Friday, February 27, 2015

உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்

நீலத்திமிங்கலம் என்பதே நம்மில் பலர் கூறும் விடையாக இருக்கும். அதைவிட பிரமாண்டமான ஒரு மரமே, இப்போது, உலகில் வாழும் மிகப்பெரிய உயிரினம்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள செக்கோயா தேசியப் பூங்காவில் காணப்படும் 'கலிபோர்னியா பிக்' (பெரிய) மரங்களே அவை.

இவற்றில் பல 270 அடி உயரம் வரை நீண்டு வளரக்கூடியவை. சில செம்மரங்கள் 350 அடியையும் எட்டும். கலிபோர்னியா பிக் மரங்களோ, அகலத்திலும் எடையிலும் கூட பிரமாண்டமானவை. இவற்றில் ஒரு மரம் 26 அடி அகலம் கொண்டிருக்கிறது. அடிமரத்தின் பட்டைகள் சில இடங்களில் 24 அடி அகலமாக உள்ளன. எடை 2,145 டன்!

இதுபோன்ற ஒரு மரத்திலிருந்து 500 கோடி தீக்குச்சிகள் தயாரிக்க முடியும்! பல கோடி ஆண்டுகளுக்கு முன், பிரமாண்ட செக்கோயா மரங்கள் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்பட்டன.

இப்போது கலிபோர்னியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றில் பல மரங்கள் கி.மு. 2 ஆயிர மாவது ஆண்டுக்கும் முன்பு தோன்றியவை!

ஆசியாவிலேயே மிக பெரிய தொலைநோக்கி எது வென்று தெரியுமா?

வைணு பாப்பு தொலைநோக்கி காவலூர், வேலூர் மாவட்டம தமிழ்நாடு
வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது. இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இது 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது.
1786 ஆம் ஆண்டு வில்லியம் பெட்ரி என்பவர் சென்னை எழும்பூரில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில், அவரது தனிப்பட்ட ஆய்வுக்காக அமைத்த ஆய்வகத்தில் இருந்து இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தின் தோற்றம் தொடங்குகிறது. இந்த ஆய்வகம் மெட்ராஸ் வானியல் ஆய்வகம் என்றழைக்கப்பட்டது. பின்னர் 1899 ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வகம் கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வகமாக செயற்படத் தொடங்கியது.
1960 ஆம் ஆண்டில் வைணு பாப்பு கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். வானில் உள்ள விண்வெளிப் பொருட்களை உற்று கவனிக்க ஏற்ற இடமாக ஜவ்வாது மலையில் உள்ள சிறிய கிராமமான காவலூரை இவரே கண்டறிந்தார். காவலூரில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட காரணத்தினால் இது காவலூர் வானியல் ஆய்வகம் என்று பெயர் பெற்றது. பின்னர் இது நிறுவனமாக தன்னாட்சி பெற்று இதன் தலைமையிடம் பெங்களூருக்கு மாற்றப்பட்டு புதிய இந்திய வான் இயற்பியல் மையமாக உருவானது.
இதன் முலம் நடந்த கண்டுபிப்புகள்.
1972 - வியாழன் கோளின் நிலாவான கானிமீடிற்கு வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
1977 - யுரேனசு கோளைச் சுற்றி வளையம் இருப்பது. ( இந்த நோக்குதல் பட்டாச்சார்யா, குப்புசாமி ஆகியோரால் பார்க்கப்பட்டது; வைணு பாப்புவினால் தந்தியனுப்பப்பட்டு அனைத்துலக வானியல் சங்கம் - ஐ ஏ யூ-வினால் பதிவு செய்யப்பட்டுள்ளது )
1988 பிப்ரவரி 17 அன்று ஒரு சிறுகோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த இருபதாம் நூற்றாண்டின் முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது [கணித மேதை ராமானுஜனினின் நினைவாக.
1984 - சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் உள்ளது காவலூரிலிருந்து முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும்; வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ பார்வையாளர் தொலைநோக்கி மூலம் இரவு வானம் காட்டப்படும். [பி.கு.: பார்வையாளர் வருகை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது -- பின்னறிவிப்பு வரும் வரை]
2009 நவம்பர் 4 முதல் 6 வரை 2.34 மீ முதன்மை ஆடிக்கு அலுமினியம் பூச்சேற்றப்பட்டது. இவ்வாடியின் நிறை 3.5 டன்கள் ஆகும்.

