Friday, February 14, 2014

மாசி மகம்



திங்கள் முடிசூடி திக்கெல்லாம் நிறைந்து நிற்பதாலோ என்னவோ சந்திரசேகரராகிய ஈசனுக்கு உரிய திருவிழாக்கள் பலவும் பௌர்ணமியை ஒட்டியே நிகழ்த்தப்படுகின்றன.

அதிலும் சில மாதங்களில் வரும் முழுநிலவு நாட்கள் தனிப்பெருமை உடையனவாக இருக்கின்றன.

அந்த வகையில் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மகம் நட்சத்திர நாளில் அமைவதால் மாசிமகம் எனும் பெயரில் தனிச்சிறப்புடன்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெரும் சிறப்புக்குக் காரணம் அன்றைய தினம் பக்தர்களோடு சேர்ந்து பகவானும் நீராடுவதுதான்.

அன்றைய தினம் கடலில் இறைவன் திருமேனியை நீராட்டுவது பெரும்பாலான கடலோர ஆலயங்களில் வழக்கமாக இருக்கிறது. அந்த சமயத்தில் இறைவனோடு அடியவர்களும் சேர்ந்து நீராடிப் பாவங்களைக் கழுவி, இறைவன் அருளில் நனைந்து புண்ணியம் தேடிக் கொள்கின்றனர்.

மாசிமகத்திற்கு அப்படி என்ன பெருமை? அன்று ஆண்டவன் அலைகடலின் கரைக்கு எழுந்தருளுவது ஏன்? அதற்குக் காரணமாக சில சம்பவங்கள் சொல்லப்படுகின்றன புராணங்களில்.

வருணதேவன் ஒருசமயம் பிரம்மஹத்தியினால் பீடிக்கப்பட்டான். அது தன்னை வாட்டாமல் இருக்க, தன் நண்பனான சமுத்திரராஜனை நாடினான். அவன் ஆலேசானைப்படி கடலுக்குள் மூழ்கி மறைந்தான். புதிதாகத் தோன்றும் ஆறு, பல இடங்களில் ஓடி அழுக்காகி, முடிவில் கடலில் கலந்துவிடும் அல்லவா? அப்படிக் கலந்து, மறைந்து வாழ்ந்தார், வருணபகவான்.

எவ்வளவு நாள்தான் அப்படியே இருக்க முடியும்? வருணன் ஒளிந்து கொண்டதால், பூமி வறண்டு போனது, அதனால் உலக உயிர்கள் வாடின. வருந்தின. துடித்தன. அந்தப் பாவமும் வருணனை சேர்ந்தது. பாரமாக வாட்ட ஆரம்பித்தது.

எல்லாப் பாவமும் தீர்ந்து மறுபடியும் தூய்மைபெற பரமேஸ்வரனை வேண்டினான், வருணன். அபயகரம் நீட்டினார் அரன். தூய்மையாகத் தோன்றி மழையாகப் பொய்து பூமியைக் குளிரவைத்தான் வருணன். கதிரவன் துணையால் கடல்நீர் ஆவியாகி, மழையாகி மீண்டும் புதிய ஆற்று வெள்ளமாகப் பாய்வதுபோல் ஜோதிவடிவமான இறைவனின் அருள், வருணனை புதுப்பொலிவுடன் தோன்றச் செய்தது. ஈசன், வருணனின் துயர் தீர்த்து அவனை மறுபடியும் தோன்றச் செய்தது மாசிமகம் ஒன்றில்தான் என்கின்றன புராணங்கள். தன் வருத்தம் தீர்த்த நாளில் இறைவன் தரிசனம் தரவேண்டும் என்றும், அன்றைய தினம் புனித நீர் நிலைகளிலோ, கடலிலோ நீராடுவோரின் பாவங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் எனவும் இறைவனிடம் வேண்டினான் வருணன். பக்தர்கள் கேட்பதைத் தரமறுப்பாரா தணல் நுதலோன்? தந்தார். வாக்களித்தபடி வருணனுக்குக் காட்சிதரவே மாசிமக நாளில் கடலாடச் செல்கிறார், கருணாகரன். இது ஒரு சம்பவம்.

