Friday, April 17, 2015

நட்பின் இலக்கணம் இதுதான்...!



சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீஆதி கோரக்கநாத சுவாமி, பட்டாணி சுவாமி திருக்கோயிலில் களை கட்டியது களரி திருவிழா. கடந்த பங்குனி 27-ம் தேதி தொடங்கிய இத்திருவிழா தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் சுமார் 200 வருடம் பழமையானது.

இங்கு கோரக்கநாத சுவாமி என்கிற முனிவரும், அவருடைய இஸ்லாமிய நண்பருமான பட்டாணி சுவாமியும் வணங்கப்படுகின்றனர். ஒரே கோயிலில் இரு மதத்தினர் வணங்கும் நடைமுறை வேறெங்கும் காணுதற்கரிய காட்சி. இது அவ்வூர் மக்களின் சமத்துவத்துக்கான அடையாளம்.
கோரக்கரின் பிறப்பு:

ஒரு கடற்கரை பகுதியில் சிவபெருமானின் உபதேசத்தை மீன் ஒன்று கேட்க, அதன் பயனாய் அந்த மீன் மனித உருவம் பெற்று அவர் மச்சேந்திரர் என்று வணங்கப்பட்டார். சிவஞானம் கொண்ட மச்சேந்திரர் ஒவ்வொரு ஊராக செல்லும்போது உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அடைகிறார். ஒரு வீட்டில் யாசகம் கேட்கிறார். தனக்கு பிச்சை அளித்த பெண்மணி குழந்தை பேறின்றி இருப்பதை அறிந்து கொண்டார். உடனே அந்த பெண்ணின் கையில் சிறிதளவு விபூதியை கொடுத்து அதனை உட்கொண்டால் குழந்தைபேறு அடைவாய் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றார். யாசகம் கேட்கும் பிச்சைக்காரன் சொன்னதை உண்மை என்று நம்புகிறாளே என்று ஊரார் கேலி செய்ய, அந்த விபூதியை அடுப்பறையில் வீசிவிட்டாள் அந்த பெண்.

12வருடங்களுக்கு கழித்து மச்சேந்திரர் மீண்டும் அப்பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் ''எங்கே உன் மகன்?'' என்று கேட்டார். அந்தப் பெண்ணோ நீங்கள் கொடுத்த விபூதியை நான் அடுப்பறையில் வீசிவிட்டதாக சொல்ல, கடும் சினங்கொண்ட மச்சேந்திரர் அடுப்பருகே சென்று கோரக்கர் என்று கூப்பிட 12 வயது பாலகன் ஒருவன் எழுந்து, அவர் அடி பணிந்தான். சுற்றி நின்றவர்கள் யாவரும் விழி விரிய பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுதே அவன் மச்சேந்திரருக்கு சீடனாகி அவர் பின்னாலயே புறப்பட்டு சென்று விட்டான். மச்சேந்திரரிடம் ஞான உபதேசம் பெற்று பல ஊர்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வரும் வழியில் தமிழகத்துக்கு வருகிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆலயமாக வழிபட்டுச் சென்ற கோரக்கருக்கு, ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள திருப்புவனத்தில் பட்டாணி ராவுத்தர் என்ற இஸ்லாமியர் நண்பராகிறார். சாதி மதம் கடந்தது தானே நட்பு. அப்படிபட்ட நட்புக்கு இலக்கணமாக விளங்கிய அவ்விருவரும் ஒன்றாக பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். ஒன்றாகவே ஜீவ சமாதியும் அடைந்தனர். மத பேதம் கடந்த அவர்களது நட்பை போற்றும் வகையில் அவர்களது நினைவாக 200 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் உருவாக்கப்பட்டு, இரு நண்பர்களும் மூலதெய்வங்களாக வணங்கப்படுகின்றனர்.

இக்கோயிலில் களரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. களரி பூஜையில் கோரக்கரின் நண்பனான பட்டாணி ராவுத்தருக்கு இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பூஜையானது நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடத்தபடுகிறது. அப்போது பெண்கள் விரதம் இருந்து கோயில் முன் அமர்ந்து பொங்கல் வைத்தும், ரொட்டி சுட்டு படைத்தும் கோரக்கரையும், பட்டாணி ராவுத்தரையும் வழிபடுகின்றனர்.