Wednesday, February 18, 2015

தெரிந்த உண்மைகள், தெரியாதவர்களுக்கு மட்டும்.



சுமார் 1965ம் ஆண்டுவாக்கில்,
பேரறிஞர் அண்ணா அவர்கள்,
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர்
நடந்துகொண்டிருந்த சமயம்.
அவர் டெல்லியில் இருந்தார்.
அண்ணா டபுள் M.A. படித்து,
ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர்.
பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக
அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.
அந்தசமயம் ஒரு இளவயது
டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர்
பாராளுமன்றத்தைவிட்டு
வெளியேவந்த அண்ணாவிடம்,
"நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..."
என்றார்.
அண்ணாவும் பேட்டிகொடுக்க
சம்மதித்து பேட்டிக்கு தயாரானார்.
நிருபர் துணிச்சலாக
"உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும்
சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே...
நான் கேட்கும் கேள்விக்கு
உங்களால் பதில் சொல்லமுடியுமா?..."
என்றார்.
அண்ணாவும் "கேளுங்க தம்பி..."
என்றார் ஆங்கிலத்தில்.
உடனே நிருபர் கேட்டார்...
"ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு
"A" என்ற எழுத்தே இல்லாமல்
உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா?..."
என்றார்.
உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல்,
"தம்பி, 1 முதல் 999 வரை
ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்.
கடைசியில் STOP என்று
ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்..."
என்றார்.
இந்தபதிலை கொஞ்சமும்
எதிர்பார்க்காத நிருபர்
உடனே அண்ணாவிடம்
மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அன்றுதான் நிறையபேருக்கு
தெரிய ஆரம்பித்தது
1 முதல் 999 வரை ஆங்கிலத்தில்
"A" என்ற எழுத்தேவராது என்று.

உலக அளவில் பிரபலமான குடும்ப நிறுவனம்

பொதுமக்கள் முதலீடே இல்லாமல், முழுக்க முழுக்க ஒரே குடும்பத்துக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய நிறுவனம் எது தெரியுமா? ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ஃபர்னிச்சர் கம்பெனி ஐக்கியா!
ஸ்வீடனில் அஹூனியார்ட் (Agunnaryd) எனும் நகரம். இதன் அருகே எல்ம்டார்ட் (Elmtaryd) என்னும் சிறிய பண்ணை இருக்கிறது. இங்கே ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இங்வார் காம்ப்ராத் (Ingvar Kamprad) பிறந்தார். அவர் பின்புலத்தில் பல சோகங்கள் உண்டு. 

பலனில்லா உழைப்பு
 
இங்வாரின் தாத்தா ஜெர்மனியிலிருந்து பிழைப்பு தேடி ஸ்வீடனுக்குக் குடியேறினார். ஒரு பண்ணையில் வேலை பார்த்தார். அஹூனியார்ட் இருந்த பகுதி நிலம் அத்தனை வளமையானதல்ல. நிலத்தை ஆழமாகத் தோண்டவேண்டும், உரம் போடவேண்டும், நீர் பாய்ச்சவேண்டும், களை எடுக்கவேண்டும், பண்ணையில் பால் தரும் பசுக்கள் உண்டு. இவற்றைப் பராமரிக்கவேண்டும், பால் கறக்கவேண்டும். விளைபொருட்கள், பால் ஆகியவற்றை உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்யவேண்டும். முதுகு உடையும்படி உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும், இதனால், அஹூனியார்ட் மக்கள் அனைவருமே கடும் உழைப்பாளிகளாக இருந்தார்கள்.
இங்வாரின் தாத்தாவும் கடுமையாக உழைத்தார். எளிமையான வாழ்க்கை நடத்திப், பணம் சேமித்தார். இதை மூலதனமாகப் போட்டு, வங்கிக் கடன் வாங்கி எல்ம்டார்ட் பண்ணையை வாங்கினார். அவர் கெட்ட காலம், சில வருடங்கள் விவசாயம் பொய்த்தது. வங்கிக் கடனுக்கான வட்டியை அவரால் கட்ட முடியவில்லை. மானம் பெரிதென்று நினைத்த தாத்தா தற்கொலை செய்துகொண்டார். 

