Sunday, January 11, 2015

அகத்தி

அகத்தி என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. உடலின் உட்புற உஷ்ணத்தைத் தணிப்பதால், அகம்+தீ=அகத்தீ என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர். பலதரப்பட்ட மண்வகைகளிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது இம்மரம். ஆனாலும், கரிசல் மண் இதற்கு மிகவும் ஏற்றது. மிக வேகமாக வளரும் தன்மையுடையது. இது 6 முதல் 9 மீட்டர் உயரம் வரை வளரும். இதில் சாளை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிகப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என அழைக்கப்படுகிறது.
இதன் இலைகள் வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றுகிறது. மேலும், பித்தம், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும் தன்மையுடையதாக இருப்பதால் இதை தோட்டங்களில் பயிராக வளர்க்கின்றனர். வெற்றிலை, மிளகு தோட்டங்களில் கொடிகளின் தாங்கியாக (ஊடுபயிராகவும்) இது வளர்க்கப்படுகிறது. இதன் விதைகளை 30க்கு 30 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த ஒரு வருடத்தில் மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். இதில் 33 சதவீதம் கச்சாபுரதம் உள்ளது. வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடும் போது அகத்தி கீரையைச் சாப்பிடக் கூடாது என்பார்கள். காரணம், அகத்தி மருந்தின் தன்மையைக் குறைத்துவிடும்.
இம்மரத்தின் பட்டையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் பட்டையிலிருந்து பெறப்படும் சாறு (டானின்) தயாரிக்க தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது. அகத்தி இலையை ஆடுகள் விரும்பி உண்கின்றன. இந்தியாவில் அசாம், வங்காளம், பஞ்சாப், ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டில் பரவலாக இது பயிர் செய்யப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் செஸ்பானியா க்ரான்டிஃப்ளோரா (Sesbania grandiflora) என்பதாகும்.

No comments:

Post a Comment