Thursday, July 19, 2018

எருக்க இலையும்.. பீஷ்மரும்..​

மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பிதாமர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர், அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக, அர்ச்சுனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கயை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள், கவுரவர்கள், கிஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.

அவரைப் பார்த்த பீஷ்மர், ‘மகரிஷியே.. என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் தான் என்ன?’ என்றார்.

அதற்கு வியாசர், ‘பீஷ்மரே! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் செய்வதுதான் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.’

பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது, தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரித்த போது, சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர், ‘இதற்கு என்ன பிராயச்சித்தம்?’ என்று வியாசரிடம் கேட்டார்.

‘பீஷ்மா! ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது.  உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. என்றாலும், திரவுபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், தவறை தட்டிக் கேட்காத வாய், அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள், வாளை பயன்படுத்தாத உன் கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள், தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி’ என்றார் வியாசர்.

அதையடுத்து பீஷ்மர், ‘என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்’ என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார்.

வியாசர், எருக்க இலை ஒன்றைக் காட்டி, ‘பீஷ்மா! எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் ‘அர்க்க பத்ரம்’. அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும்’ என்றார்.

அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி, ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், ‘வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்’ என்று ஆறுதல் சொன்னார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.

Monday, July 16, 2018

ஆடிப்பிறப்பு ! 17 -07 -18

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி யின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன் னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவ தைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

ஆடி மாதச் சிறப்பு

ஆடி மாதம்

தமிழ் வருடத்தின் நான்காவது மாதம் ஆடி மாதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இம்மாதம் முதலே விழாக்கள், உற்வசங்கள், பண்டிகைகள் ஆகியவை தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறுகின்றன‌.

ஆடிப்பெருக்கு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அஷ்டமி, ஆடிக்கிருத்திகை, ஆடி சதுர்த்தி, ஆடிப்பஞ்சமி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப்பூரம் என ஆடி மாதம் முழுவதும் தெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆடி மாதம் என்பது கோடைகாலம் முடிந்து சிலுசிலு காற்றோடு சாரல் ஆரம்பிக்கும் பருவம்.

பொதுவாக இம்மாதத்தில் திருமணம் போன்ற தனி மனித விழாக்கள் நடத்தப்படுவதில்லை.

ஆடி மாதத்தில் நடைபெறும் விழாக்கள் பற்றிப்பார்க்கலாம்.

தலை ஆடி

ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.

புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர்.

அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படுகிறது.

சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது.

பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள்.

தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.

மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.

சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசௌகரியத்தைக் கொடுக்கும்.

எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள்.

இதனால் தான் ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையைத் தேடிப்பிடி என்ற பழமொழி இன்றும் வழக்கத்தல் உள்ளது.

ஆடிச்செவ்வாய்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு வீட்டிலும், கோவில்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் ஒளவையார் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஆடிச்செவ்வாய் இரவு ஊரில் உள்ள வயதில் மூத்த பெண்மணி தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினைக் கொண்டு

உப்பில்லா கொழுக்கட்டையை தயார் செய்து

ஒளவையாருக்குப் படைத்து

தேங்காய் உடைத்து
ஒளவையாரின் கதையை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவர்.
இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர்.
இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக கருதப்படுகிறது.

ஆடி வெள்ளி

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர்.

கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்கின்றனர்.

ஆடிச்செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆடிக் கூழ் ஊற்றப்படுகிறது.

கேப்பை அல்லது கம்பு மாவினைக் கொண்டு கூழ் தயார் செய்யப்படுகிறது.

அதனுடன் சிறு வெங்காயம் சேர்த்து மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் கோடை வெப்பம் முடிந்து காற்றோடு சாரல் மழை பெய்யும்.

இதனால் அம்மை நோய் பரவும்.
கேப்பை மற்றும் கம்பு தானியம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
சின்ன வெங்காயம் அம்மை நோய் கிருமியை கட்டுப்படுத்தும்.
இதனாலே நம் முன்னோர்கள் கோவில்களில் கூழ் தயார் செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கி இருக்கின்றனர்.
இன்றளவும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆடிக்கார்த்திகை

ஆடிக்கார்த்திகை அன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்று முருகனுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

ஆடிக்கார்த்திகைக்கு விரத முறை மேற்கொள்ளப்பட்டு முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் நீர் நிலைகளில் செய்யப்படுகிறது.

அன்று பித்ருக்களுக்காக மக்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர்.

பித்ரு பூஜை வருடத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை அன்று பெரும்பான்மையான மக்களால் நடத்தப்படுகிறது.
வம்சம் தழைக்கவும், சுபிட்ச வாழ்வும் வேண்டி மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.
இராமேஸ்வரம், பாபநாசம் போன்ற இடங்களில் பித்ரு பூஜை செய்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று தான் திருவையாற்றில் சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சியளித்தார்.
இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக இன்றும் இந்நிகழ்வு ஆடி அமாவாசை அன்று நிகழ்த்தப்படுகிறது.

ஆடிப்பௌர்ணமி

ஆடிப்பௌர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை (ஆசிரியர்) வழிபடுவதுடன்
தட்சிணா மூர்த்தி, கிருஷ்ணன், வேதவியாசர், ஆதிசங்கரர், இராமானுஜர், போன்றோரையும் வழிபடுகின்றனர்.
ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும்.
கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடிப் பௌர்ணமி அன்று ஆடித்தபசு நடைபெறுகிறது.

உமையம்மை கோமதி என்ற திருநாமத்துடன் சங்கர நாராயணர் தரிசனம் வேண்டி சிவனை நோக்கி ஒற்றைக் காலில் இத்தலத்தில் தவமிருந்தாள்.