வாழ்க்கைப் பாடம்
 
இங்வாரின் பாட்டி இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டார். குடும்பத்தோடு இன்னும் கடுமையாக உழைத்தார். குடும்பம் தலை நிமிரத் தொடங்கியது. இந்தப் பின்புலத்தால், பணத்தைவிட மானம் பெரியது, பணத்தைச் சிக்கனமாகச் செலவிடவேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும் என்னும் விலை மதிப்பில்லாத வாழ்க்கைப் பாடங்கள் இங்வார் மனதில் ஆழமாகப் பதிந்தன.
சிறுவயதில் இங்வாருக்குத் தூக்கம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிகாலையில் அவர் அப்பாவும், அம்மாவும் ஆறு மணிக்கு எழுந்திருப்பார்கள், இங்வாரை எழுப்புவார்கள். அவர் எழுந்திருக்கவே மாட்டார். அம்மாவும், அப்பாவும் ``தூங்குமூஞ்சி” என்று தினமும் திட்டுவார்கள். தங்கள் மகன் உதவாக்கரை என்று முடிவு செய்துவிட்டார்கள். 

பரிசு ஏற்படுத்திய மாற்றம்
 
இப்போது ஒரு ஆச்சரியம் நடந்தது. இங்வாரின் அப்பா மகனின் பிறந்த நாளுக்கு அலாரம் கடிகாரம் வாங்கித் தந்தார். அம்மா, அப்பா ஆறு மணிக்குத்தானே கண் விழிப்பார்கள்? இங்வார் 5.50 – க்கு அலாரம் வைத்தார். எழுந்தார். அம்மா, அப்பாவை எழுப்பிவிட்டார். அவர்களோடு பண்ணைக்குள் போனார். மாடுகளுக்குத் தீனி வைப்பது, பால் கறப்பது, களை பறிப்பது என்று அத்தனை விஷயங்களையும் எட்டு வயதிலேயே தானாகச் செய்யக் கற்றுக்கொண்டுவிட்டார். 

தொழில் முனைவு 

சிறுவயதிலேயே இங்வாரிடம் தொழில் முனைப்பு இருந்தது. ஸ்வீடனின் நிலப்பரப்பில் சுமார் 69 சதவிகிதம் காடுகள். ஆகவே, மரங்களைப் பயன்படுத்தி தீக்குச்சிகள், ஃபர்னிச்சர் தயாரிப்பு ஆகியவை முக்கிய தொழில்களாக இருந்தன. இங்வார் தன் பத்து வயதில் முதல் பிசினஸ் தொடங்கினார். தீக்குச்சிகளை மொத்த விலை வியாபாரிகளிடமிருந்து வாங்குவார். உள்ளூர் சில்லறைக் கடைகளுக்கு லாபத்தில் விற்பார்

