Tuesday, February 3, 2015

ஹால்மார்க் என்றால் என்ன?

கோடீஸ்வரர்கள் முதல் சாமானியர்கள் வரை விரும்பும் உலோகம் தங்கம். பிற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அழகு சாதனமாக மட்டுமின்றி மங்கல பொருளாகவும் தங்கம் திகழ்கிறது. திருமணம் நிச்சயம் ஆவதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்தின் விலை கடந்த 1970ம் ஆண்டு பவுன் ரூ.45க்கு விற்றது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து 2005ம் ஆண்டு அக்டோபரில் பவுன் ரூ.3,500 ஆக இருந்தது.2005ல் ஊக வணிகம் என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் இதர பொருட்களை போன்று தங்கமும் சேர்க்கப்பட்டது.

இதனையடுத்து தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் எகிறத் தொடங்கியது.தங்கத்தின் விலையேற்றம் ஒருபுறம் இருந்தாலும் அதன் மீதான மோகம் மட்டும் குறைந்த பாடில்லை. மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் ஹால்மார்க் முறையை கடந்த 2003ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இதன்படி இந்திய தர நிர்ணய அமைவனம் நாடு முழுவதும் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து ஹால்மார்க் சான்று அளிக்க தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. எனினும் நாடு முழுவதும் 3 இலக்க அளவிலேயே ஹால்மார்க் சான்று வழங்கும் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை 40 மையங்கள் மட்டுமே உள்ளன.

தற்போது வாடிக்கையாளர்களை கவர ஒரு சில நிறுவனங்கள் ஹால்மார்க் என்ற சொல்லை பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் ஹால்மார்க் சான்று பெற்ற நகைகளுடன், ஹால்மார்க் சான்று பெறாத நகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஹால்மார்க் என்பது 23 கேரட்டிற்கு மட்டுமல்ல 9 கேரட்டிலிருந்தே தரத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

இதுபற்றி இந்திய தர நிர்ணய அமைவன தென்மண்டல இணை இயக்குநர் வினோத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மக்களுக்கு தரமான தங்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையை கொண்டு வந்துள்ளது. இதற்காக தங்க நகை நிறுவனங்கள் முதலில் ரூ7,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து சான்றினை பெற வேண்டும். பின்னர் அவர்களது தங்க நகைகளை எங்கள் மையங்களில் அளித்தால் அதனை பரிசோதித்து குறிப்பிட்ட தரம் இருந்தால் அந்த நகையில் சான்று வழங்கி முத்திரையிடப்படும்.

எனவே ஹால்மார்க் நகை வாங்க விரும்புகிறவர்கள் அந்த கடைகளில் லென்சை கேட்டு வாங்கி முத்திரையை சரிபார்க்க வேண்டும். இந்த முத்திரையில் முதலில் ஹால்மார்க் சின்னமும், அடுத்து தங்கத்தின் தர அளவு, அடுத்து சோதனை செய்யப்படும் மையத்தின் குறியீடு, நகை செய்யப்பட்ட ஆண்டு, நகை விற்பனை செய்யும் கடையின் அடையாள குறியீடு போன்றவை குறிப்பிடபட்டிருக்கும்.

இந்த முத்திரை பிரத்யேக இயந்திரம் மூலம் இடப்படுவதால் வேறு யாரும் இந்த முத்திரையை பதிக்க முடியாது. கடைகளில் ஹால்மார்க் முத்திரையை விட தரம் குறைவாக இருந்தது குறித்து ஆதாரத்துடன் புகார் தந்தால், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தரத்துடன் புதிய நகை வழங்குவதுடன், சம்மந்தப்பட்ட கடையின் ஹால்மார்க் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை நீதிமன்றம் மூலம் எடுக்கப்படும்.

கேடிஎம் என்பது அபாய எச்சரிக்கை

தங்கம் வாங்கும் படித்தவர்கள் கூட கேடிஎம் என்ற குறியீட்டை பார்த்து அதனை தரத்தின் குறியீடாக நினைத்து வாங்குகின்றனர். ஆனால் அது தரத்தை குறிப்பது அல்ல. அபாய எச்சரிக்கை ஆகும்.கேடிஎம் என்பது காட்மியத்தை குறிக்கும் சொல்லாகும். தங்க நகைகளை பற்ற வைக்க காட்மியம் என்ற வேதிப்பொருள் அரபு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. காட்மியம் மூலம் பற்ற வைக்கும் புகையினால் அதனை செய்பவர்கள் புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் செய்யப்பட்ட நகைகளை அணியும்போது சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்படலாம்.

எனவே சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படம் வெளியிட்டிருப்பது போல் இந்த வார்த்தையை காட்மியம் பயன்படுத்தப்பட்ட நகைகளில் பதிவு செய்ய அரபு நாடுகள் உத்தரவிட்டுள்ளன. இந்தியாவிற்கு வரும் அரபுத் தங்கத்தில் இந்த வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். இதனை பார்த்து அங்கும் இதுபோன்ற வார்த்தையை பதிவு செய்ய அது தரத்தின் குறியீடு என தவறான தோற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment