Friday, May 8, 2020

கிருஷ்ணர் ஏன் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணர் அந்த கீதையை உபதேசித்தது பற்றிய ஒரு சந்தேகத்தை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் எழுப்பினான். மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை சொல்ல ஏன் என்னை தேர்ந்தெடுத்தாய். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். அண்ணன் யுதிஷ்டிரர் இருக்கிறார். ஐவரில் மூத்தவர் தர்ம நீதிகளை உணர்ந்தவர். அண்ணன் பீமன் மிகச் சிறந்த பக்திமான் பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இவர்களை விட்டு என்னை புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக தேர்ந்தேடுத்தது ஏன் என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டன்.

அர்ஜுனா நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. பீஷ்மர் அறங்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் உணர்ந்தவர். சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது கடைப்பிடித்தால் தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்று தெரிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும் போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். எண்ணம் சொல் செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. யுதிஷ்டிரர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. யுதிஷ்டிரர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும் கூட ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அதிகம்.

அர்ஜுனா நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. உன்னைவிட வயதான அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து அவர்களுக்காக நீ என்னிடம் வாதிடுகிறாய். போர்க்களத்திலே நின்றபோதும் உற்றார் உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய். அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும் களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்ய மனவலிமை தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இதெல்லாம் தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள் தனிச்சலுகை எதுவுமில்லை என்றார் கிருஷ்ணர். அர்ஜுனன் அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் காரியங்கள் ஜெயமாகுமா?

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை.

பெரும்பாலும் இந்துக்கள் தேதி, கிழமை, நல்ல நாள், யோகம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள். நல்ல நாள் கிடைத்தால், நல்ல நேரம் கிடைக்காது, அதனால் நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஏதாவது தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்க நாம் பிரம்ம முகூர்த்தத்தைத் தேர்வு செய்யலாம்.

அமாங்க....பிரம்ம முகூர்த்தத்தில் செய்வதாக இருந்தால் நல்ல நாள் பார்த்தால் மட்டும் போதும் நேரம் பார்க்க தேவையில்லை. எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கலாம். இந்த அதிகாலை நேரத்துக்கு அவ்வளவு மகிமை.

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்குப் புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன.

கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான்.

இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விஷேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாகக் காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில்எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம், என எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம். அது கட்டாயம் வெற்றியில் முடியும். கிரக தோஷம், ராகு, கேது தோஷம், களத்திர தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் தம்பதிகளுக்கிடையே பிரிவினை ஏற்படாது, அவர்களின் வாழ்வு சிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது