Wednesday, November 28, 2012

யார் தலைவன்?



ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது.

அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்…”

அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.

“
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்”

சொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார். அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.

மூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.

கம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.

ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.

சேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார். வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?”
அவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.
சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.

“
நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”

“
நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

அவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

(
நன்றி சகோ.கோவை பஷீர், நைஜீரியா)

முத்துசுவாமி தீட்சிதர் இசை மும்முர்த்திகள் ஒருவர்.....



வாழ்க்கைக் குறிப்பு

இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருஷம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

வைத்தீஸ்வரன்கோயில் முத்துகுமாரஸ்வாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் "முத்துசுவாமி" எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராம ஸ்வாமி தீட்சிதருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வா
மி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர்.

முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே விவாகம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரே பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது.

தீட்சிதருக்கும் அவரின் தந்தைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் வேதம், மந்திரம், முதலான சாத்திரங்களில் வல்லவர்கள். இனிமையாக பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் திறமையானவகள். சிறந்த சாகித்திய கர்த்தாக்கள். சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்றவர்கள். தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார்.

இசைப் புலமை


தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி சங்கீத்தத்திலும் தேர்ச்சி பெற்றார். இவரின் குரு மிக்க மகிழ்ந்து "அன்பா இனி தமிழகம் செல். திருத்தணி முருகனை உபாசி. முருகன் அருள் பெற்று நாத வித்தையைப் பரவச் செய்" என நல் வாக்களித்தார். சில நாட்களில் இறைவன் அடி சேர்ந்த தம் குருவின் உடலுக்கு ஹனுமான் கட்டடத்தில் சமாதி கட்டி வைத்து, வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டு தீட்சிதர் மணலிக்குத் திரும்பினார்.

மணலிக்குத் திரும்பிய தீட்சிதர், பின் குருவின் சொற்படி திருத்தணி சென்றார். சுப்பிரமணியக் கடவுளைத் தரிசிக்க மலை ஏறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்து " முத்துஸ்வாமி வாயைத் திற" என்று சொல்லி ஒரு கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்து மறைந்து விட்டார்.

அப்போதே மயில் மேல் ஏறிச் செல்லும் முருகனைத் தரிசித்து பரவசமுற்ற தீட்சிதர், சுப்பிரமணிய சுவாமியின் அருளால் கானவாக்கு உதித்து நாத உருப்படிகளை இயற்றும் திறனையும் பெற்றார். இவருடைய முதல் கிருதி மாயாமாளவகௌளையில் "சிறீ நாதாதி குருகுஹோ ஜயதி" என்பதாகும். தன்னுடைய பாடல்களில் குருகுஹ என்ற முத்திரையைக் கையாண்டார். இவரது கிருதிகள் நாளிகேர ரஸத்திற்கு ஒப்பானவை.

இசைப்பணி

பிறகு திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காமாட்சியையும், ஏகாம்பரையும் பாடி விட்டு சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கும் பயணம் செய்து பின்னர் திருவாரூருக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களின் பெயரிலும் பல உருப்படிகளை இயற்றினார்.

தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.

பின்னர் சுவாமிமலை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களுக்கும் சென்று கிருதிகள் இயற்றினார். பின் திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதேஸ்வரரின் பேரில் யமுனா கல்யாணியில் "ஜம்பூபதே" (பஞ்சலிங்க கிருதி) என்ற கிருதியையும், சிறீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் பேரிலும் கிருதிகள் இயற்றியுள்ளார். இவர் பல தொகுதிக் கீர்த்தனைகளையும் இயற்றினார்.

1.
பஞ்சலிங்க ஸ்தலக கிருதி - 5 கிருதிகள்
2.
கமலாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
3.
அபயாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
4.
சிவ நவா வர்ணம் - 9 கிருதிகள்
5.
நவக்கிரகக் கிருதி - 9 கிருதிகள்

தீட்சிதர் கிருதிகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்கள் கொண்டவை. மற்றொன்று பல்லவி, அனுபல்லவி மட்டும் கொண்டவை. சரணம் உள்ள கிருதிகளில் ஒரு சரணத்திற்கு மேல் இல்லை. இவருடைய கிருதிகளில் காணபடும் மற்றொரு சிறப்பம்சம் மத்திமகால சாகித்தியம் ஆகும். அநேகமாக எல்லாக் கிருதிகளிலும் இது காணப்படுகின்றது. சில கிருதிகளுக்கு சிட்டைஸ்வரம், சொற்கட்டுஸ்வரம் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.

தீட்சிதரின் பெரும்பாலான கிருதிகள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும் சில கிருதிகள் மணிப்பிரவாளத்திலும் உள்ளன. ப்ராஸம், அனுப்பிராஸம் இவைகளோடு யாகம், கோபுச்சம், சுரோதோவாகம், ஸ்வர அட்சரம் ஆகிய அலங்காரங்களையும் 35 தாள முறைகளையும் இவர் கையாண்டுள்ளார்.

தீட்சிதரின் கிருதிகள், இசையில் ஆரம்பப் பயிற்சி பெறும் மாணவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற வித்துவான்களும் சபையில் பாடும் வகையிலும் அமைந்துள்ளன.

சீடர்கள்
1.
சுத்த மங்களம் தம்பியப்பா
2.
சின்னையா
3.
பொன்னையா
4.
சிவானந்தம்
5.
வடிவேலு
6.
திருக்கடையூர் பாரதி

இறுதிக்காலம்

குகன் திருவருளால் அழியாப்புகழ் பெற்றுள்ள தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சிஷ்யர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த "மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியைப் பாடப் பாடக் கேட்டுக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்து, இரு கைகளையும் தலை மேல் குவித்து சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. தற்சமயம் இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.