Tuesday, November 29, 2016

செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா?

ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான். தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக்கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலைதளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது.

ஆரம்ப காலங்களில் Selfie எடுப்பதற்கு கையை ஒட்டடை அடிக்கும் கம்பு போல் தூக்கிக் கொண்டு திரிந்தோம், பின்பு Selfie Stick வந்து நம் கை வலியை சற்று குறைத்தது. ஆனால் அதிலும் ஒரே மாதிரியான ஆங்கிளில் படம் எடுக்க முடியும். அதுவும் க்ரூப் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் அனைவரையும் பிரேமுக்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வரவுள்ளது AirSelfie Camera.

உள்ளங்கை அளவே உள்ள இந்த சாதனம் ஒரு பறக்கும் கேமரா(Drone). நம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இதனை கட்டுப்படுத்தி படங்களை நல்ல வைட் ஆங்கிளில் எடுக்கலாம்.

கட்டுமானம் மற்றும் சார்ஜ்:

உறுதியான anodized aluminum case மூலம் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் கேமரா 94.5மிமீ நீளமும், 67.4மிமீ அகலமும், 10.6மிமீ தடிமனும் அளவை கொண்டது. இதன் மொத்த எடையும் 52 கிராம் மட்டுமே.

இதனை மொபைலுடன் பொருத்தும் வகையில் கேஸுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கேஸ் ஐபோன் 6 மற்றும் 6s, ஐபோன் 7 மற்றும் 7s, ஹுவாவே P9 மொபைல் மற்றும் கூகுள் பிக்சல் மொபைல் போன்களுக்கு பொருத்தும். AirSelfie கேமராவை இந்த கேஸில் மொபைலுடன் வைத்தால் போதும் 30 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும். ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் AirSelfie கேமரா 3 நிமிடங்கள் பறக்க இயலும். முழு சார்ஜ் உள்ள மொபைல் மூலம் 20 முறை இந்த AirSelfie கேமராவை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இது போக USB மூலம் நேரடியாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

இதனை எந்த ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனிலும் இயக்கலாம்.

எப்படி பறக்க வைப்பது, படம் எடுப்பது? :

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைலில் AirSelfieக்கான பிரத்யேக இலவச Appஐ தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், அந்த app மூலம் மிக சுலபமாக AirSelfie கேமராவை கட்டுப்படுத்தலாம். 20 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் இதனை இயக்க முடியும். பறக்க விட்டு சரியான ஆங்கிளைத் தேர்ந்தெடுத்ததும் 10 செகன்ட் வரை உள்ள டைமரை செட் செய்து விட்டு உங்கள் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு போட்டாக்கு போஸ் கொடுத்தால் போதுமானது.

இதில் உள்ள 5MP கேமரா வண்ணமயமான HD படங்கள், வீடியோ மற்றும் பனோரமா ஷாட்கள் எடுக்க சிறந்தது. வெளிச்சம் குறைவான இடங்களில் கூட நல்ல தரமான படங்களை இதனை கொண்டு எடுக்க முடியும்.

மெமரி மற்றும் பேட்டரி:

AirSelfie கேமராவில் 4GB பில்ட் இதன் மைக்ரோ SD கார்டுடன் வரவுள்ளது.

260mAh 7.4 லிப்போ பேட்டரி தொடர்ந்து 3 நிமிடம் பறக்க போதுமானது.

சிறப்பம்சங்கள்:

பறக்கும் பொழுது நிலை தடுமாறாமல் சீராக இயங்க கேமராவின் அடிப்பகுதியில் altitude சென்சார் மற்றும் stability கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த வசதியால் வீடியோக்களை சீராக பதிவு செய்ய முடியும்.

இதனை வானில் வேகமாக செலுத்த 4 சுழலும் Brushless மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது, கேமரா நம் கைகளில் பத்திரமாக தரையிறங்கவும், கேமரா பறந்து கொண்டிருக்கும் போது அதனை சுலபமாக கைகளில் பிடிக்கும் விதமாகவும் இந்த இறக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விலை!

2017 மார்ச்சில் வெளியாக உள்ள இந்த AirSelfie கேமரா 300$ வரை விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் 20,000 ரூபாய்.

