Tuesday, December 4, 2012

டாக்டர் மு.வரதராசன்

எதிர்காலம் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களை, பேராசிரியர்களை, துணை வேந்தர்களைப் பெறலாம். ஆனால் மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கை உறுதியும் கொண்ட ஒரு பண்பாளர் – அறிவுத் தந்தையாய், அன்புள்ள தாயாய்ப் பலருக்கு விளங்கிய ஒரு நல்ல மனிதரை – இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு, அளவோடு நெறி வகுத்து, வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை எதிர்காலத்தில் இனி பார்க்க முடியுமா?

மு.வரதராசன், வட ஆற்காட
ு திருப்பத்தூர் தாலுகா வேலம் என்ற கிராமத்தில் திரு. முனுசாமி முதலியாருக்கும் அம்மாக்கண்ணு அவர்களுக்கும், 1912ம் வருடம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தவர். பிறப்பின் போது இவருக்கு இடப்பட்ட பெயர் திருவேங்கடம், ஆனால் காலப்போக்கில் வரதராசன் என்ற பெயரே நிலைத்தது. இளமையில் ஆதாரக் கல்வியை கிராமத்திலும், உயர் நிலைக் கல்வியை அருகிலுள்ள திருப்பத்தூரிலும் 1928ல் முடித்தார்.

இவர் தமிழ் பயின்றது முருகையா முதலியார் என்பவரிடம். உயர் நிலைக் கல்வி முடிந்ததும், சில காலம் திருப்பத்தூர் தாலுகா காரியாலயத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.

பின்னர் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தவர் தமிழ் வித்துவான் முதல் நிலைப் படிப்பை 1931ல் முடித்து மேல் நிலைப் படிப்பை 1935ல் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய்ப் பரிசும் பெற்றார்.

அதே வருடம் மு.வ. தனது மாமன் மகள் ராதா அம்மாளை மணந்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி என்ற மூன்று மகன்கள் உண்டு.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக 1939ம் ஆண்டு சேர்ந்தவர் தொடர்ந்து 1961ம் வருடம் வரை அங்கு பணி புரிந்தார். பணியிலிருந்தவாறே தமிழ்க் கல்வியைத் தொடர்ந்த மு.வ. 1939ல் பி.ஓ.எல். பட்டத்தையும், தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தனது ஆய்வின் மூலம் 1944ல் எம்.ஓ.எல்.பட்டமும் பெற்றார். மேலும் தமது தமிழாராய்ச்சியைத் தொடர்ந்து 1948ல், சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற படைப்பில் முனைவரானார்.

பச்சையப்பன் கல்லூரிப் பணியை விட்டுவிட்டு, மு.வ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 1961ம் ஆண்டு சேர்ந்தார். இப்பணியிலேயே தொடர்ந்த மு.வ. 1971ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவியேற்றார். 1972ம் வருடம் அமெரிக்காவிலுள்ள வூஸ்டர் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியப் பேரறிஞர்( D.Litt) என்ற பட்டத்தையளித்துக் கௌரவித்தது.

நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் இவரது படைப்புகள். இவர் எழுதிய அகல் விளக்கு என்ற நாவலுக்கு 1963ல் சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது. கள்ளோ காவியமோ என்ற இவரது நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. இவரது படைப்புகளின் விவரங்கள் கீழே:

நாவல்கள்

1. கள்ளோ காவியமோ?
2. கரித்துண்டு
3. பெற்ற மனம்
4. நெஞ்சில் ஒரு முள்
5. அகல்விளக்கு
6. மண் குடிசை
7. செந்தாமரை (மு.வ. தானே பதிப்பித்தது)
8. பாவை
9. அந்த நாள்
10. அல்லி
11. கயமை
12. வாடா மலர்

சிறுகதைத் தொகுதி

1. விடுதலையா?
2. குறட்டை ஒலி
வாழ்க்கை வரலாறு
1. அறிஞர் பெர்னார்ட் ஷா
2. மகாத்மா காந்தி
3. ரவீந்திரநாத் தாகூர்
4. திரு.வி.க.

