Tuesday, November 17, 2020

கந்தசஷ்டி விரதம் அபூர்வத் தொகுப்பு

மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர்கண்ட சிறந்த நெறிகளில் குறிப்பிடத்தக்கவை விரதங்கள். `வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’ என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு. பரமனிடத்தில் பக்திகொண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப் போன்று வேறெதுவும் துணைபுரிவதில்லை. இப்படி, இறைவனுடன் நம்மைப் பிணைக்கும் அற்புத விரதங்களில் ஒன்று கந்தசஷ்டி விரதம்.


சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெறவும், குழந்தை வரம், கல்விப் பேறு, தேக ஆரோக்கியம், பொருளாதார வளம் முதலான சகல வரங்களைப் பெற்று மகிழவும், மனதில் வரிக்கும் நற்காரியங்கள் அனைத்தும் கந்தனருளால் நல்லபடி நிறைவேறவும் வேண்டி நாம் கடைப்பிடிக்க வேண்டிய இந்த ஒப்பற்ற விரதம் குறித்து வசிஷ்ட மகரிஷி, முசுகுந்தனுக்கு உபதேசித்துள்ளார்.
ஸ்ரீசுப்ரமணிய கடவுளுக்குரிய விரதங்களில் மிகவும் மகத்தானது கந்தசஷ்டி விரதம் என்பது வசிஷ்டரின் திருவாக்கு. நாமும் அதன் மகத்துவங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளையும் அறிந்துகொள்வோம்.


கந்தசஷ்டி விரத நியதிகள்...
******************************
ஐப்பசி மாதமாகிய துலா மாதத்தில், சுக்ல பட்ச பிரதமை அதாவது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி சஷ்டி திதிநாள் வரை ஆறு நாள்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
இந்த ஆறு நாள்களும் காலையில் நீராடி திருநீறணிந்து, தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணிந்து கும்பத்திலும், பிம்பத்திலும் முருகப்பெருமானை ஸ்தாபித்து வழிபாடு செய்ய வேண்டும்.
திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், சண்முகக்கவசம், குமார ஸ்தவம், முதல்வன் புராண முடிப்பு, கந்தர்கலி வெண்பா, கந்தசஷ்டி கவசம் போன்ற பாமாலைகளைப் பாடி இரவிலும் முருகப்பெருமானைப் பூஜிக்க வேண்டும். வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். அதேபோல் இந்த விரத நாள்களில் கந்தபுராணத்தைப் பாராயணம் செய்வது மிகவும் விசேஷம்.
ஏழாம் நாளான சப்தமி தினத்தில் முருகப்பெருமானை விதிப்படி பூஜித்து, அடியார்களுடன் சேர்ந்து பாரணை செய்தல் வேண்டும்.
விரதம் தொடங்கி ஆறு நாள்களும் உமிழ்நீரையும் உள்ளே விழுங்காதபடி நோன்பு இருப்பது ஒருமுறை. அவ்வாறு இருக்க இயலாதவர்கள் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. உப்புநீர், எலுமிச்சைப் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் போன்றவற்றை இவ்விரதம் இருப்போர் அருந்தக் கூடாது என்பர். கந்தசஷ்டி விரத நாள்களில் திருச்செந்தூருக்குச் சென்று, இந்த முறைப்படி மிகச் சிரத்தையுடன் விரதம் இருக்கும் அன்பர்கள் தற்போதும் உண்டு.
எளிய முறையாக... முதல் ஐந்து நாள்கள் ஒருபொழுது மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிட்டு, கந்தசஷ்டியன்று நாள் முழுக்க உண்ணாநோன்பிருந்து முருகப்பெருமானை வழிபடுவதுடன், அன்று மாலை சூரசம்ஹார வைபவத்தைத் தரிசிப்பதோடு விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் அன்பர்கள்.
எந்த முறையில் விரதம் கடைப்பிடிப்பதாயினும் முருகப்பெருமானுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் உணர்வுடன் பக்தி செய்து வழிபடுவதால், வந்த வினைகளும் வரவிருக்கும் வல்வினைகளும் நம்மைவிட்டு விலகியோடும். கந்தனருளால் நம் வாழ்க்கைச் செழிக்கும்.
ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியன்று சூரசம்ஹாரம் நிகழ்ந்த நாளாகும். நம் உள்ளத்தில் வாழும் - ஆட்சி செய்யும் காமம் முதலான சூரபத்மாதியரை முருகப்பெருமானின் ஞானவேல் அழித்து, ஞானவெற்றி பெற்று வாகை சூடி பேரின்பம் பெறுவதன் குறிப்பே சூரசம்ஹாரத் திருவிளையாடலின் அருள்குறிப்பாகும். அதற்குரிய ஆன்மிக வீரத்தைப் பெற உதவுவது சஷ்டி விரதம் ஆகும். தேவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இழந்த பதவியைப் பெற்றனர். நாமும் கந்தசஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வோம்.


