Wednesday, January 13, 2016

மர்மமா இருக்குது!

மர்மமான சூழலில் இருக்கும் மற்றும் மர்மமான முறையில் இயங்கும் இடங்கள் உலகில் ஏராளம். அதில் குறிப்பிட வேண்டிய சில முக்கியமான இடங்கள்! 
அயர்ன் மவுன்டைன்:

எதிர்காலத் தேவைக்காக விதைகளைச் சேகரித்து வைக்கும் விதை வங்கிமாதிரி, தகவல்களைப் பாதுகாத்து வைக்கும் இடம். அமெரிக்காவின் போஸ்டன் நகரின் மலை அடிவாரம் ஒன்றில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளின் முக்கியமான நிறுவனங்கள், வங்கிகள், புகைப்படங்கள், அரசு சார்ந்த ஆவணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறார்கள். உலகின் அரிய பொக்கிஷங்கள், உலகப் புகழ்பெற்ற 27 மில்லியன் புகைப்படங்களின் ஒரிஜினல் நெகட்டிவ் என நாளைய சந்ததியினருக்குத் தேவையான வரலாற்று ஆதாராங்களை (?!) இவ்விடத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 1951-ல் ஹெர்மென் என்பவரால் துவங்கப்பட்ட இந்த அயர்ன் மவுன்டைன்னில், உலகின் முக்கியமான டேட்டா பேஸ்களில் இருந்து, வங்கிகளின் முக்கியமான கையெழுத்து நகல்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பில்கேட்ஸ் போன்ற பெரும் பணக்காரர்களின் முக்கியமான ஆவணங்கள் இங்கேதான் இருக்கிறதாம். இப்படி உலகின் மொத்தத் தரவுகளையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இந்த நிறுவனம், ஆவணங்களைப் பாதுகாக்கும் வசதிகளுக்காக ஒற்றை வாசலோடு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

கோகோ கோலா-சீக்ரெட் ரெசிபி: 

ஏறத்தாழ 200 நாடுகளைச் சேர்ந்த இரண்டு பில்லியன் மக்கள் கோகோ கோலாவைக் குடிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இன்றைய தேதிக்கு உலகின் மதிப்புமிக்க பிராண்ட் கோக்தான்! இத்தனை சிறப்புமிக்க கோக் எப்படி உருவாகிறது? என்று கேட்டால், கோலா கொட்டைகள் மற்றும் இலைகளைக்கொண்டு உருவாக்கப்படுகிறது என்று பதில் வருவதோடு, ‘இது தவிர ரகசியமான ஒன்று கலக்கப்படுகிறதுஎன்ற பதிலும் வரும். அந்த ரகசியமான பொருள் என்ன என்பதுதான் இன்றுவரை தொடரும் மர்மம். கோகோ கோலாவில் கலக்கப்படும் ரகசிய ரெசிபி பற்றிய குறிப்புகள் தாங்கிய பெட்டி ஒன்று கோகோ கோலா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு அந்தப் பெட்டியைப் பார்க்கும் அனுமதி இருக்கிறதே தவிர, பெட்டிக்குள் இருக்கும் ரெசிபி குறிப்பினைப் பார்க்க அனுமதி இல்லை!
நாஸ்கா கோடுகள்: 

அவ்வப்போது படிக்கும் பயிர் வட்டங்கள்பற்றிய மர்மத்தைப் போல, பெரு நாட்டில் காணப்படும் அடையாளங்களுக்கு நாஸ்கா கோடுகள் என்று பெயர். விமானத்தில் பறந்தபடி பார்த்தால் மட்டுமே முழு உருவத்தையும் பார்க்க முடியும். அந்த அளவுக்குப் பெருத்த உருவங்கள் குரங்கு, பறவை, சிலந்தி என உயிரினங்களின் உருவங்களாகவும், மாறுபட்ட சங்கேத உருவங்களாகவும் பொறிப்பட்டிருக்கின்றன. மனிதர்களால் உருவாக்க சாத்தியம் இல்லாத இவற்றை ஏலியன்கள் வரைந்திருப்பார்கள் என்பது ஒரு வாதம். வானத்தில் இருந்து கடவுள் பார்ப்பார்என்ற நம்பிக்கையில் மக்கள் இதை வரைந்திருப்பார்கள் என்பது இன்னொரு வாதம். இன்றுவரை தொடரும் மர்மமான நாஸ்கா கோடுகள் 1553-ம் ஆண்டு முதல்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
பங்கார் கோட்டை: 

இராஜஸ்தானில் இருக்கும் இந்தக் கோட்டை நம்ம ஊர் பேய்க்கதையைப் போல பிரசித்தி பெற்றது. இந்தியாவின் பயங்கரமான இடமாகக் கருதப்படும் இது, 1573-ல் கட்டப்பட்டதாம். இந்தக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் மந்திரவாதி ஒருவரால் சபிக்கப்பட மர்மமான முறையில் இறந்தார்கள். அப்புறமென்ன? வழக்கம்போல இறந்தவர்கள் அனைவரும் ஆவியாக அலைந்து திரிய, இன்றுவரை இரவில் யாரும் இந்த கோட்டைப் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லையாம்!


No comments:

Post a Comment