சிறுவர் இலக்கியம்

1. குழந்தைப் பாட்டுகள்
2. இளைஞர்களுக்கான இனிய கதைகள்
3. படியாதவர் படும் பாடு
4. கண்ணுடைய வாழ்வு

கட்டுரைகள்

1. அறமும் அரசியலும்
2. அரசியல் அலைகள்
3. பெண்மை வாழ்க
4. போர்
5. உலகப் பேரேடு
6. மொழிப் பற்று
7. நாட்டுப் பற்று
8. மண்ணின் மதிப்பு
9. கி.ப். 2000
10. பழியும் பாவமும்

இலக்கியம்
 
 1. திருக்குறள் தெளிவுரை(முதற் பதிப்பு 1949, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளன – என்னிடமிருப்பது 1987ல் வெளியான 78வது பதிப்பு)
2. தமிழ் நெஞ்சம்
3. தமிழ் இலக்கிய வரலாறு
4. வாழ்க்கை விளக்கம்
5. ஓவச்செய்தி
6. கண்ணகி
7. மாதவி
8. இலக்கிய ஆராய்ச்சி
9. கொங்கு தேர் வாழ்க்கை
10. சங்க இலக்கியத்தில் இயற்கை
11. இலக்கியத் திறன்
12. இலக்கிய மரபு
13. முல்லைத்திணை
14. நெடுந்தொகை விருந்து
15. குறுந்தொகை விருந்து
16. நற்றிணை விருந்து
17. நடை வண்டி
18. புலவர் கண்ணீர்
19. இளங்கோ அடிகள்
20. இலக்கியக் காட்சிகள்
21. குறள் காட்டும் காதலர்
22. மொழி நூல்
23. மொழியின் கதை
24. மொழி வரலாறு
25. மொழியியற் கட்டுரைகள்

டாக்டர் மு.வரதராசனார் 1974ம் வருடம், அக்டோபர் மாதம் 10ம் தேதி காலமானார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மக்கள் கவிஞர் என்று போற்றப்படுகின்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சில ஆண்டுகளே பாடல்கள் எழுதி சிறுவயதிலேயே மறைந்து விட்டாலும் அவர் படைத்த பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன. 1930ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ஆம் நாளன்று பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29ஆம் வயதில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாளன்று மறைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு எனும் அ
ழகிய கிராமத்தில் அருணாசலம் -விசாலாட்சி தம்பதியருக்கு இளைய மகனாகத் தோன்றிய பட்டுக்கோட்டையார் தனது 15ஆம் வயதில் ஓடிப்போ, ஓடிப்போ, கெண்டைக் குஞ்சே என மீனைப் பார்த்து முதல் பாடலை இயற்றினார்.

இயற்கை, சமூக நலம், அரசியல், பொதுவுடைமை, தத்துவம், காதல், மூடநம்பிக்கைக்கு எதிராக என்று பல பொருட்களில் பாடல்களைப் படைத்து பட்டுக்கோட்டை ஆனார். தனது முதல் திரைப்பாடலை 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக எழுதினார். ஆனால் அவர் இரண்டாவதாக பாடல் எழுதிய மஹேஸ்வரி படம் தான் முதலில் 1955ஆம் ஆண்டு வெளியானது. படித்த பெண் 1956ஆம் ஆண்டு வெளியானது. 1956ஆம் ஆண்டு வெளியான பாசவலை படம் பட்டுக்கோட்டையாரை புகழேணியில் ஏற்றிவிட்டது. புகழின் உச்சியை ஐந்தே ஆண்டுகளில் எட்டிப் பிடித்த கவிஞர் எரிகின்ற விண்மீன் போல் ஒளி வீசிக் கொண்டே மறைந்தார்.

கவிஞரின் தந்தையார் அருணாசலம் அவர்களும் கவிஞர் தான். அவர் எழுதிய முசுகுந்த நாட்டு வழிநடைக் கும்மி எனும் கும்மிப்பாடல் இன்றும் பட்டுக்கோட்டைப் பகுதி கிராமங்களின் வரலாற்று நூலாக விளங்குகிறது.

கவிஞரின் மூத்த சகோதரர் கணபதிசுந்தரம் சிறந்த ஓவியர் மட்டுமல்லாது கவிஞரும் கூட. தற்போது உயிருடன் இல்லை. கவிஞரின் மனைவி கௌரவம்மாள்; மகன் குமாரவேலு. மனைவிக்குக் கடிதம் எழுதினாலும், தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவார் கவிஞர்; அவர் திருமணம் பாவேந்தர் தலைமையில்தான் நடைபெற்றது.