பாம்பன் சுவாமிகள் காட்டும் வழி!
************************************
சஷ்டி வழிபாட்டு முறை குறித்து ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தரும் விளக்கம் அற்புதமானது. அதுபற்றி தெரிந்துகொள்வோமா?
அபிஷேகம்...
மந்திரங்களை முறைப்படி ஓதி முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யத் தொடங்க வேண்டும்.
பால், தயிர், கருப்பஞ்சாறு, இளநீர், நல்ல வாசனை திரவி யங்கள் சேர்க்கப்பட்ட நீர் ஆகியவற்றைக்கொண்டு அபிஷேகிக்கும்போது ஒருமுகப்பட்ட மனதுடன் செய்ய வேண்டும். முருகனுக்கு விருப்பமான பழங்களை அபிஷேகம் செய்தல் விசேஷமானது.
மேலும், அனைவரும் அலங்காரமாகக்கொள்ளும் திருநீறு (விபூதி) அபிஷேகம் செய்து பிறகு தக்க வஸ்திரங் களை அணிவிக்க வேண்டும்.
அலங்காரம்...
மார்பில் வாசனை வீசும் சந்தனக் கலவைகளை மிகுதியாகப் பூசி அலங்காரம் செய்விக்க வேண்டும். மல்லிகை, வில்வம், கடம்பு, அசோகம், செங்கழு நீர், தாமரை முதலான வாசனையுடைய பூக்களைக்கொண்டு தொடுத்த மாலையை அணிவித்து, மஞ்சள் பூசிய அட்சதையை சிறிது தூவ வேண்டும்.
தீப-தூபங்கள் நைவேத்தியங்கள்...
வாசனை மிக்க தூபப் புகையைக் காட்ட வேண்டும். குத்து விளக்கை ஏற்றி பொலியச் செய்தல் வேண்டும்.
வாழைப்பழம், பலாப்பழம், விளாம்பழம், முதிர்ந்த கிச்சிலி (நாரத்தம்பழம்), மாதுளை, அத்தி, மாம்பழம், முந்திரிப்பழம், புளிப்பே இல்லாத இலந்தைப்பழம் போன்ற பலவகைக் கனி களைப் படைக்க வேண்டும்.
எள் உருண்டை, பொரி வடை, அதிரசம், இடியாப்பம், மோதகம் (கொழுக்கட்டை), அடைப் பணியாரம், அவல், பிட்டு, மாவு, தயிர்க்களி (ததியோதனம்), கடலை, பல பயறு வகைகள் முதலான அறுசுவையும் நிரம்பிய நைவேத்தியங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து, முருகப்பெருமானுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய கறி வகைகளைக் கூறுகிறார் பாம்பன் சுவாமிகள்.
காய்கறி வகைகள்...
வெள்ளை நிற பாகற்காய், செவ்வாழைக்காய், நீண்ட அவரைக்காய், கத்திரிக்காய், துவரங்காய், புடலங்காய், பூச்சுணை (பூசணிக்காய்), வெள்ளரிக்காய் ஆகிய காய்களை நன்கு நறுக்கித் திருத்த வேண்டும். அவற்றை பொருத்தமான செப்புக்குடத்திலிட்டு, அடுப்பில் வைத்து பதமாகச் சமைத்துப் படைக்க வேண்டும்.
கீரை வகைகள்...
கீரை வகைகளில் பசலைக்கீரை, பொன்னாம் காணிக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தண்டுகீரை முதலிய யாவையும் செப்புப் பாத்திரத்தில் இட்டு வதக்கி நன்றாக மூடிவைக்க வேண்டும். சிறுமணி அரிசி, மிளகு, சீரகம் ஆகியவற்றைக்கொண்டு ஆக்கிய பொங்கலையும் படைத்து, எல்லாவற்றையும் அழகாக வகைப்படுத்தி, பக்தி சிரத்தையோடு நிவேதித்து, நல்ல பாக்கு, வெற்றிலை வைத்து வாசனைமிக்க மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.