AirSelfie கேமராவின் அம்சங்களை காண:

ஸ்வைப் மெஷின் பெறுவது எப்படி

மத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் முதல்கட்ட நடவடிக்கையாக 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மத்திய உணவுத் துறையின் கீழ் வரும் இந்திய உணவுக் கழகம், மத்திய உணவு தானிய சேமிப்பு நிறுவனம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே அவற்றின் பரிவர்த்தனைகளில் 99 சதவீதம் அளவுக்கு ரொக்கமில்லாத பரிவர்த்தனையே மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணப்புழக்கம் தட்டுப்பாடு காரணமாக 'கிரெடிட்', 'டெபிட்' கார்டு மூலம் வியாபாரம் மும்முரம் அடைந்து வருவதால், வியாபாரிகள் 'ஸ்வைப் மெஷின்' பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என்பது குறித்து இந்தியன் வங்கி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு:
மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்புழக்கம் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. இதனால் ஓட்டல்கள், பெரிய வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், திரையரங்குகள் உள்பட பல இடங்களில் ‘ஸ்வைப் மெஷின்' மூலம் ‘கிரெடிட்', ‘டெபிட்' கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், பணப்புழக்க தட்டுப்பாடு காரணமாக விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக பெரிய வணிக நிறுவனங்கள் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளையும் கையாண்டு வருகின்றன.
எனவே, காய்கறி-மளிகை கடை, பெட்டி கடை வைத்திருக்கும் சிறு குரு வியாபாரிகள் பார்வையும் தற்போது ‘ஸ்வைப் மெஷின்' பக்கம் திரும்பி உள்ளது. வங்கிகளில் ஸ்வைப் மெஷின் பெறுவதற்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. நாடு முழுவதும் ஸ்வைப் மெஷினுக்கு ‘திடீர்' மவுசு அதிகரித்துள்ளது.
ஸ்வைப் மெஷின் பெறும் நடைமுறை விளக்கம்: இந்தியன் வங்கியின் பார்க் டவுன் உதவி பொதுமேலாளர் எம்.வி.ரமணா ‘ஸ்வைப் மெஷின்' பெறுவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
டயல் அப் (தொலைபேசி இணைப்பு மூலம்), டெஸ்க்டாப் (ஜி.பி.ஆர்.எஸ்.), ஹாண்டு ஹெல்டு (ஜி.பி.ஆர்.எஸ்.), டிஜிட்டல் (ஜி.பி.ஆர்.எஸ்) ஆகிய 4 வகை மாடல்களில் ஸ்வைப் மெஷின்கள் உள்ளன.
இதில் ‘டயல் அப்', ‘டெஸ்க்டாப்', ‘ஹாண்டு ஹெல்டு' ஆகிய மெஷின்களில் பண பரிமாற்றம் குறித்த ரசீது வரும். ‘டிஜிட்டல்' மெஷினில் ரசீது வராது. அதற்கு பதிலாக பண பரிவர்த்தனை விவரம் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். ஆக (குறுந்தகவல்) வந்து சேரும்.
‘டெஸ்க்டாப்', ‘டயல் அப்' மெஷின்கள் மின்சாரம் மூலம் இயங்குகிறது. மற்றவைகள் பேட்டரி மூலம் இயங்குகிறது.

சுவைப் மெஷின் பெற எப்படி விண்ணப்பிப்பது?
ஸ்வைப் மெஷின் கோரி விண்ணப்பிக்கும் வியாபாரிக்கு, எந்த வங்கியில் விண்ணப்பிக்கிறாரோ? அந்த வங்கியில் கண்டிப்பாக அவருக்கு கணக்கு இருக்க வேண்டும். பின்னர் வங்கியில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தில் தொழில் விவரம், வியாபாரியின் பெயர், புகைப்படம், வீடு-கடை முகவரி, தொலைபேசி, செல்போன் எண் மற்றும் கடந்த 3 ஆண்டுகள் கடையின் விற்பனை, லாப-நஷ்டம் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடை சொந்தமானதா? வாடகையா? குத்தகையா? என்பன போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

திரும்பப் பெறுதல்:
கூட்டாண்மை வணிக நிறுவனமாக இருப்பின் யாராவது ஒருவருடைய புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். ஆனால் மற்றவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களையும் அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். விற்பனையை பொறுத்து எத்தனை ஸ்வைப் மெஷின்கள் வேண்டும் என்றாலும் அவர்கள் பெறலாம்.
அதே நேரம் போதிய அளவு விற்பனை இல்லாத கடைகளில் ஸ்வைப் மெஷின்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வணிகர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்ப படிவம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கிருந்து ஸ்வைப் மெஷின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்படும். குறைந்தபட்சம் 20 நாட்களில் இருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் ஸ்வைப் மெஷின்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஸ்வைப் மெஷின் பெற கட்டணமில்லை:
சுவை மெஷின் பெறுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ‘சிம்கார்டு' இணைப்புக்கு மட்டும் 400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மாத வாடகை கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என்று அவர் கூறினார்.

