Saturday, July 4, 2015

இணையத்தை கலக்கும் எக்ஸ்குளூசிவ் இணையதளம்!

ரு இணையதளத்தை பயன்படுத்தி பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணைய உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் 'மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்' எனும் இணையதளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காகதான் இப்படி ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால், அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும். ஆச்சர்யமாக இருக்கலாம். அப்படி அந்த இணையதளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று வியப்புடன் கேட்கலாம். ஆனால், அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது என்பதுதான் இன்னும் ஆச்சர்யமானது. உண்மையில் அது ஒரு பயனில்லா இணையதளம் - ஆனால், அதுதான் இன்று உலகின் பிரத்யேக இணையதளமாகி இருக்கிறது.
எப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் அந்த இணையதளம் அமைக்கப்பட்ட விதத்தில் இருக்கும் புத்திசாலித்தனத்தில்தான் இருக்கிறது.


பெயரிலேயே பாதி வெற்றி என்பது போல அந்த இணையதளத்தை உருவாக்கியவர், இணைய உலகின் மிகவும் பிரத்யேக தளமாக உருவாக்கும் எண்ணத்துடன், அதற்கு 'மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்' என பெயர் வைத்தார். அந்த தளம் பிரத்யேக தன்மை கொண்டதாக இருக்கும் வகையிலும் அதை அமைத்திருந்தார். அதன் பிரத்யேக தன்மை என்ன தெரியுமா? அந்த தளத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அந்த ஒருவரும் ஒரு நிமிடம் மட்டும்தான் தளத்தை பயன்படுத்த முடியும். ஒருவர் பயன்படுத்தி முடிக்கும் வரை மற்றவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும். இதற்காக முகப்பு பக்கத்தில் இருந்து அனுமதி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட எந்த நேரத்தில் இந்த தளத்தில் நுழைந்தாலும், இத்தனை ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர், நீங்களும் வரிசையில் நிற்க அனுமதிச்சீட்டு வாங்கி கொள்ளவும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்படி காத்திருக்க வேண்டியிருப்பதும், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே தளத்தை பயன்படுத்தலாம் எனும் பிரத்யேக தன்மையும்தான் இணையவாசிகளை இந்த தளத்தை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.

இதுவரை 2,65,000 பேருக்கு மேல் இந்த தளத்தை பயன்படுத்த அனுமதிச்சீட்டு பெற்றுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவின் ஜஸ்டின் போலே என்பவர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். இணையதள வடிவமைப்பாளராக இருக்கும் போலே, இணையம் திறந்தவெளி தன்மை கொண்டதாக இருக்கும் நிலையில், அதற்கு நேர் எதிரான தன்மையுடன் ஒரு இணையதளத்தை அமைத்தால் என்ன என்று யோசித்து இந்த பிரத்யேக தளத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

மார்ச் மாதவாக்கில் இந்த தளத்தை உருவாக்கினார். ஆனால், அதன் பிரத்யேக தன்மையை மீறி அது உடனடியாக கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் ஜானி வெப்பர் எனும் வலைப்பதிவாளர் தனது பட்டியல் இணையதளத்தில், இணையத்தின் பயனில்லா இணையதளங்கள் எனும் பட்டியலை வெளியிட்டு இதை அடையாளம் காட்டியிருந்தார். அதன் பிறகு இந்த தளம் பிரபல இணைய சமூகமான ரெட்டிட்டிலும் இடம்பெற மெல்ல இணையவாசிகள் மத்தியில் பிரபலமானது.

அப்புறம் என்ன, இதன் விநோதமான விஷேசத்தன்மை பலரையும் பேச வைத்து இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
எல்லாம் சரி, இந்த இணையதளத்தை ஒரு நிமிடம் பயன்படுத்தும் போது என்னதான் செய்ய முடிகிறது என கேட்கலாம்? அது சஸ்பென்ஸ்! நீங்களும் முயன்று பாருங்களேன்!. ஆனால் ஒன்று ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிடுவதால் தளம் முடங்கி நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இணையதள முகவரி: http://mostexclusivewebsite.com/

-சைபர்சிம்மன்

No comments:

Post a Comment