சந்தோஷம் அருளும் சஷ்டி வகுப்பு!
*************************************
திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள் முதலியன அருணகிரிநாத சுவாமிகள் அருளிய நூல்களாகும். `திருவகுப்பு’ எனும் தொகுப்பில் 25 வகுப்புகள் உள்ளன. சீர்பாத வகுப்பு, வேல் வகுப்பு, வேல்வாங்கு வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, சித்து வகுப்பு, புயவகுப்பு முதலான 25 வகுப்புகள் அவை.
அருணகிரிநாத சுவாமிகளை தன் குருவாகக்கொண்டு, முருகப்பெருமான்மீது 6666 பாடல்களை அருளிச்செய்தவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். அவர் பாடியுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றின் கடைசி பாடலிலும் அருணகிரிநாத சுவாமிகளைக் குறிப்பிட்டு பதிகத்தை நிறைவு செய்துள்ளார். இது, அருணகிரியாரிடம் பாம்பன் சுவாமிகள் கொண்டிருந்த பக்தியும் மதிப்பும் என்பதை உணரலாம்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய நூல்களில் குறிப்பிடத்தக்கது சஷ்டி வகுப்பு.
சுவாமிகள் சென்னையில் இருந்தபோது, 1903-ம் ஆண்டு (சோபகிருது வருஷம் ஐப்பசி மாதம்) இதை அருளினார். இப்பாமாலை நான்கு அடிகளில் 64 கண்ணிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
முதல் அடியான 16 கண்ணிகளும் 16 வகை சந்தக் குழிப்பில் அமைந்துள்ளது, அருணகிரிநாதருக்குப் பின் சந்தப்பா பாடும் அவரது அருளாற்றலுக்கு எடுத்துக் காட்டாகும்.
இந்தச் சஷ்டி வகுப்பின் மூன்றாம் அடியிலுள்ள 16 கண்ணிகளில் (அதாவது கண்ணி 33 முதல் 48 வரை), சஷ்டித் திருநாளில் குமரனுக்கு நிகழ்த்த வேண்டிய அபிஷேகம், அலங்காரம், நிவேதனம், அர்ச்சனை, ஆராதனை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அடுத்த 16 கண்ணிகளில் (49 முதல் 64 வரை ) முருகன் உலா வருவதை வர்ணிக்கிறார். இந்திரன், பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள், முனிவர்கள் சூழ்ந்து வர, பலவகை வாத்தியங்கள் முழங்க, வெண்குடை, சாமரம், ஆலவட்டம் முதலிய அரச சின்னங்களோடு உலாவரும் குமரக்கடவுள், கந்தசஷ்டியன்று பூசிக்கும் அன்பர் திருவுள்ளத்தில் எழுந்தருளியிருப்பதைக் கூறி, நிறைவாக தம்மை ஆதரித்து ஆண்டருள வேண்டுகிறார்.


சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!
********************************************
`சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்றொரு பழமொழி நம் நாட்டில் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால், பானையில் ஒரு பொருள் இருந்தால்தான் அதை அகப்பையில் எடுக்க முடியும் என்று பொருள்கொள்ளத் தோன்றும். இதில் கந்தசஷ்டி தத்துவமே அடங்கியிருப்பதை உணரும்போது நமக்கு ஆச்சர்யம் ஏற்படும். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் எனும் மகான் இதற்கு
அருமையான விளக்கம் கொடுப்பார்.
சஷ்டி என்பது தமிழில் ‘சட்டி’ என வரும். ‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் மகப்பேறு வாய்க்கும்’ எனும் நுட்பமான பொருள் அந்த வாக்கியத்தில் அடங்கியுள்ளது.
'சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் - இதய குகையில் இறைவன் குடிகொள்வான்' என்று பொருள் கொள்வதும் சிறப்புடையதாகும்.
தமிழாசிரியர் ஒருவர் தம் மாணவருடன் வீதியில் நடந்துகொண்டிருந்தார். அந்த வீதியில் குயவர்கள் பானை செய்து கொண்டிருந்தார்கள். அங்குள்ள குடம், சட்டி ஆகியவற்றைப் பார்த்ததும் தமிழாசிரியர் தன் மாணவனிடம் விளையாட்டாக, ‘குடத்தைப் பிடித்தவன் சட்டியை நோக்கக் குறையில்லையே’ எனும் ஓர் ஈற்றடியை உள்ளத்தில் உருவாக்கி அதை அமைத்து ஒரு செய்யுள் இயற்றும்படி கட்டளையிட்டார். மாணவரும் அந்த ஈற்றடிக்கு ஏற்ப செய்யுள் அமைத்துப்பாட முற்பட்டார்.
கந்தர் சஷ்டி விரதத்தைக் கடைப் பிடித்து முருகனை வழிபட்டால், நமக்கு எல்லா நலன்களும் உண்டாகும் எனும் பொருளில் செய்யுளைப் பாடினார்.
கடத்தைப் பழித்துக் களபம்
திமிர்ந்து கனகமணி
வடத்தைத் தரித்து சுணங்கு
படர்ந் தொளிர் வள்ளிதன
தடத்தைத் தழுவும் தனது
மலர்க்கைத் தலத்தினில் குக்
குடத்தைப் பிடித்தவன் சட்டியை
நோக்கக் குறைவில்லையே
- என்பதுதான் அந்தப் பாடல்.
குக்குடத்தைப் (கோழிக் கொடியை) பிடித்தவன் முருகன். அவனுக்குரிய சஷ்டி விரதத்தை நோக்க (அனுஷ்டித்து வழிபட), குறைவில்லை (நமக்குக் குறையேதும் நேராது) எனும் அழகிய இனிய கருத்தினைப் புலப்படுத்தி அமைந்த மேற்காணும் செய்யுளைப் படித்து நாமும் இன்புறுவோம்.


குழந்தைகளைக் காக்கும் சஷ்டி தேவி!
*****************************************
சஷ்டி தேவி எனும் அம்பிகை தெய்வானை அம்மையின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். ஆறில் ஒரு கூறாகத் தோன்றியதால் இந்த தேவி `சஷ்டி தேவி' என அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் வரலாறு தேவி பாகவதத்தில் விரிவாகக் கூறப்படுகிறது. இத்தேவியின் விசேஷ குணமானது பெற்ற தாய் தன் குழந்தையைக் கவனிக்காது இருக்கும் காலத்திலும், அக்குழந்தையைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நிறைந்தவள் என்பதுதான்.
பிரியவிரதன் என்ற அரசன் ஒருவன் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் வாழ்ந்து வந்தான். இல்லற வாழ்வில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. தினமும் பிரம்மதேவனை வழிபாடு செய்து வந்தான். அவரது விருப்பப்படியும், அறிவுரைப்படியும் மாலினி என்னும் பெயருடைய நங்கையைத் திருமணம் செய்து கொண்டான். மணமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கவில்லை.
எனவே, காசியப முனிவரைக்கொண்டு பிள்ளைப்பேறு வரம் வேண்டி ‘புத்திர காமேஷ்டி என்னும் யாகத்தைச் செய்தான் பிரியவிரதன். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மாலினிக்குப் பிள்ளைப்பேறு கிடைக்கப்பெற்றது. ஆனால், அது குறைப் பிரசவமாகி, குழந்தை உருத்தெரியாமல் இறந்துவிட்டது. இதனால் பெரிதும் மனவேதனை அடைந்த பிரிய விரதன், தானும் மரணத்தைத் தழுவ முற்பட்டான். அப்போது ஒரு தெய்வப் பெண்மணி அங்கு தோன்றி உயிரற்ற அக்குழந்தையின் உடலைத் தொட, அக்குழந்தை உயிர் பெற்று அழத் தொடங்கியது.
இந்த அதிசயத்தைக் கண்ட பிரியவிரதன், ‘`அம்மையே! என் குழந்தைக்கு உயிர்கொடுத்த தாங்கள் யார்?'' என்று கேட்டான் ‘`என் பெயர் சஷ்டிதேவி. தேவசேனையின் அம்சமான நான் பிரம்மாவின் விருப்பமான மகள். குழந்தைகளை மிகவும் விரும்பி பாதுகாப்பேன் நான். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அதை அளிப்பவள். கணவன்மார்களுக்கு இல்லற இன்பத்தையும் செல்வச் செழிப்பையும் கொடுப்பவள். மாங்கல்ய பலத்தை வேண்டுவோருக்கு அதை அளிப்பவள்” என்று விளக்கிக் கூறியவள், உயிர்ப்பெற்ற அக்குழந்தைக்கு ‘சுவிரதன்’ என்று பெயரும் சூட்டினாள்.
தேவிபாகவதம் சஷ்டி தேவியின் பெருமைகளைப் பற்றி மேலும் குறிப்பிடுகிறது. குழந்தைகளின் அருகிலேயே இருந்து கொண்டு அதற்கு உடல்நலத்தையும், வளமான வாழ்வையும் அருளும் தேவி இவள். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி மகிழ்வாள். மாத்ரு தேவதைகள் எட்டு பேரில் முக்கியமானவள் சஷ்டி தேவி. குழந்தை பிறந்த ஆறாம் நாளிலும், 21-ம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபடல் வேண்டும் என்று தேவி பாகவதம் குறிப்பிடுகிறது.
தேவயானை அம்மையின் ஆறில் ஒரு கூறு சஷ்டி தேவி என்பதால், அம்மையின் சஹஸ்ரநாமாவளியில் ‘ஓம் ஷஷ்டியை நம: ஓம் ஷஷ்டீச்வர்யை நம: ஓம் ஷஷ்டி தேவ்யை நம:' என்னும் நாமாக்களால் அர்ச்சிக்கப்படுகிறாள்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், தான் அருளிய குமார ஸ்தவம் என்னும் தோத்திரத்தில் `சஷ்டி தேவியின் பதி' என்ற பொருளில் `ஓம் ஷஷ்டீபதயே நமோநம:' என்று முருகனைப் போற்றுவார்.
ஆயுஷ்யஹோம மந்திரங்களில் ஆயுஷ்ய சூக்தத்தில் ‘சஷ்டி’ என்று சொன்னாலே ஆயுள் விருத்தியாகும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் வரும் ‘இந்த்ரசேனா’ எனும் பெண் தெய்வம் தெய்வயானை (தேவசேனா) என்று அறியலாம்.