கவிஞரின் பாடல்கள் மிக எளிமையான தமிழில் இருந்தாலும் அதில் சந்தம் இருக்கும். தாளம் போட்டுக் கொண்டேதான் பாடலை யோசிப்பாராம் கவிஞர். எளிமையான பாடல்களில் மிக ஆழமான உண்மைகள், கருத்துகள் கேட்போருக்கு உடனே புரிந்தன; உள்ளத்தில் பதிந்தன.

தீவிர சிந்தனையும், சமூகப் பொறுப்புணர்ச்சியும் இயற்கையாகக் கொண்டிருந்த பட்டுக்கோட்டையார் பள்ளி சென்றதில்லை. உள்ளூரிலே இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் இரண்டு மூன்று ஆண்டுகள் அடிப்படை கல்வி கற்றதோடு சரி. விவரம் தெரிகின்ற வயதில் தந்தை பெரியாரின் இயக்கமான சுயமரியாதை இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். திருவாரூரில் இயக்க மேடைகளில் சீர்திருத்தப் பாடல்களை கவிஞர் பாடியபோது தான் கலைஞர் அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. வளர்ந்து இளைஞன் ஆனதும் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, நடிகர் டி.எஸ்.துரைராஜ் மூலம் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார்.

நெடிய உருவம் கொண்ட பட்டுக்கோட்டையாரும், பின்னாளில் புகழ் பெற்ற நடிகரான ஓ.ஏ.கே.தேவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். தனது நாடக நாட்களின் இறுதியில் 1951ஆம் ஆண்டு கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார். அவர் பெயர் அப்போது ஏ.கே.சுந்தரம். பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட, கவிஞர் 1952இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.

அ.கல்யாணசுந்தரம் என்ற தன் பெயரை அகல்யா என்று சுருக்கி அந்தப் பெயரில் எழுதிய பாடலைப் பாவேந்தர் பாராட்ட, கவிஞர் என்ற அங்கீகாரம் கிடைத்தது.

1953இல் சக்தி நாடக சபா கலைக்கப்பட்டதும் சிவாஜி நாடக மன்றத்தில் சென்னையில் சேர்ந்து, நாடகங்களில் நடித்துக் கொண்டே நாடகங்களுக்கு பாடல்களும் எழுதினார். போதிய வருவாய் இன்றி பட்டினியோடு பட்டுக்கோட்டையார் கழித்த நாட்கள் பல. அந்த ஓரிரு ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து கொண்டு அவர் பார்த்த உலகம் அவருக்கு மிகப் பெரிய அனுபவ அறிவைக் கொடுத்தது. அதன் மூலம் அவர் பெற்ற சிந்தனைத் தெளிவு, இளமையில் வறுமை, கவிஞரின் இயற்கையான கவித்திறனை ஒருமுகப்படுத்தியது. பொதுவுடைமைச் சிந்தனையைப் பெருக்கியது.

சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டையாருக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தியில் பாடல்கள் எழுதினார். முதல் பாடல் ஜனசக்தியில் 1954இல் வெளிவந்தது. ஜீவாவின் உதவியால் பொதுவுடைமை இயக்க நாடகமான கண்ணின் மணிகள் நாடகத்திற்கும் பாடல்கள் எழுதினார், திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்புத் தேடி பட்டுக்கோட்டையார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல, அதுவும் பல நாட்களில் பட்டினியோடு. 1954ஆம் ஆண்டு முதல் முதலாக படித்த பெண் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதினார். கவிஞரின் இரண்டாவது படம் மஹேஸ்வரி, 1956இல் முதன்முதலாக பட்டுக்கோட்டையாரின் பாடல்களைத் தாங்கி வெளிவந்தது.

நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேரமும் பாடல்கள் எழுதுவதில் ஈடுபட்டார். 1956ஆம் ஆண்டிலேயே பாசவலை படம் வெளிவந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட கவிஞர் ஆனார். அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இறுதி நாள் வரை தொடர்ந்தது.