ஐக்கியா பிறந்த கதை 
 
தீக்குச்சியில் தொடங்கிய வியாபாரம் நன்றாகப் பற்றிக்கொண்டது. இங்வார் தன் வியாபாரத்தை விரிவுபடுத்தினார். நகைகள், கடிகாரங்கள், உடைகள் எனப் பல பொருட்களை விற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில், இங்வார் அவரே கடைகளுக்குப் போய் விற்பார். இத்தோடு தபால் மூலமாக விற்கும் மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். தன் கம்பெனிக்கு IKEA கார்ப்பரேஷன் என்று பெயர் வைத்தார். எப்படி இந்தப் பெயர் அவர் மனதில் தோன்றியது? Ingvar Kamprad என்னும் தன் பெயரிலிருந்து IK, தன் வீடு இருந்த பண்ணையான Elmtaryd என்பதிலிருந்து E, Agunnaryd என்னும் சொந்த ஊர்ப் பெயரிலிருந்து A. மொத்தத்தில் IKEA.
புதிது புதிதாக எந்தப் பொருட்களை விற்கலாம், வியாபாரத்தை வளர்க்கலாம் என்று இங்வாருக்குத் துடிப்பு அதிகம். ஸ்வீடன் காடுகள் அடர்ந்த நாடு என்பதால், மரங்கள் கணிசமாக இருக்கும். மர ஃபர்னிச்சர்கள் முக்கிய தொழிலாக இருந்தது. மேசை, நாற்காலிகள், சோபா செட்கள், டைனிங் டேபிள், கட்டில், தொட்டில் போன்ற மர சாமான்களை விற்க ஆரம்பித்தார். பிசினஸ் அமோகமாக வளர்ந்தது.
இங்வார் மிக எளிமையான மனிதர். பணம் கொட்டியபோதிலும், பழைய மாடல் காரைத்தான் பயன்படுத்தினார். விமானத்தில் முதல் வகுப்புப் பயணமே கிடையாது. இப்படி எளிமையில் திருப்தி கண்ட மனிதருக்குத் திருப்தி தராத ஒரே விஷயம் – ஐக்கியாவின் வளர்ச்சி. மர ஃபர்னிச்சர்கள் துறையில் ஐக்கியா உலகத்தின் நம்பர் 1 கம்பெனியாக வேண்டும் என்னும் வெறி அவருக்கு இருந்தது. 

என்ன செய்யலாம்? 
 
விற்பனையை அதிகரிக்க ஸ்வீடனில் ஃபர்னிச்சர்கள் விற்பனை ஏன் உச்சம் தொடவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று இங்வார் ஆராய்ந்தார். ஸ்வீடனில் மரம் மலிவாகக் கிடைத்தது. ஆனால், தச்சர்களின் கூலி மிக அதிகம். தச்சர்களுக்கு ஏகக் கிராக்கி. நல்ல மரவேலை செய்பவர்கள் கிடைப்பதே சிரமமாக இருந்தது. சாதாரணமாக மரத் தட்டுமுட்டுச் சாமான்கள் அளவில் பெரியவை. கடைகளிலிருந்து வாங்கினால், வீட்டுக்குக் கொண்டுவரும் போக்குவரத்துச் செலவு, ``தேங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்” என்னும் நம் ஊர்ப் பழமொழியை உண்மையாக்குவதாக இருந்தது.இந்தக் காரணங்களால், ஸ்வீடன் நாட்டு மக்கள் மர ஃபர்னிச்சர்கள் வாங்குவதைத் தவிர்த்தார்கள், அல்லது தள்ளிப் போட்டார்கள். விற்பனை மந்தமானது. 

இந்தத் தடைக் கற்கள் அத்தனைக்கும் தீர்வு கண்டுவிட்டால் ஃபர்னிச்சர் விற்பனையைப் பல நூறு மடங்கு அதிகரிக்கலாம் என்று இங்வார் மனதில் பொறி தட்டியது. ``ஃபர்னிச்சர் என்றால் விலை உயர்ந்த பொருள்” என்று மக்கள் மனங்களில் இருந்த பொசிஷனிங்கை முதலில் மாற்றவேண்டும் என்று முடிவுசெய்தார். தன் கம்பெனி பற்றி அவர் உருவாக்க முடிவு செய்த பொசிஷனிங்: ஐக்கியா,நன்கு டிசைன் செய்யப்பட்ட, எண்ணிலடங்காத வகைகளில் வீட்டு உபயோகப் பொருட்களை, எல்லோருக்கும் கட்டுப்படியாகக்கூடிய மலிவான விலையில் தரும் கடை.
இந்தப் பொசிஷனிங்கை நிஜமாக்க இரண்டு வித நடவடிக்கைகள் தேவை – கச்சிதமான டிசைன், விலைக் குறைப்பு. இவை இரண்டிலும் இங்வார் முழுமூச்சோடு இறங்கினார். 

புதிய உத்தி
 
இங்வார் மூளையில் ஒரு மின்வெட்டல். Foldable Furniture என்னும் மடக்கு மேசை, நாற்காலி, கட்டில்களை அறிமுகப்படுத்தினார். இவற்றின் கால்கள் போன்ற பல்வேறு பாகங்களைத் தனித் தனியாகக் கழற்றினார். ஒரு பொட்டலமாக்கினார். இவற்றோடு, ஒரு பாக்கெட்டில் பல்வேறு பாகங்களை இணைக்கும் ஸ்க்ரூக்கள், பாகங்களை இணைக்கும் எளிமையான, விலாவாரியான செயல்முறை ஒரு குட்டிப் புத்தகத்தில்.
வாடிக்கையாளர் ஐக்கியா கடைக்கு வருவார். மேசையைப் பொட்டலமாக வாங்குவார். காரில் பாந்தமாக இந்தப் பொட்டலம் உட்காரும். வழியில் எந்த உரசலும் ஏற்படாது. வீட்டுக்கு வந்து சில ஸ்க்ரூக்களை முடுக்குவார். மேசை ரெடி. தச்சருக்குத் தரும் கூலியில் ஏகப்பட்ட மிச்சம், வாடிக்கையாளருக்கு ஏகப்பட்ட சேமிப்பு. 

பிற நாடுகளுக்கு
 
விலைகளைக் குறைக்க இங்வார் இன்னொரு வழியையும் கையாண்டார். கூலி குறைவான சீனா, போலந்து ஆகிய நாடுகளுக்குத் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்தார். இன்று ஐக்கியாவின் 90 சதவிகித விற்பனை அவுட்சோர்ஸ் செய்த உற்பத்திப் பொருட்களிலிருந்து வருகிறது. 

பிரம்மாண்ட வளர்ச்சி
 
ஐக்கியாவுக்கு இன்று 46 நாடுகளில் 351 கடைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பல லட்சம் சதுர அடிகள் பரப்புள்ள பிரம்மாண்ட விற்பனையகங்கள். 12,000 – துக்கும் மேற்பட்ட ஃபர்னிச்சர் வகைகள் விற்பனையாகின்றன. மொத்த ஆண்டு விற்பனை 28 பில்லியன் டாலர்கள் (சுமார் 1,72,624 கோடி ரூபாய்). விரைவில் இந்தியாவிலும் ஐக்கியா கடைகள் திறக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 

இங்வார் காம்ராத் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருக்கு இப்போது வயது 89. 2010 – இல், வாரன் பஃபட், பில் கேட்ஸ் இருவரையும் பின்தள்ளி, இங்வார் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். அடுத்த வருடமே, மகனிடம் பிசினஸை ஒப்படைத்தார். தன் சொத்துகளில் பெரும்பகுதியை அறக்கட்டளைகளுக்கு எழுதிவைத்தார்.தான் காணும் கனவுகள் நிஜமாவதைப் பார்க்கும் பாக்கியம் ஒரு சிலருக்கே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலிகளில் இங்வார் முக்கியமானவர்.
- slvmoorthy@gmail.com

Wednesday, February 11, 2015

‎பல்லாங்குழி‬

கொஞ்சம் நிதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு புரியும்..

பல்லாங்குழிங்குறது வெளையாட்டா சொல்லிக் குடுத்த குடும்ப நிர்வாகம்.
மொதல்ல எப்படி வெளையாடணும்னு பாப்போம்.

ஒரு பக்கத்துக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்து (பண்ணெண்டு முத்து போட்டும் வெளையாடுவாக)ஒரு குழில இருந்து எடுத்து அடுத்து வார குழிக்கு ஒன்னொன்னா போடுவாக. முத்து முடிஞ்சதும் அடுத்த குழில இருந்து முத்துகள எடுத்து அதே மாதிரி போடணும். ஒரு வேள, அடுத்த குழி காலியா. இருந்தா, அதுக்கு அடுத்த குழில எம்புட்டு முத்து இருக்கோ அம்புட்டும் முத்தும் போட்டு வந்தவுகளுக்குச் சொந்தம். (செல சமயம் அது நெறையாவும் இருக்கும் செல சமயம் ஒன்னுமில்லாமையும் கூட போகலாம்.)
காலியான குழியில, அடுத்து சேந்து வார முத்துகள் மொத்தமா நாலு சேந்துருச்சுனா, அதுக்குப் பேரு “பசு” அது ஆரு பக்கம் இருக்கோ அவுகளுக்குச் சொந்தம்.