ஷட் கோணம்
***************
முருகனுக்குரிய சக்ரம் - யந்திரம் ஷட்கோணம் (அறுகோணச் சக்ரம்). மஹா ஷட்கோணச் சக்ரமும் உண்டு. ஆசனம் அல்லது இருப்பிடம் என்பதை `கோணம்' என்று கூறுவார்கள். ஆசனங்களில் விமலாசனம் என்பது அறு கோண வடிவுடையது.
அறுகோண சக்ரத்தில் சிவன், நாராயணன், சக்தி, கணபதி, சூரியன், பைரவர் ஆகிய பீடாதிபர்களைக் குறிப்பிட்டு வணங்குவர். அறுகோணச் சக்ரம் இருக்கும் வீட்டைத் துன்பங்கள் அணுகாது.


ஷட் கோசம்
************
வேதங்களின் அங்கங்களாகக் கருதப்படும் சீட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிஷம், கல்பம் என்பன அறுவகை சாத்திரங்கள். இந்த ஆறு சாத்திரங்களையும் தோற்றுவித்தருளியவர் குகப்பெருமான் என்பது பாம்பன் சுவாமிகள் கொள்கை.
ஷட் கோசம் என்பது முருகனுக்கு உகந்த ஆறு அருள் நூல்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்பனவாகும். கோசம் என்பதற்கு புண்ணியத்தலங்கள் என்றும் பொருள் கூறுவர். அவ்வகையில் ஆறு தலங்கள் - ஷட்கோசங்கள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி (பழநி), திருஏரகம் (சுவாமிமலை) குன்று தோறாடல் (திருத்தணிகை), பழமுதிர்ச்சோலை.


வினைகள் தீர்க்கும் வேல் வகுப்பு!
************************************
அருணகிரிநாதர் அருளிச்செய்த இப்பாடலை கந்தசஷ்டி விரத நாள்களில் பாடி, முருகனை வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்க வரம் ஆகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
இடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்க அருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினைசாடும்
சுடர்ப்பரிதி ஒளிப்ப நிலவொழுக்குமதி
ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்கொர்துணை ஆகும்
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழும் அறத்தை நிலைகாணும்
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்கு நிகர் ஆகும்
தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின்உண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்கும் எனதிடத்தும் ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு கடுத்திரவு பகற்றுணைய தாகும்
சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும்
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டின் இடை பறக்கஅற விசைத்ததிர ஓடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்
`திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்துகுகன் வேலே!'
குறிப்பு: இப்பாடல் ஒவ்வோர் அடியின் முடிவிலும் `திருத்தணியில்' எனத் தொடங்கும் கடைசி அடி முழுவதையும் கூறுவது வழக்கம்

நன்றி 

Swami Sadasivananda Sarasvathi

Tuesday, November 10, 2020

சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப்பட்டுள்ளதா?