சிவம் பெரிதா? சக்தி பெரிதா என்ற விவாதத்தில் தானே பெரியவள் என நிரூபிக்க நினைத்து பரமனை விட்டு பிரிந்து சென்றாள், பார்வதி, பின்னர் தவறுணர்ந்து திரும்பிவந்தாள். அதனால் ஏற்பட்ட சாபம் நீங்க, அவளை தன் பக்தனான தட்சனின் மகளாகப் பிறக்கச் சொன்னார் மகேசன். (தட்சன் ஆரம்பத்தில் சிறந்த சிவபக்தனாக இருந்தவன். அதன் பிறகே அகந்தை அவனைப் பிடித்தது). மாசிமாத மக நட்சத்திர நாள் ஒன்றில் தட்சன் தன் மனைவி மற்றும் பரிவாரங்களுடன் யமுனையில் நீராட ஆற்றில் மலர்ந்திருந்த தாமரை ஒன்றின்மீது, வலம்புரிச் சங்காக அமர்ந்திருந்தாள் மகேஸ்வரி. தட்சன் கண்டான், எடுத்தான், வலம்புரிச் சங்கு, பெண் குழந்தையானது. இறைவன் தந்த வரம் என்று மகிழ்ந்தான். அன்புடன் வளர்த்தான். அதனால், அம்பிகை அவதரித்த நாள் என்ற பெருமையும் மாசிமகத்திற்குச் சேர்ந்தது.

மாசி மாதத்தில் சூரியன், கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். சிம்ம ராசிக்கு உரிய மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பார். இப்படிப்பட்ட அமைப்பு சிறப்பானது என்று ஜோதிட சாஸ்திரங்களும் சொல்கின்றன.
சில கிரகங்களின் சேர்க்கை நிகழும்போது நீர்நிலைகளில் நீராடுவது ஆயுள், ஆரோக்யத்திற்கு நல்லது என்றும், ஞானத்தை வளர்த்து, அறிவினை விசாலமாக்கும் எனவும் வடநாடுகளிலும் நம்பிக்கை நிலவுகிறது. அதனை ஒட்டியே அங்கு கும்பமேளா நடத்தப்படுகிறது.

கும்பகோணத்திலும் மகாமக நீராடல் வெகு பிரசித்தமானது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமாத மக நட்சத்திர நாளில் குருபகவான் சிம்மராசிக்க வருவார். அந்த நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மக்கள் தங்களில் நீராடிக் கழுவிய பாவச்சுமைகள் நீங்கி புனிதம் பெற கும்பகோணம் மகாமகக் குளத்தில் வந்து நீராடுவதாக ஐதிகம். எனவே அன்று அக்குளத்தில் நீராடுவது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும். 144 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்வது மாமாங்கம்.

திருமால் திருக்கோயில்களிலும் மாசிமாதத்தில் தீர்த்தவாரி நடத்தப்படும். இதற்கான புராணக் காரணம், பாற்கடலில் தோன்றிய பார்கவியை மணந்ததால், பரந்தாமன் கடலரசனின் மாப்பிள்ளை ஆகிறார். அவர் தன் மாமனாரான கடலரசனைக் காணச் செல்லும் நாளே மாசிமகத் தீர்த்தவாரி தினம் என்பார்.

தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரஸ்வதி பொற்றாமரை புட்கரணி தென்னீர்
கோவியோடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தை கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே
என்று நாவுக்கரசரும்

பூமரும் கங்கை தல் புனிதமாம் பெரும்தீர்த்தம் மகாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் எனப் பெரியபுராணமும் கும்பகோணத்தில் நடக்கும் மகாமகத்தினைப் போற்றுவதே இத் திருவிழாவின் பழமைக்கு சான்று.

கடவுள்கள் கடலாடும் நாளாகவும், தீர்த்தங்கள் யாவும் தங்கள் பாவம் நீங்கி மேலும் புனிதம்பெறும் நாளாகவும் கருதப்படும் மாசிமக நாளில் நாமும் நன்னீராடி நல்ல எண்ணங்களுடன் இறைவனை வணங்கி அவனருளால் வாழ்வில் வளமனைத்தும் பெருவோமே..!

Thursday, February 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு முதல் பெண் சாதனையாளர்கள்



1.டில்லியை ஆண்ட முதல் பெண்ணரசி - சுல்தானா ரசியா
2.சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்
3.இந்தியாவின் முதல் பெண் போலிஸ் டி.ஜி.பி. - காஞ்சன் சௌத்ரி
4.முதல் இந்தியப்பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலெட்சுமி
5.46 ஆண்டுகள் எம்.எல்.. பதவி வகித்த முதல் இந்தியப் பெண் - கே.ஆர்.கொரியம்மாள்
6.பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி - லதா மங்கேஸ்கர்
7.புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்
8.வெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண் - பால சரஸ்வதி
9.உலக தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் - அஞ்சு சார்ஜ்
10.சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்-பானு ஆதித்யா
 - வைகை அனிஷ்


பழந்தமிழர் அளவைகள்



ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி. மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள். ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
- சித்தர்கள் இராச்சியம்