Monday, May 18, 2015

சித்தார்த்தன் - நோபல் பரிசு பெற்ற கதை!

சித்தார்த்தனும், கோவிந்தனும் இணைபிரியா நண்பர்கள். சித்தார்த்தன் சிறுவயதிலேயே தத்துவங்களில் பலமை பெற்று, விவாதங்களிலும் ஈடுபட ஆரம்பித்தான். கோவிந்தனும் அவனை போலவே சிந்திக்கவும், தியானங்கள் செய்யவும் பழகிக்கொண்டான். சித்தார்த்தனின் நிழலாய் அவனை பின்தொடரவும் செய்தான்.
அறிவில் சிறந்து விளங்கிய தன் மகனை பார்த்து சித்தார்த்தனின் தந்தை அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். ஒருநாள் சமணத்துறவிகள் மூன்று பேர் தன்னை கடந்து போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்தன். உடனே அவனுக்கு சமணத்துறவியாகும் விருப்பம் வந்துவிட்டது. இதை கேட்டு கோவிந்தன் அதிர்ச்சியடைந் தான்.
சித்தார்த்தனின் முடிவுக்கு அவன் தந்தை உடனடியாக அனுமதி அளிக்கவில்லை. மகனின் உறுதியை பார்த்து தவிர்க்க முடியாமல் தன் கலங்கிய கண்களுடன் விடைகொடுத்தார். 
சித்தார்த்தன் மகிழ்ச்சியோடு விடைபெற்றான். அவனது உயிர் நண்பனான கோவிந்தனும் அவன்கூடவே சென்றான். இருவரும் சமண மதத்தில் இளந்துறவிகளாக சேர்த்து கொள்ளப் பட்டனர். பசியை அடக்கி சித்தார்த்தன் தியானம் செய்வதை பார்த்த சமணத்துறவிகள் அவனை பாராட்டினர். ஆனால் அவனுக்கோ தியானத்திலும் மனநிறைவு கிடைக்கவில்லை. அவனுக்குள் வாழ்க்கையை பற்றி தீராத கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன. அந்த கேள்விகளுக்கு சமணத்துறவிகளால் பதிலளிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவன் இழந்துவிட்டான்.
இந்நிலையில் சித்தார்த்தனும், கோவிந்தனும் கௌதம புத்தரை பற்றி கேள்விப்பட்டார்கள். (புத்தரின் இயற்பெயரும்கூட சித்தார்த்தன்தான். அவர் வேறு, இவன் வேறு) அறிவுப்பசிக்கு அவரிடம் சரியான தீனி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரை பார்க்க இருவரும் கிளம்பினர். துறவிகளின் கூட்டத்தில் புத்தரும் இருந்தார். மற்ற துறவிகளை போலவே அவரும் பிச்சை எடுத்துதான் உண்டார். அவரது உபதேசங்களை கேட்ட கோவிந்தன் புத்த மதத்தில் இணைந்தான். ஆனால் சித்தார்த்தனுக்கு புத்தரின் உபதேசங்களில் மனம் லயிக்கவில்லை. அவரோடும் விவாதங்கள் புரிந்தான். 'நான்' என்ற அகந்தையில் இருந்து அவனால் விடுபட முடியவில்லை. 
பிறகு கோவிந்தனுக்கு வாழ்த்து கூறிவிட்டு அங்கிருந்தும் கிளம்பினான்.
மனம்போன போக்கில் அலைந்து திரிந்தான். பயணத்தின் நடுவே அவன் ஒரு ஆற்றினை கடக்கவேண்டி இருந்தது. தோணியில் ஏறி மறுகரையை அடைந்தான். ஆனால் தோணிக்கு கூலி கொடுக்க சித்தார்த்தனிடம் எதுவுமே இல்லை.
தோணிக்காரனோ, ''இப்போது வேண்டாம். என்றைக்காவது ஒருநாள் எனக்கு கொடுப்பீர்கள்'' என்று புன்னகை செய்தான். சித்தார்த்தனுக்கு தோணிக்காரனின் பேச்சு ஆச்சர்யமாக இருந்தது. புதிர் விலகாமலே நகரை நோக்கி நடந்தான்.
நகரில் அலைந்து திரிந்த சித்தார்த்தனுக்கு துறவு வாழ்க்கை கசந்துபோய், செல்வந்தராகும் ஆசை வந்தது. ஒரு வணிகனிடம் உதவியாளனாய் சேர்ந்தான். அவனது திறமைகளின் காரணமாக, விரைவிலேயே ஒரு பெரும் வணிகனாக உயர்ந்தான். குவிந்த பணத்தை இஷ்டத்துக்கும் செலவழித்தான். அருந்தக்கூடாத பானங்களை அருந்தினான். சூதாட்டங்களில் கலந்துகொண்டு பணத்தை அள்ளி இறைத்தான். கொண்டாடி கூத்தாடி வாழ்ந்த வாழ்க்கை இறுதியாக வறுமையில் முடிந்தது. மீண்டும் அவன் துறவியாக அலைய ஆரம்பித்தான்.