தீபாவளி

தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
"ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. ...
*"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:*
*உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்"*
என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது.
அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும்.
அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி.
'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை.
இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம்.
காரணம் என்ன? "பித்ரூணாம்" என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது.
பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள்.
இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக
"ப்ரதோஷ-காலத்தில் *"உல்காதானம்"* செய்வோம்.
உல்கா=நெருப்புடன்-கூடிய-கட்டை; (தற்காலத்தில்=மத்தாப்பு)
மேலும் மூன்று நாட்களும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,
நீராஜிதோமஹாலக்ஷ்மீ மர்ச்சயன்ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதிஸ்ம்ர ௭ன்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

இலையில் சாப்பாடு - அறிவியல் உண்மை

ஐயா, சாப்பிட வாங்க...என மாணவர்கள் ஆசிரியரை அழைத்தனர். என்னடா , இன்னிக்கு விசேஷம்? என்றவாறே தனது அறைக்குள் மதிய உணவு உண்பதற்கு உள்ளே நுழைந்தார் ஆசிரியர்.
அப்பொழுது ஓர் மாணவன் இலையை மாத்திப் போடவே அதனைக் கண்ட ஆசிரியர், இலையை இப்படி போடக்கூடாது என வசதியாக இலையை போட்டு கொண்டார்.
ஐயா, நான் இலை போட்ட முறை தப்பா ? எப்படி போட்டால் என்ன ஐயா... இலையில் தானே சாப்பாடு போடப் போறேன் என்றான் மாணவன். இதற்கு ஏதாவது சடங்கு, சம்பிரதாயம் இருக்கா ஐயா?..
சடங்கெல்லாம் ஒன்றும் கிடையாது..ஆனால், ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது என்று கூறியவாறே வாழையிலையில் நீர் தெளித்து இலையை நன்கு சுத்தப்படுத்தினார்.
ஐயா தண்ணீரில் கழுவியது தான் என்றான் மாணவன்.
நாம் இலையில் தண்ணீர் விட்டாலே கழுவியதாகட எண்ணக்கூடாது...அதில் படிந்திருக்கும் தூசும் சரி , பறவைகளின் எச்சமும் சரி எளிதில் நீங்காது. எப்பொழுது இலையை போட்டாலும் தண்ணீர் வைத்த பிறகு விருந்தினர் அமர்ந்து இலையை கழுவிய பிறகுதான் உணவு பரிமாற வேண்டும். இதனால் விருந்தினர் திருப்தியாக உண்பார்கள் உணவு வீணாகாது,. சரியா.. ?
அது சரி ஐயா , இலையை ஏன் மாத்திப் போட்டுக்கிட்டிங்க ?
சொல்றேன். நுனி இலை இடது பக்கமும் , வலது பக்கம் அடி இலை இருக்க வேண்டும். சாப்பிடும் பகுதி இலை அகலமாக இருப்பது மட்டுமல்லாமல் முற்றி இருப்பதால் சூடாக சோறு வைத்தாலும் வெந்து போகாது. நம் எதிர் பகுதியில் பதார்த்தஙகளை வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு வலது கை உபயோகிப்பதால் எளிதில் சாப்பிட ஏதுவாக இருக்கும் என்றார். கொழுந்து இலையில் சூடாக சாப்பாடு வைத்தால் இலையானது வெந்து உணவோடு சாப்பிட நேரும் என்றார் ஆசிரியர்.
ஐயா , சாப்பாடு வைக்கட்டுங்களா..
இனிப்பை முதலில் வை என்றார் ஆசிரியர்.
ஏன் ஐயா..?
விருந்தின் போது முதலில் இனிப்பைச் சாப்பிடுவதால் நம் வாயிலிருந்து உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் தான் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாக உதவும். சாப்பிடுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் நீர் அருந்த வேண்டும். சாப்பிட்டு முடித்து சுமார்15 நிமிடத்திற்கு பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இடையில் நீர் அருந்தக்கூடாது. அவ்வாறு அருந்தினால் உமிழ்நீர் சுரப்பது நின்று வயிற்று கோளாறு ஏற்படும்.