வெளையாட்டுல ஒரு பக்கம் செயிக்கச் செயிக்க இன்னொரு பக்கம் தெக்கம்(தொக்கம், தக்கம், பற்று) விழும். கடைசில தோத்தவுகட்ட அஞ்சு முத்துக்கும் கொறவா இருந்தா, அஞ்சு முத்துக்குப் பதிலா, ஒரு ஒரு முத்தா போட்டு கஞ்சி காச்சி வெளயாடுவாக.
சரி இத எதுக்கு வெளையாண்டாக?
தன்கிட்ட இருக்குற பொருள எப்படி பெருக்கணுங்குறதுதேன் இந்த வெளையாட்டோட சூச்சுமம்.

எந்தக் குழில ஆரம்பிச்சா எந்தக் குழில எம்புட்டு சேருங்குறது, வெளையாட வெளையாட நெனவுல சேத்துக்கிட்டே போகணும்.

“பசு” சேர்க்கணும் (அதுக்கேத்தாப்ல வெளையாடணும்) பசுங்குறது நாலு முத்துதேன்னு சாதாரணமா நெனைக்கக் கூடாது. “பசு”னா செல்வம்னு அர்த்தம். அதச் சிறுகச் சிறுக சேர்த்துப் பழக்குறதுதேன் நோக்கம்.

கடைசில கஞ்சி காச்சுறதுனு ஒரு வாய்ப்பிருக்கு. தான் செயிச்சா எதிராளிக்கு கஞ்சி காச்சுற வாய்ப்பு குடுக்கணும். எல்லாம் தோத்துப்புட்டானு மிதப்பா வெளையாண்டா, அடி மட்டத்துல இருந்து கூட எதிராளி செயிச்சு வந்துரலாம். ஒரு வேள நம்ம கஞ்சி காச்சுற நெலைக்கு வந்துட்டாலும் சோர்ந்து போயிறக் கூடாது. அங்கன இருந்து கூட (வறுமையில இருந்து கூட) மேடேறிடலாம். மேடேறிடணும். அதேன் ஒரு குடும்பத்தக் காக்கப் போறவளுக்கு அழகு.

இது வாழ்க்கைக்கான வெளையாட்டு. அதுனாலதேன். சடங்குக்குச் சீரா, தன் வீட்டுக்கு வரப் போற பொண்ணுக்கு பல்லாங்குழி வாங்கிக் குடுக்குறது தாய்மாமன் வழமையா வச்சிருந்தாக. கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போறப்ப கட்டாயம் பல்லாங்குழிய சீர் வரிசைல சேத்துக் குடுத்தாக.
ஒன்னொன்னா தொலைச்சுக்கிட்டு வாரோம்.

Thursday, February 5, 2015

ஒரு புது தகவல்:

ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆகும் செலவுகள் உங்களுக்காக!!
அந்த பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது.
அதுபற்றிய விபரங்களை இன்று இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 47 பைசா
பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 96 பைசா
இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 46 பைசா
ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகு்ம் செலவு = 1 ரூபாய் 81 பைசா
நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 79 பைசா
500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 3 ரூபாய் 58 பைசா
ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 4 ரூபாய் 6 பைசா
இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால்...
100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.
எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது.
இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய கிழிந்த பணத்தாள்களை வாங்கிக் கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடுப்பார்கள்.
ஆனால் உண்மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும். அவர்கள் மொத்தமாக வங்கிக்கு கொண்டு சென்று அதை நல்ல நோட்டுக்களாக மாற்றி விடுவார்கள்.
ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது Reserve Bank of India.
கூடுதல் தகவல் என்னவெனில்...
ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லை யென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிகமான பணத்தை அச்சடித்துவிடும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கும் பணம்,நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது.அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் அச்சடிக்கப் படுகின்றன

Tuesday, February 3, 2015

பெண்ககள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள் :-

பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்


ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

கோவில் கோபுர உயரம்...