Sunday, November 27, 2016

இந்திய இராணுவத்தின் அதிசயத்தக்க கருவிகள்

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் தேஜஸ்

உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்ணி 5

உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.

*♻பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்♻*

Sunday, November 20, 2016

இன்னும் எத்தனை பேர் சாகவேண்டும் பிரதமரே? -கொதிக்கும் வங்கி ஊழியர்கள்

புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக ஏ.டி.எம் மையங்களிலும் வங்கி வாசல்களிலும் மக்கள் தவம் கிடக்கின்றனர். ' கடந்த பத்து நாட்களில் வங்கி ஊழியர்கள் உள்பட 40 பேர் இறந்துள்ளனர். டிசம்பர் இறுதிக்குள் இன்னும் எத்தனை சாவுகள் நிகழப் போகிறதோ?' என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் வங்கி ஊழியர்கள்.

மத்திய அரசு கடந்த 8-ம் தேதி, ' 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவித்தது. இதனால் அதிர்ந்து போன பொதுமக்கள் தங்கள் கையிருப்பில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்குப் படையெடுத்தனர். வங்கி ஊழியர்களுக்கும் விடுமுறையற்ற வேலைநாட்கள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் பூட்டியே கிடக்கின்றன. அன்றாட செலவுகளுக்குப் பணமில்லாமல், பொதுமக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பால், பெரும் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. மாறாக, வாராக்கடன்களை தள்ளுபடி செய்யும் அரசின் நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. "மருத்துவச் செலவு உள்பட அன்றாட குடும்பச் செலவுகளுக்குக்கூட பணத்தை மாற்ற முடியவில்லை. சில்லறை வர்த்தகம் முடங்கிக் கிடக்கிறது. தொடர் வேலைநாட்களால் வங்கி ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மனச் சோர்வு ஏற்பட்டுள்ளது" என ஆதங்கத்தோடு பேசினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன். தொடர்ந்து நம்மிடம்,

"எது கறுப்புப் பணம் என்பதை எப்படி வரையறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. வங்கிக் கணக்கில் சேரும் பணம் எல்லாம் கறுப்புப் பணம் என்று சொல்ல முடியாது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் சக்ரவர்த்தி சொல்வதைப் போல, 'அரிசியில் கல் இருந்தால், அதை எடுத்துவிட்டுத்தான் பயன்படுத்த முடியும். மாறாக, அரிசியைக் கொட்டிவிட முடியாது'. இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, பொதுமக்கள் மத்தியில் உயிர்ப்பலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது'"என வேதனைப்பட்டவர், "போபால், ஸ்டேட் வங்கிக் கிளையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தொடர்ந்து மூன்று நாட்களாக பணிக்கு வந்து கொண்டிருந்தார். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக, 13-ம் தேதி மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அதேபோல், பஞ்சாப்பில் மகள் திருமணத்துக்காக பணத்தை சேர்த்து வைத்திருந்த சுக்தேவ் சிங் என்பவர், பணத்தை மாற்ற முடியாத வேதனையில் இறந்துவிட்டார். ஒடிசா, சம்பல்பூரில் மருத்துவமனையில் பழைய ரூபாய்களை ஏற்காததால், இரண்டு வயது குழந்தை இறந்துவிட்டது.