1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் தலைமையில் நடைபெற்றது. 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் கவிஞருக்கு மகன் பிறந்தான்; குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞர் வாழ்வு முடிவடைந்தது.

இந்தியா விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1972ஆம் ஆண்டு இந்தியா அரசு வெளியிட்ட விடுதலை வெள்ளி விழா மலரில், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்கள் என்று தலைப்பிட்டு பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வரிசைப்படுத்தி அப்பெருமக்கள் எழுதிய பாடல், ஒவ்வொன்றையும் வெளியிட்டிருந்தது. அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன் மக்கள் கவிஞர் என்று பட்டம் பெற்றவர் கவிஞர். 1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு மக்கள் கவிஞர் என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது.

1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார். 1993ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு மணிமண்டபம் அரசால் கட்டப்பட்டு 2000ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மக்கள் கவிஞரின் புகைப்படங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் குமரன்


காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொ
டியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.

அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான்.

1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்றி குடும்பம் வறுமையில் வாடியது. எனினும் செம்மையாகவும், கவுரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

காவலர்கள் தடியடி நடத்தி, தூப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதியாகும்.

மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.

ஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை.

நாடு சுதந்திரமடைந்ததன் 60ம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில், திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.

சுப்பிரமணிய சிவா

நமது சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும். இதில் விடுபட்டுபோன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம் எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு (4-10-1884) ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊர
ில் பிறந்தார் அவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரண்டு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு. இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார் பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார் பின்னர் கோயமுத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் ( அவற்றில் ஒன்றுகூட இப்போது நமக்கு கிடைக்கவில்லை ).

படிப்பு முடிந்தது குடும்பச் சுமை காரணமாக சிவகாசியில் போலீஸ் இலாகாவில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். சேர்ந்த மறுநாளே இந்த வேலையை விட்டு விலகிவிட்டார். இவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இதுவே. 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை.

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த ஸ்ரீ தாகூர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார் இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியேற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக் கைதியாக பிரச்சாரம் செய்து வந்தார்.

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர் இவரது பேச்சை கேட்ட பல இளைஞர்கள் தங்களை தேச சேவையில் இணைத்துக் கொண்டனர். சிவா தன்னுடைய திட்டங்களுக்கு இளைஞர்களும், தொழிலாளர்களுமே பக்க பலமாக இருப்பார்கள் என பலமாக நம்பினார் இவர்களுக்காக அயராது பாடுபட்டார். அப்போது தான் அவருக்கு வ.உ.சி.-யின் நட்பு கிடைத்தது. அதே காலத்தில் தான் நெல்லை வந்திருந்த மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டார். இம் மூவருடைய நட்பு தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் கொண்டது. இவர்கள் மூவரையும் தமிழகத்தின் தேசிய மூம்முர்த்தினர் என்றே குறிப்பிடலாம்.

வ.உ.சி. சிவா இணைந்து செயல்பட்டதால் நெல்லை மாவட்டம் விடுதலை போராட்டத்தின் உலைகளமாக திகழ்ந்தது. இதனை கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இருவரையும் சிறைக்கு அனுப்பி மகிழ்ந்தது. இது குறித்து வ.உ.சி தனது சுயசரிதையில்.

இவர் பிரசங்கம் செய்ததற்காகத்
தவம் புரியும்படிதச நல் வருடம்
தீவென் றியம்பினான் நீங்கிலேன் அதற்குக்
தாவில் உதவியை தந்ததற்காக
இருபது வருடமும் இயம்பிய நெல்லையில்
ஒரு பிரசங்கம் உரைத்ததற்காக
இருபது வருடம் தீருவனம்
கற்றோர் மனமும் கலங்கிடச் சொன்னான்
இறையும் கலங்கா தென்னும் கவர்ந்துள
இறையின் கொடையென ஏற்றேன்.

என்று குறிப்பிடுகிறார்.

பின்னால் செய்து கொண்ட மேல் முறையீட்டினால் இருவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டது. சிவாவுக்கு 10 வருட தண்டனை 6 வருடமாக குறைக்கப்பட்டது. சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாரதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார்.

பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கேலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்டிய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று.

சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மோசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வையூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் வைத்து ஒவ்வொரு செயலிலும் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும் என்ற கருத்துடையவர். குறிக்கோளை அடைய இருவழிகள் உள்ளன. ஒன்று இயந்திரங்களை சேதப்படுத்தி நஷ்டப்படுத்துவது, இரண்டு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர் சிவா. இதன் அடிப்படையில் 1920-ல் சென்னையில் நடைபெற்ற ட்ராட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது தீவிர ஆர்வம் காட்டி தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்.

1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு. மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார். சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்.

சிவா வாழ்ந்த காலங்களில் நடைபெற்ற மாநாடுகள், போராட்டங்கள் அனைத்திலும் சிவா தனது பங்கை முழுமையாக செலுத்தியுள்ளார். அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, போராட்டங்களோ இல்லை என்றே சொல்லலாம். அவற்றிலெல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துனிச்சல் மிக்கவர். காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம் இவருக்கு பல வழிகளில் தொல்லையளித்தது. 1921-ம் வருடம் இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கியது.

பின்னர் உவாரங்களில் விடுதலை செய்து விட்டது. பின்னர் 27-11-1922-ல் ஒரு வருட சிறை தண்டனை அளித்தது. கொடுமையான சிறை வாழ்க்கை காரணமாக அவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. இன்றைய நிலை போல் இல்லை தொழு நோயாளியின் நிலைமை இதற்கு சுப்பிரமணிய சிவாவின் நிலைமையும் ஒரு சாட்சி, அவருடைய நோயை காரணம் காட்டி சிவாவை ரயிலில் பயணம் செய்யக் கூடாதென்று அரசு தடைவிதித்தது. இதனைக் கண்டு கலங்கவில்லை சிவா, கட்டை வண்டியிலும், கால் நடையாகவும் தன் பயணத்தை மேற்க்கொண்டு மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

பாரத தேசத்தை கடவுளாக கொண்ட சிவா பாரத மாதாவுக்கு கோவில் கட்ட தீர்மானித்தார். தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாலைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் இலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்.

நோயின் கொடுமையிலும் ஓயாத உழைப்பு நாடு அந்நியரின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவிக்கப் படவேண்டுமென்று அயராது பாடுபட்டார் இதனால் அவரது உடல் நலம் குன்றியது. இந்நிலையில் 1925-ல் கான்பூரில் நடைபெறவிருந்த கம்யூனிஸ்ட்கட்சினரின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். உடல் நிலை தேறியவுடன் திருநெல்வேலி வழியாக மேற்கு கடற்கரை யோரமாக பம்பாய் சென்று அங்கிருந்து கான்பூரில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். சிவாவின் உடல் நிலை நாட்பட நாட்பட மிகவும் மோசமடைந்து வந்ததினால் அவரால் திட்டமிட்டபடி கான்பூர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. 22-7-1925-ல் தனது சீடர் சுந்தர பாரதியின் துணையுடன் பாப்பாரபட்டியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்.

சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர். இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வாழ்வை நீந்தார்.

சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முடித்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார் அவரும் நாடகத்தில் பங்கேற்று நடித்துள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்

புளோரன்ஸ் நைட்டிங்கேல்

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

நவீன தாதியியல் முறையை உருவாக்கி முதலில் செவ
ிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12-ஆம் நாளை 1965 -ஆம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சஸ் நைட்டிங்கேல் தம்பதியர்க்கு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றிய போது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும் தன் குடும்ப பெயரான நைட்டிங்கேல்யையும் இணைத்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று பெயர் வைத்து அழைத்தனர். இறைவனால் தனக்குப் பணிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் புளோரன்ஸ் நைட்டிங்கேல்.