1, ஸ்ரீரங்கம் – 236 அடி
2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
4, ஆவுடையார் கோவில் – 200 அடி
5, தென்காசி – 178 அடி
6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்
8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
9, மன்னார்குடி – 154 அடி
10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்
12, திருவானைக்கா – 135 அடி கீழ கோபுரம்
13, சுசீந்திரம் – 134 அடி
14, திருவாடனை – 130 அடி
15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்
17, திருச்செந்தூர் – 127 அடி
18, சங்கரன் கோவில் – 125 அடி
19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

உங்க ஊர் கோயில் கோபுர உயரம்.....?

ஹால்மார்க் என்றால் என்ன?

கோடீஸ்வரர்கள் முதல் சாமானியர்கள் வரை விரும்பும் உலோகம் தங்கம். பிற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அழகு சாதனமாக மட்டுமின்றி மங்கல பொருளாகவும் தங்கம் திகழ்கிறது. திருமணம் நிச்சயம் ஆவதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்தின் விலை கடந்த 1970ம் ஆண்டு பவுன் ரூ.45க்கு விற்றது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து 2005ம் ஆண்டு அக்டோபரில் பவுன் ரூ.3,500 ஆக இருந்தது.2005ல் ஊக வணிகம் என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் இதர பொருட்களை போன்று தங்கமும் சேர்க்கப்பட்டது.

இதனையடுத்து தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது.தங்கத்தின் விலையேற்றம் ஒருபுறம் இருந்தாலும் அதன் மீதான மோகம் மட்டும் குறைந்த பாடில்லை. மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் ஹால்மார்க் முறையை கடந்த 2003ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இதன்படி இந்திய தர நிர்ணய அமைவனம் நாடு முழுவதும் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து ஹால்மார்க் சான்று அளிக்க தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் நாடு முழுவதும் 3 இலக்க அளவிலேயே ஹால்மார்க் சான்று வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை 40 மையங்கள் மட்டுமே உள்ளன.

தற்போது வாடிக்கையாளர்களை கவர ஒரு சில நிறுவனங்கள் ஹால்மார்க் என்ற சொல்லை பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் ஹால்மார்க் சான்று பெற்ற நகைகளுடன், ஹால்மார்க் சான்று பெறாத நகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஹால்மார்க் என்பது 23 கேரட்டிற்கு மட்டுமல்ல 9 கேரட்டிலிருந்தே தரத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

இதுபற்றி இந்திய தர நிர்ணய அமைவன தென்மண்டல இணை இயக்குநர் வினோத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மக்களுக்கு தரமான தங்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையை கொண்டு வந்துள்ளது. இதற்காக தங்க நகை நிறுவனங்கள் முதலில் ரூ7,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து சான்றினை பெற வேண்டும். பின்னர் அவர்களது தங்க நகைகளை எங்கள் மையங்களில் அளித்தால் அதனை பரிசோதித்து குறிப்பிட்ட தரம் இருந்தால் அந்த நகையில் சான்று வழங்கி முத்திரையிடப்படும்.

எனவே ஹால்மார்க் நகை வாங்க விரும்புகிறவர்கள் அந்த கடைகளில் லென்சை கேட்டு வாங்கி முத்திரையை சரிபார்க்க வேண்டும். இந்த முத்திரையில் முதலில் ஹால்மார்க் சின்னமும், அடுத்து தங்கத்தின் தர அளவு, அடுத்து சோதனை செய்யப்படும் மையத்தின் குறியீடு, நகை செய்யப்பட்ட ஆண்டு, நகை விற்பனை செய்யும் கடையின் அடையாள குறியீடு போன்றவை குறிப்பிடபட்டிருக்கும்.

இந்த முத்திரை பிரத்யேக இயந்திரம் மூலம் இடப்படுவதால் வேறு யாரும் இந்த முத்திரையை பதிக்க முடியாது. கடைகளில் ஹால்மார்க் முத்திரையை விட தரம் குறைவாக இருந்தது குறித்து ஆதாரத்துடன் புகார் தந்தால், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தரத்துடன் புதிய நகை வழங்குவதுடன், சம்மந்தப்பட்ட கடையின் ஹால்மார்க் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை நீதிமன்றம் மூலம் எடுக்கப்படும்.