கோமதி அம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க பொதிகை புன்னை வனத்தில் இறைவன் சங்கர நாராயணராக ஆடிப்பௌர்ணமியில் காட்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆடித் தபசு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 11-ம் நாள் தபசுக் காட்சி நடைபெறுகிறது.

ஆடி நவராத்திரி

இம்மாதத்தில்தான் வாராஹி அம்மனை நினைத்து ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம்
ஆடிப்பூரத்தில் தான் திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட கண்ணாடி வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

3 நாட்கள் கழித்து பக்தர்களுக்கு கண்ணாடி வளையல்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

இவ்வளையல்களை அணிவதால் குழந்தைப்பேறு கிட்டும்: மாங்கல்ய பலம் கூடும் என்று கருதப்படுகிறது.

ஆடிப்பூரத்தில் தான் பொறுமையின் வடிவமான பூமா தேவியின் அவதாரமாக ஆண்டாள் அவதரித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு குழந்தைப் பேறு இல்லை. இக்குறையை நீக்குமாறு அவர் தினமும் திருமாலை வேண்டினார்.

அக்குறையை நீக்கும் பொருட்டு கோவில் நந்தவனத்தில் நள வருட ஆடிப்பூர செவ்வாய் கிழமையில் துளசி செடிக்கு அடியில் பெண்குழந்தை ஒன்றைக் கண்டு எடுக்கும்படி திருமால் அருளினார்.

அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.
கோதை அரங்கனையே மணாளனாகக் கருதி வளர்ந்து வந்தாள்.
பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாளுக்கு கட்டும் மாலையை தினமும் அவர் அறியாத வண்ணம் அணிந்து மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து வந்தாள் கோதை.
ஒருநாள் இச்செயலைக் கண்ட பெரியாழ்வார் அதிர்ச்சியுற்று
கோதையைக் கடிந்து கொண்டு
வேறு மாலையைத் தயார்செய்து பெருமாளுக்கு சூட்டினார்.
அன்று இரவு கனவில் தோன்றி பெருமாள்,

" உம்பெண் உணர்வால் மட்டுமல்ல மனதாலும் என்னை ஆண்டாள்.
எனவே எனக்கு அவள் சூட்டிய மாலையையே அணிவிப்பீர் " என்று கூறினார்.
இதனால் கோதை அன்று முதல் சூடிக்கொடுத்த சுடர்கொடி, ஆண்டாள் என்று வழங்கப்பட்டாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் இன்றளவும் மக்களால் பாடப்படுகின்றன.
ஆண்டாளை மன உறுதியுடன் வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு வருடம் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது விவசாயிகள் நதி அன்னையிடம் வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு மேற்கொள்ளப்படும் வழிபாடாகும்.

இவ்விழா காவிரி நதிக்கரையோர மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் ஆடிப் பெருக்கன்றே விதைகள் விதைக்கப் படுகின்றன.
ஆடி மாதப் பருவநிலை விவசாயத்திற்கு உகந்தது.

எனவே தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.
ஆடிப் பெருக்கன்று எந்த வித செயலைத் தொடங்கினாலும் அது சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது.

காவிரிக்கரையில் பெண்கள் அதிகாலையில் குளித்து கரையோரத்தில் வாழை இலை விரித்து கருகமணி, பழங்கள், வெற்றிலை, பாக்கு சித்ரான்னங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை படைத்து அகல் விளக்கேற்றி காவிரியை வணங்குகின்றனர்.

பின்னர் மஞ்சள் நூலை கழுத்தில்கட்டிக் கொள்கின்றனர்.

ஸ்ரீரங்கநாதரும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் எழுந்தருளி காவிரிக்கு சீர்பொருட்களை வழங்குவார்.
ஆடிப்பெருக்கு ஒவ்வோர் ஆண்டில் ஆடி-18ல் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாகசதுர்த்தி என்றும்,

வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகின்றன.
வளர்பிறை தசமி அன்று திக்வேதா விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
திசை தெய்வங்களுக்கு அன்று வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தல், பசுவிற்கு அகத்திக்கீரை அளித்தல் போன்றவற்றால் தீவினைகள் நீங்குவதாகக் கருதப்படுகிறது.

ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது.
இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது.

கிராமங்களில் கிராம எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

கருடாழ்வார், சுந்தரநாயனார், கலிய நாயனார், புகழ்சோழ மூர்த்தி நாயனார், ஆளவந்தார், புண்டரிகாவுர், கந்தாடை, தோழப்பர், பத்ரிநாராயண ஆழ்வார் போன்றோர் ஆடியிலே அவதரித்தவர்கள் ஆவர்.

சுருங்கச் சொல்லின் ஆடி மாதத்தில் தனிமனித விழாக்களைத் தவிர்த்து
பண்டிகைகள் போன்ற பொது விழாக்கள் சிறப்பாக‌ கொண்டாடப்படுகின்றன.

Saturday, July 14, 2018

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்

W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)

Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)

Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)

N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.

D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி

இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
YG

மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)

G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்

சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).

எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.

அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.

Wednesday, February 7, 2018

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!



ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இன்னொரு புகாரை எழுப்பினார். தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கக் கடைக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே அவரது ஆதார் எண் ஐந்து மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. ஆனால், அவர் அப்படி எந்த எண்ணுடனும் இணைக்கவில்லை என ட்விட்டரில் சொல்லியிருந்தார். ஒருவேளை, நமக்கே தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற பயம் பயனர்களிடம் எழுந்தது. இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.

இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

1) முதலில் 'https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.

2) 'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.



3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.

4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.

5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.

6) இந்தப் பக்கத்தில் Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)



7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்

8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)

9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.

10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும்.

ஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.

- Thanks Vikatan News