புனேவில், துக்காராம் என்ற வங்கி ஊழியர் 16-ம் தேதி மன அழுத்தத்தால் இறந்துவிட்டார். லக்னோவில் 10-ம் தேதி பழைய ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மையங்களில் இருந்து எடுப்பதற்காக விரைந்து சென்ற வாகனம், விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் இறந்தார்கள். மேலும், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பணத்தை எடுத்து வரத் தாமதம் செய்ததால், மது திவாரி என்ற பெண் கணவரால் கொல்லப்பட்டார். இப்படி நாடு முழுவதும் 40 பேர் வரையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். கறுப்புப் பணத்தின் மீதான துல்லியத் தாக்குதல் என்று சொல்லிவிட்டு, அப்பாவி மக்கள் மீது அரசு துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நமது நாட்டில் 'ரா' உள்பட பல புலனாய்வு அமைப்புகள் உள்ளன. அவற்றின் உதவியோடு எங்கே கறுப்புப் பணம் அச்சடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

நாட்டின் மொத்தப் பணத்தில், '400 கோடி ரூபாய் அளவுக்கு போலியான ரூபாய்கள் இருக்கலாம்' என இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. இவ்வளவு குறைந்த தொகைக்காக, ஒட்டுமொத்த சாமானிய மக்களையும் வதைப்பது எந்த வகையில் நியாயமானது? இதுவரையில், வங்கி வாசல்களில் வரிசையில் நின்றதில் நமது மக்களின் நேரம் விரயமாகியிருக்கிறது. வங்கிகளின் அன்றாட பரிவர்த்தனைகள் அடியோடு முடங்கிப் போய்விட்டன. பொதுமக்களின் சேவைக்காகத்தான் வங்கி ஊழியர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களோடு சேர்ந்து அவர்களும் வதைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் வேதனையோடு.

Saturday, November 19, 2016

ரூபாய்க்கு பதில் புதிய பணம் - மிசோரம் மக்கள்

இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் குறித்து விதவிதமாய் செய்திகளும் ஆரூடங்களும் சொல்லப்பட்டு வரும் இந்த வேளையில், செவன் சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் இதை வேறு விதமாக எதிர்கொள்கிறது

ஹாவ்பங், இந்திய-மியான்மர் எல்லையில் இருக்கும் மிசோரம் மாநில கிராமம். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கூடுதலாகவே இங்கு ரூபாய்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம் வங்கிகள்,அஞ்சலங்கள், ஏடிஎம் போன்றவை ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ள மாநிலம் இது. ரூபாய் தட்டுப்பாட்டை அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் பூட்டான் நாட்டு தாளை பயன்படுத்தி சமாளித்து வரும் நிலையில் மிசோரம் மக்கள் கைகளில் எழுதிய தாள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

விவசாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இந்த கிராமத்தில் ரூபாய்தாள்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட பின் 7 நாட்கள் வரை காத்திருந்துள்ளனர். இந்த தேக்க நிலை மாற இன்னும் பல நாட்கள் ஆகும் என தெரியவரவும் தங்கள் ஊருக்குள் மட்டுமே செல்லத்தக்க வகையில் கையெழுத்து தாள்களை பணமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த ஊர்த்தலைவரின் ஒப்புதலோடு இதை நடைமுறைப்படுத்தியுள்ள கிராமத்தினர். 100 மற்றும் 50 ரூபாய்களுக்கான தாள்களை மட்டும் கைகளில் எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர்.

கிராம மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் மளிகைக்கடை, காய்கறி கடை மற்றும் மருந்து கடையிலும் இந்த தாள் ஏற்கப்படும் என கூறுப்பட்டுள்ளன. மேற்படி கடைக்காரர்களும் அந்த தாள்களை பயன்படுத்தி மற்ற கடைகளில் பொருட்களை வாங்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே மிசோரம் மாநிலத்தின் பெரும்பாலான விவசாய கிராமங்களில் "கோலோக் டாவ்" என்கிற ஆளில்லா கடைகள் புழக்கத்தில் உள்ளன. தோட்டங்களை ஒட்டிய தெருக்களில் பொருட்களை வைத்து விட்டு அதற்கான விலையை எழுதி வைத்துவிடுவார்கள். அங்கே ஒரு பாட்டில் இருக்கும். தேவையானவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை அதில் போட்டு விடுவார்கள். மீதி சில்லறை எடுப்பதாக இருந்தாலும் சரியான சில்லறையை எடுத்துக்கொண்டு உரிய பணத்தை அதில் போட்டுவிடுவார்கள். உலகத்திலேயே மிசோரம் கிராமங்களில் மட்டுமே இப்படியான பழக்கம் நடைமுறையில் உள்ளது. முன்பு ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவில் இப்படியான கடைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

-வரவனை செந்தில்