்று விற்றுவந்த அந்த பொருள் இன்று இந்திய சோப்பு சந்தையில் 20 சதவீத பங்கையும், சலவை சோப்பு சந்தையில் 35 சதவீத பங்கையும் வகிக்கிறது. 

கர்சன்பாய் 1969 இல் நிர்மா எனும் இந்திய சலவை சோப்பு தொழிலை தொடங்கினார். அப்போது வெகு சிலரே இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். அதுவும் பெரும்பாலும் சர்வதேச நிறுவனங்கள் ஆகும். நடுத்தர வர்கம் மற்றும் ஏழை மக்களை குறிவைத்து இருந்த வர்த்தகத்தில், குறைந்த விலையில் சலவை சோப்புக்கான தொழில் வாய்ப்பு அதிகமாக இருந்தது. கர்சன்பாய், சலவை சோப்பை தனது வீட்டின் பின்புறத்தில் தயாரித்து, அகமதாபாத் அருகில் உள்ள கோக்ரா எனும் இடத்தில் விற்றுவந்தார். வீடு வீடாக சென்று ஒரு கிலோ சோப்பை 3 ரூபாய்க்கு விற்றுவந்தார். அப்போது பிரபல ப்ராண்டுகள் ஒரு கிலோ சோப்பை 13 ரூபாய்க்கு விற்றுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
80’ களில் நிர்மா சந்தையில் நீடிக்க எப்படி போராடி வந்தது என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை செய்தி வெளியிட்டது. அப்போதுதான் கர்சன்பாய் ஒரு அற்புதமான ஐடியாவை கொண்டுவந்தார். நிர்மாவை பிரபலப்படுத்த மாபெரும் விளம்பர பிரச்சாரம் ஒன்றை தயார் செய்தார். அதில் வெள்ளை ப்ராக் அணிந்த தனது மகளின் படத்தை போட்டு, மனதை கவரும் பாடல் ஒன்றை தயார் செய்து விளம்பரப்படுத்தினார். அந்த நிர்மா பாடல் இந்தியா முழுதும் பிரபலமாகி மக்கள் அனைவரும் அந்த சோப்பை வாங்க கடைகளில் குவிந்தனர். இருந்த சோப்புகள் விற்றுத்தீர்ந்தது. நிர்மாக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தனது உற்பத்தியை பெருக்கினார் கர்சன்பாய். அந்த வருடம், சலவை சோப்புகளின் விற்பனையில் நிர்மா முதல் இடத்துக்கு சென்றது. அவரின் போட்டியாளரான, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சர்ஃப் சோப்பை காட்டிலும் நிர்மா உயர்ந்த இடத்தில் இருந்தது. 
இந்த ஆண்டு, கர்சன்பாய் LafargeHolcim’ சிமெண்ட் தொழிலை 1.4 பில்லியன் டாலருக்கு வாங்கி, தான் ஒரு தலைசிறந்த தொழிலதிபர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த டீலின் மூலம் ராஜஸ்தான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்மாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 
தொழில்முனைவு என்பது மனதார செய்யும் ஒன்று. கூச்ச சுபாவம் கொண்ட கர்சன்பாய், நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர். நிர்மா இஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பயிற்சி மையத்தை 1995 இல் தொடங்கினார். பின், நிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை 2003 இல் துவக்கினார். 2004 இல் நிர்மாலேப்ஸ் எடுகேஷன் ப்ராஜக்டை தொடங்கி, அதில் தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் வழிக்காட்டும் பணிகளை செய்துவருகிறார். 2010இல் கர்சன்பாய் படேலுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 
கட்டுரை: Think Change India

Wednesday, September 7, 2016

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.
 ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. 
எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.
 முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.
அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர் கதை 1

ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”
“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.
பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”
சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.
துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.
ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.
தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,
குருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா?
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.
குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.
சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.