சரிங்க ஐயா ரசம் போடட்டுமா ? என்றான் மாணவன்.
பொறு..முதலில் சாம்பார் ,அடுத்து குழம்பு, ரசம் போட்டு , பாயாசம் பரிமாறிய பிறகு மோர் போட்டு சாப்பிட வேண்டும்.
' மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் '
முன் உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ணும் பழக்கமுடையோருக்கு வாழ்நாளில் மருந்து உண்ண வேண்டிய அலசியம் இராது என வள்ளுவப் பெருமான் கூறுகிறார்.
திட உணவு அரை வயிறும் , திரவ உணவான நீர் , பால் , மோர் கால வயிறும் , மீதம் கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். காலை வேளையில் அரசனை போலவும், மதியம் வீரன் போலவும் , இரவில் ஏழை போல அளவோடு உண்ண வேண்டும் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர் என்றார் ஆசிரியர்.
விருந்தோம்பலில் இவ்வளவு விஷயமிருக்கா ஐயா என்றான் மாணவன்.
இன்னும் இருக்கு. சரியாக உணவு உண்ணாமல் போனால் குடற்புண் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சாப்பிடவிட்டால் வயிற்றில் ஹைடரோ குளோரிக் அமிலம் உற்பத்தியாகி உடலை விட்டு வெளியேறாமல் தொந்தி விழ காரணமாகிறது. நமக்கு ஆரோக்கியம் குன்ற இதுவும் ஒரு காரணமாகும். விருந்தின் போது ஆறு சுவையான வகையில் பரிமாறப்பட வேண்டும். விருந்தில் பரிமாறப்படும் உணவில் இருக்கிற கறிவேப்பிலை ,
கொத்தமல்லித் தழை என ஒதுக்காமல சாப்பிட வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் , பூண்டு எதையும் ஒதுக்காமல் உணவோடு சேர்த்து நொறுங்க தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். விருந்து முடிந்த பின் இலையை நல் விருந்து என்றால் நம் பக்கமாக மூட வேண்டும். கெட்ட காரிய விருந்து என்றால் , வேண்டாமென்பது போல எதிர்புறமாக மூட வேண்டும். இது குறிப்பால் உணர்த்தும் முறை. நம் முன்னோர்கள் வகுத்த வழி.
அருமை ஐயா...இதுதானா இன்னும் இருக்கா ஐயா . .
அவசரப்படாதே..விருந்தை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்ண வேண்டும். பூமியின் ஈர்ப்பு சக்தியால் காலை மடக்கி சம்மணமிட்டு சுக ஆசனத்தில் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். விருந்துக்கு பிறகு , தாம்பூலம் தரிப்பார்கள்.
தாம்பூலம்னா என்ன ஐயா?
அதுவா வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு சேர்ந்தது தான் தாம்பூலம். இது ஜீரணமாவதற்கு
அருமையான மருத்துவம். பாக்கில் கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தையும் , வெற்றிலையில் உள்ள காம்பை நீக்கிட அதிலுள்ள உரைப்பு கபத்தையும் , சண்ணாம்பிலுள்ள காரம் வாதத்தையும் போக்கும் தன்மையுடையது. அதனால தான் வெற்றிலைச் செல்வம் என கூறுகின்றனர். புகையிலையை எக்காரணத்தை கொண்டும் சேர்க்க கூடாது , போதுமா?
அருமை ஐயா.. நீங்கள் சாப்பிடாமலே விவரமாக சொல்லி விட்டீர்கள்.. இனி நீங்கள் சாப்பிடுங்கள் ஐயா, என்றான் மாணவன். அது சரி ஐயா...வயதானவர்கள் மட்டுமே தாம்பூலம் தரிக்கிறார்கள்...பல பேர் போடுவதில்லை ஐயா...என் போன்றோர் வெற்றிலை பாக்கு போடுவதில்லை ஐயா...
நல்ல கேள்வி ! இளையோர் ஓடியாடி விளையாடுவதால் எளிதில் செரிக்கும். முதியோர்களால் இயலாத காரணத்தால் தான் தாம்பூலம் தரிக்கிறார்கள்...புரிந்ததா ?
அருமையோ அருமை ஐயா. பள்ளியில் படிக்கும் பாடத்தை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் , இது போன்ற சமூக அனுபவங்களின் பாடத்தை உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது ஐயா... நன்றி ஐயா..
விருந்தோம்பல் என்பது மிகப்பெரிய கலை. அதை எவரும் முறையாக பின் பற்றுவதில்லை எனகூறியவாறு பேசாமல் உணவருந்தினார் ஆசிரியர்.