கேடிஎம் என்பது அபாய எச்சரிக்கை

தங்கம் வாங்கும் படித்தவர்கள் கூட கேடிஎம் என்ற குறியீட்டை பார்த்து அதனை தரத்தின் குறியீடாக நினைத்து வாங்குகின்றனர். ஆனால் அது தரத்தை குறிப்பது அல்ல. அபாய எச்சரிக்கை ஆகும்.கேடிஎம் என்பது காட்மியத்தை குறிக்கும் சொல்லாகும். தங்க நகைகளை பற்ற வைக்க காட்மியம் என்ற வேதிப்பொருள் அரபு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. காட்மியம் மூலம் பற்ற வைக்கும் புகையினால் அதனை செய்பவர்கள் புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் செய்யப்பட்ட நகைகளை அணியும்போது சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்படலாம்.

எனவே சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படம் வெளியிட்டிருப்பது போல் இந்த வார்த்தையை காட்மியம் பயன்படுத்தப்பட்ட நகைகளில் பதிவு செய்ய அரபு நாடுகள் உத்தரவிட்டுள்ளன. இந்தியாவிற்கு வரும் அரபுத் தங்கத்தில் இந்த வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். இதனை பார்த்து அங்கும் இதுபோன்ற வார்த்தையை பதிவு செய்ய அது தரத்தின் குறியீடு என தவறான தோற்றம் ஏற்பட்டுள்ளது.

Monday, February 2, 2015

உலகின் பெரிய பூ - தெரிந்துகொள்வோம்

இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது. இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு. அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்!

இப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும். முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும். 5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக்கொள்ள முடியும். இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு.

இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன. மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன.
மற்ற தாவரங்களின் ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன. இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும். யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும்போது, காலில் ஒட்டிக்கொள்ளும் விதைகள் இடம்பெயர்கின்றன.

ஒட்டியுள்ள வேண்டாபொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன. அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!

Sunday, February 1, 2015

உலகின் மிகப்பெரிய நூலகங்களை பற்றி தெரிந்துகொள்வோம்:-

லைப்ரரி ஆப் காங்கிரஸ்

வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ 3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது.

லைப்ரபி ஆப் ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ்

ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்றுமிடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது. 1714ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான இந்தூலகம் உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இதில் 2,05,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
ரஷ்யன் ஸ்டேட் நூலகம்

ரஷ்யாவி, மாஸ்கோவில் அமைந்துள்ளது இந்த நூலகம். 1862ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதில் 1,70,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. 247 மொழிகளில் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இசை மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் நூலகம்

லண்டனின் (பிரிட்டன்) உள்ள இந்த நூலகம் 1753ம் ஆண்டு கட்டப்பட்டது. மிகப்பெரிய நுலகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு ஏறத்தாழ 2,90,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

ரஷ்ய தேசிய நூலகம்

ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்னுமிடத்தில் உள்ள இந்த நூலகம் 1795ல் கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான இதில் 1,47,99,267 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

வெர்நாட்ஸ்கி தேசிய அறிவியல் நூலகம்

உக்ரைனின் தலைநகரமான கீவ்-ல் அமைந்துள்ள இந்நூலகம் 1919ல் கட்டப்பட்டது. 1,50,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் சம்மந்தப்பட்ட அதிகமான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம். இது மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.

பூஸ்டன் பொது நூலகம்

அமெரிக்காவில் உள்ள பூஸ்டர் நகரில் அமைந்துள்ளதால் இதற்கு பூஸ்டன் பொது நூலகம் என்று பெயர் வந்தது. 1895ல் கட்டப்பட்ட இந்நூலகத்தில் 1,57,60,879 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

கனடா தேசிய நூலகம்

கனடாவில் உள்ள ஒட்டவா என்ற இடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது. 1953-ல் கட்டப்பட்ட இந்நூலகம் உலகின் மிகப்பெரிய நூலகங்களின் ஒன்றாகும். இதில் 1,95,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

தேசிய நூலகம்

ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் பகுதியில் அமைந்துள்ள இந்நூலகம் 1990ல் கட்டப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இதில் 2,22,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

ஹார்வார்டு பல்கலைக்கழக நூலகம்

அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள இந்த நூலகம் 1638-ல் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 16 மில்லியன் பதிப்புகள் இடம் பெற்றுள்ளன. 1,58,26,570 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.