முன்பு ஒரு தடவை அவன் கடந்துபோன நதியை இப்போதும் கடக்கவேண்டியிருந்தது. முதல் தடவையை போலவே இந்த தடவையும் தோணிக்காரனுக்கு கொடுப்பதற்கு அவனிடம் ஒன்றுமில்லை. 
சித்தார்த்தனை பார்த்த தோணிக்காரன் அவனை அடையாளம் கண்டுகொண்டான். சித்தார்த்தனை விருந்தாளியாக தன் குடிசைக்குஅழைத்துப் போனான்.அந்தஆற்றங்கரையும், தோணிப்பயணமும் சித்தார்த்தனுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. அவன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டான். இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த தோணிக்காரன் எந்த குழப்பங்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். மனித வாழ்க்கையை பற்றிய எல்லா கேள்விகளுக்கும் அவனால் தெளிவாக பதில் சொல்ல முடிந்தது. உடனே சித்தார்த்தன் தோணிக்காரனின் சீடனாகிவிட்டான்.
ஆனால் தோணிக்காரனோ, ''என்னிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை ஆறுதான் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுத்தது. நீ அதனிடமே கற்றுக்கொள்'' என்றான்.
சித்தார்த்தனும், தோணிக்காரனோடு இணைந்து பயணிகளை அக்கரைக்கும், இக்கரைக்கும் கொண்டு சென்றான். ஒருநாள் தோணிக்காரன் சித்தார்த்தனிடம் விடைபெற்று விட்டு காட்டிற்குள் சென்றுவிட்டான்.
இப்போது சித்தார்த்தனே தோணிக்காரன். 
அவனின் அமைதி தவழ்ந்த முகத்தையும், அர்த்தம் நிறைந்த பேச்சுக்களையும் கேட்ட பயணிகள் தங்கள் குறைகளை சொல்லி அவனிடம் முறையிட்டனர். சித்தார்த்தன் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினான். சித்தார்த்தனின் புகழ் எங்கும் பரவ ஆரம்பித்தது.
ஒருநாள் அவனைத்தேடி புத்த துறவி ஒருவர் வந்தார். அவர் வேறு யாருமல்ல. சித்தார்த்தனின் நண்பன் கோவிந்தன்தான்.
ஞானி என்று மக்களால் அழைக்கப்படும் தோணிக்காரன், தனது நண்பன் சித்தார்த்தன் என்று தெரிந்து கொண்டு கோவிந்தன் மகிழ்ச்சியடைந்தார். கோவிந்தன் ஒரு துறவியாக வாழ்ந்தாலும் இன்னமும் அவரிடம் பதில் கிடைக்காத பல கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகள் அத்தனைக்கும் சித்தார்த்தனிடம் இப்போது பதில் இருக்கிறது. அதை நதியிடமிருந்து அவன் கற்றுக் கொண்டான். தோணிக்காரன்தான் சித்தார்த்தனின் அகந்தையை அகற்றி அவனது அறிவுக்கண்ணை திறந்துவிட்டான்.
புத்தருக்கும் செவி சாய்க்காத அவன் மனம் ஒரு தோணிக்காரனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டது. மகான்கள் எவ்வளவு உபதேசம் செய்தாலும் மனிதமனம் அவர்களை பின்பற்ற தயங்குகிறது அல்லது தட்டிக் கழிக்கிறது. துன்ப துயரங்களை அனுபவித்த பிறகு எங்கேயும், யாரிடமும் பாடம் கற்றுக்கொள்கிறது.
'சித்தார்த்தன்' என்கிற இந்நாவலை எழுதியவர் ஜெர்மன் எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸே. இந்நாவலுக்கு 1946-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.




No comments:

Post a Comment