நன்றி -

Sunday, November 1, 2020

உங்களுக்கு தெரிந்து நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அரசாணை எண் : 540-ன் கீழ் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு.
அனுப்புனர் :
உங்கள் முகவரி
பெறுநர் :- வட்டாட்சியர் அவர்கள்,
...... வட்டம்.......மாவட்டம்
பொருள் : அரசுக்குச் சொந்தமான வருவாய்த்துறை அரசாணை எண் : 540 -ன் படி அகற்றிய பொதுமக்கள் பயன் பெற செய்ய கோருதல்
பார்வை : அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை அகற்றவும் கீழ்க்காணும் சட்டங்களின் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
1.தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905
2.தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
3.தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டம் 1958
4.தமிழ்நாடு பொது கட்டிடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975
5.தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994
6.தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் சட்டம் 2001
7.தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007
8.அரசாணை (நிலை) எண் 41 வருவாய் துறை நாள்: 20.01.1987
9.அரசாணை (நிலை) எண் 186 வருவாய் துறை நாள்: 29.04.2003
10.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை என் 20186-2000 ல் வெளியிட்ட தீர்ப்பின்படியும்,
11.மாண்புமிகு உச்ச நீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு எண் 3109-2011 மற்றும் சிவில் மேல்முறையீட்டு எண் 1132-2011ஆகியவற்றின் மீது வழங்கப்பட்ட உத்தரவுகளின்படியும்,
12.மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 மற்றும் பலவகை மனு எண் 1-2013 ன் மீது 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புரையின் படியும்,
13.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 ன் மீது 08.10.2014 ன் படி வழங்கப்பட்ட உத்தரவின்படி அரசாணை (நிலை) எண் 540 வருவாய் (நி.மு.6(2) ) துறை நாள் 04.12.2014 ன் படியும்,
14.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 4614 -2015 இன் மீது 31.03.2015 அன்று வழங்கிய தீர்ப்புரையின்படியும்,
15.அரசாணை (நிலை) எண் 148 வருவாய் (நி.மு. 6(2) ) துறை நாள் 24.03.2016 ன் படியும்,
_________________ மாவட்டம் , _____________ வட்டம் , ______________ கிராமத்தில் உள்ள சர்வே எண் ______-ல் உள்ள __________ பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கும் நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இது ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசாணை எண் 540 -ன் படி ____________ மீட்டு தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீண்டகால நீர்நிலை என்பதால் ஏரி குளங்களை மற்றும் அரசு சொத்துக்களை ஆக்கிரமிக்க அரசு அனுமதிக்கக்கூடாது என 30.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு S.K. கவுல் நீதியரசர் திரு. சத்தியநாராணா நீதியரசர் திரு. சிவஞானம் ஆகியோர் அமர்வு உத்தரவில் W.P.NO 1294/2009ல் கூறியுள்ளதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
இந்தநிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பார்வை 5-ல் காணும் அரசாணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வட்டாட்சியருக்கு மனு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் நீர் வழி பாதைகளை உள்ள ஆக்கிரமிப்புகளை 1950ம் ஆண்டுக்கு முன் உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோருகிறேன்.
அரசாணை 540-ன் படி 60 தினங்களுக்குள் முழுமையாக அகற்றி நிலத்தடி நீர்மட்ட உயர்வும் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்து அந்நீர் நிலைகளை பொதுமக்கள் கால்நடைகள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை பதிவஞ்சலில் எனக்கு அளிக்குமாறு பொது நலம் கருதி கோருகின்றேன்.
தவறும் பட்சத்தில் உரிய நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் சாசன பிரிவு 51A ன் படிஇயற்கை வளங்களை மீட்டு பேணிக்காப்பது கடமையாக கருதுகிறேன்.
இப்படிக்கு.
60 நாட்களில் நடவடிக்கை இல்லையெனில் முதல் மேல் முறையீடு கோட்டாட்சியருக்கும், அடுத்த 30 நாட்களில் நடவடிக்கை இல்லையனில் இரண்டாம் மேல் முறையீடு மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை ( Writ) வழக்கு

நன்றி
- அம்பத்தூர் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம்.