1854-56 ஆம் ஆண்டு ரஷ்யப் பேரரசுக்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து அரசுஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியனில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க புளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று போர்முனைக்கு அனுப்பப்பட்டது. இடைவிடாது இரவு பகல் பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்தும் ஆறுதல் மொழி பேசியும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் தேற்றி வந்தார். இரவு நேரங்களில் வலிதாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களைக் கையில் இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு சுகம் விசாரித்து அவர்களின் வலிக்கு மருந்துகளைக் கொடுத்து, அவர்களைப் பற்றிய தகவலைத் திரட்டி அவர்தம் குடும்பத்தினர்க்குத் தகவல் சொல்லி அவர்களின் மனச்சுமையை போக்கி இராணுவ வீரர்களை விரைந்து குணப்படுத்தினார். இதை கண்ட இராணுவ வீரர்கள் ‘தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் விளக்குடன் வந்துள்ளது’ என்று புகழ்ந்து பாராட்டினர்; விளக்கேந்திய பெருமாட்டி என்று வர்ணித்தனர். போருக்குப் பின் நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விக்டோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக அறியப்பட்டவராக பி.பி.சி. அறிவித்தது.

விக்டோரிய மகாராணி 1883-ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு செஞ்சிலுவை விருதும், 1907 ஆம் ஆண்டு பிரித்தானிய மன்னரின் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் உயரிய விருதையும் பெற்ற முதல் பெண்மணியாக கௌரவிக்கப்பட்டார். சாதாரண மருத்துவ சேவையில் துவங்கி, காலரா போன்ற கொடிய கொள்ளை நோய் பரவி இருக்கும் இடங்களிலும், போர் மேகம் தவழும் யுத்த பூமியிலும் துணிவுடன் பணியாற்றி வந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் 13.8.1910 ஆம் ஆண்டு உலக வாழ்க்கையைத் துண்டித்து மரணம் அடைந்தார். அவர் நினைவாக ஆண்டுதோறும் அவர் பிறந்த மே12 ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் அங்குள்ள செவிலியர்களால் அந்த மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அந்நாளில் வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது. இது ஓர் உணர்வுப்பூர்வமானது. ஒரு செவிலியரிடமிருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

செவிலியர் பணி தொழில் அல்ல; மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடிய மனித நேய சேவை. தாய்க்கு நிகரான சகிப்புத் தன்மை கொண்டு, தரப்படும் ஊதியத்திற்கு அப்பாற்பட்டு அழுகும் புண்களையும் தொட்டுத் தடவி சிகிச்சை செய்யும் சேவை மகத்தானது. இதை நினைவுகூர வேண்டியது நம் சமூகக் கடமை. புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டு செய்து வரும் செவிலியர்களை இனங்கண்டு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் அவர்களைக் கௌரவிப்பதே நாம் வழங்கும் அங்கீகாரமாகும்.

அன்னை தெரசா, “ஆண்டவனை எங்கே தேடுகிறார்கள் வறியவர்களும், நோயுற்றவர்களும் துன்பப்படுகின்றவர்களும் ஆறுதல் அடையும் போது அவர்கள் முகத்தில் தவழும் புன்னகையில் இறைவன் உள்ளார்,” என்று சொன்னார்.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களை நியமித்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. உலக சுகாதார நல நிறுவனம் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து அரசு பொது மருத்துவ மனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், ஐந்து நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என நோயாளிகளின் நலன் கருதி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறைந்தபட்சம் ஐந்து செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் 2012-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி ஒட்டுமொத்த இந்தியாவுக்கு 11 இலட்சம் செவிலியரும், தமிழகத்துக்கு 50 ஆயிரம் செவிலியரும் பற்றாக்குறையாக உள்ளது.

மருத்துவரின் பணி என்பது நோய் அறிதல் மற்றும் அதற்கு எந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால், செவிலியர்கள் அந்த மருந்துகளை முறையாக வழங்கி தொடர்ந்து நேரம் காலம் பார்க்காமல் நோயாளிகளைப் பராமரித்து குணப்படுத்துவோராக உள்ளனர். அவர்களுக்குப் போதுமான ஊதிய உயர்வு வழங்கி கண்ணியப்படுத்த வேண்டும். இந்திய மருத்துவ சமுதாயம் இன்னும் முழுமையாகக் குணப்படுத்த முடியாத புற்றுநோய், எய்ட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு நவீன மருத்துவ விஞ்ஞான உலகம் மருந்தை கண்டுபிடிக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எல்லாவித நோய்க்கும் தடுப்பூசி மருந்துகளும், நவீன மருத்துவ கருவிகளும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

அனைவருக்கும் தரமான கல்வியும் மருத்துவமும் அரசே இலவசமாக வழங்க வேண்டும் என்பது எனது ஆவல்.