Sunday, October 30, 2016

நல்ல நிர்வாகம் கம்பெனி மேனேஜர்

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...
நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

Tuesday, October 18, 2016

வாஷிங் பவுடர் நிர்மா வளர்ந்த கதை


கர்சன்பாய் படேல் தனது மகளை ஒரு கார் விபத்தில் இழந்தார். அவளின் நினைவாக அவர் தொடங்கிய ப்ராண்டை தன் சொந்த குழந்தையை போல பாவித்து வளர்த்தெடுத்துள்ளார் என்றால் மிகையாகாது. ‘சப்கி பசந்த் நிர்மா’ அதாவது ‘எல்லாருடைய விருப்பமும் நிர்மா’ என்ற பொருள் தரும் விளம்பர வாசகத்தை அறியாதோர் இருக்கமுடியாது. வீடு வீடாக சென்று விற்றுவந்த அந்த பொருள் இன்று இந்திய சோப்பு சந்தையில் 20 சதவீத பங்கையும், சலவை சோப்பு சந்தையில் 35 சதவீத பங்கையும் வகிக்கிறது. 

கர்சன்பாய் 1969 இல் நிர்மா எனும் இந்திய சலவை சோப்பு தொழிலை தொடங்கினார். அப்போது வெகு சிலரே இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். அதுவும் பெரும்பாலும் சர்வதேச நிறுவனங்கள் ஆகும். நடுத்தர வர்கம் மற்றும் ஏழை மக்களை குறிவைத்து இருந்த வர்த்தகத்தில், குறைந்த விலையில் சலவை சோப்புக்கான தொழில் வாய்ப்பு அதிகமாக இருந்தது. கர்சன்பாய், சலவை சோப்பை தனது வீட்டின் பின்புறத்தில் தயாரித்து, அகமதாபாத் அருகில் உள்ள கோக்ரா எனும் இடத்தில் விற்றுவந்தார். வீடு வீடாக சென்று ஒரு கிலோ சோப்பை 3 ரூபாய்க்கு விற்றுவந்தார். அப்போது பிரபல ப்ராண்டுகள் ஒரு கிலோ சோப்பை 13 ரூபாய்க்கு விற்றுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
80’ களில் நிர்மா சந்தையில் நீடிக்க எப்படி போராடி வந்தது என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை செய்தி வெளியிட்டது. அப்போதுதான் கர்சன்பாய் ஒரு அற்புதமான ஐடியாவை கொண்டுவந்தார். நிர்மாவை பிரபலப்படுத்த மாபெரும் விளம்பர பிரச்சாரம் ஒன்றை தயார் செய்தார். அதில் வெள்ளை ப்ராக் அணிந்த தனது மகளின் படத்தை போட்டு, மனதை கவரும் பாடல் ஒன்றை தயார் செய்து விளம்பரப்படுத்தினார். அந்த நிர்மா பாடல் இந்தியா முழுதும் பிரபலமாகி மக்கள் அனைவரும் அந்த சோப்பை வாங்க கடைகளில் குவிந்தனர். இருந்த சோப்புகள் விற்றுத்தீர்ந்தது. நிர்மாக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தனது உற்பத்தியை பெருக்கினார் கர்சன்பாய். அந்த வருடம், சலவை சோப்புகளின் விற்பனையில் நிர்மா முதல் இடத்துக்கு சென்றது. அவரின் போட்டியாளரான, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சர்ஃப் சோப்பை காட்டிலும் நிர்மா உயர்ந்த இடத்தில் இருந்தது. 
இந்த ஆண்டு, கர்சன்பாய் LafargeHolcim’ சிமெண்ட் தொழிலை 1.4 பில்லியன் டாலருக்கு வாங்கி, தான் ஒரு தலைசிறந்த தொழிலதிபர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த டீலின் மூலம் ராஜஸ்தான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்மாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 
தொழில்முனைவு என்பது மனதார செய்யும் ஒன்று. கூச்ச சுபாவம் கொண்ட கர்சன்பாய், நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர். நிர்மா இஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பயிற்சி மையத்தை 1995 இல் தொடங்கினார். பின், நிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை 2003 இல் துவக்கினார். 2004 இல் நிர்மாலேப்ஸ் எடுகேஷன் ப்ராஜக்டை தொடங்கி, அதில் தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் வழிக்காட்டும் பணிகளை செய்துவருகிறார். 2010இல் கர்சன்பாய் படேலுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 
கட்டுரை: Think Change India