Thursday, August 20, 2020

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடங்குவது எப்படி?

பல்கலைக்கழகம் / நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சங்கங்கள், அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஆகியவை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (Non Government Organisation-NGO) என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றன.

மத்திய - மாநில அரசு ஆகியவற்றின் மொத்த செலவில் 60% இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் செலவிடப்படுகிறது. இந்தியா முழுவதும் 44 லட்சம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அதில் 1.60 லட்சம் தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

கல்வி, சட்ட ஆலோசனை, ஊனமுற்றோருக்கு உதவி, குழந்தைகள் / முதியோர் இல்லங்கள், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தொழில் முனைவோருக்கு ஆலோசனை, மருத்துவம், சொட்டு மருந்து, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்குப் பயிற்சி/வழிகாட்டல், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாடு, ஆராய்ச்சி, சுய தொழில் பயிற்சிகள், கண்காட்சிகள், இயற்கை வேளாண்மை, விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலம், வேலைவாய்ப்பு முகாம்கள், மூளை வளர்ச்சி குன்றியோருக்கு உதவிகள்/மருத்துவ உதவி, கலை மேம்பாடு, நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிகள், தொழில்களில் பயிற்சி / மேம்பாடு என 150க்கும் மேற்பட்ட பொதுச் சமூகப் பணிகள்/ சேவைகளை இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

மத்திய அரசு, மாநில அரசுத் துறைகள், நிறுவனங்கள், வாரியங்கள், பெரிய சங்கங்கள், அறக்கட்டளைகள், அகில இந்திய ஆராய்ச்சி மையங்கள், காமன்வெல்த் செயலகம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, வெளிநாட்டு அரசுகள், சங்கங்கள், தூதரகங்கள் இந்த NGOக்களுக்கு ஆலோசனை, கடனுதவி, மானியம், பயிற்சிகள் என பல உதவிகளைச் செய்து வருகின்றன.

சமீபத்தில் பல தொண்டு நிறுவனங்கள் மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட், சரிவரக் கணக்கு காட்டாத சங்கங்கள் கணக்கு காட்டவும், தங்கள் வருமான வரிப் பதிவை நீட்டிப்பு செய்யாத அறக்கட்டளைகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும், வருமானத் துறையும் சரிவர இயங்காத நிறுவனங்களை ரத்து செய்து வருவதால், முறையாகக் கணக்குகளை பராமரிக்கும், சரியாக செயல்படும் சங்கங்களும், அறக்கட்ளைகளும் மிகச் சிறப்பாக அரசுகளின் உதவிகளைப் பெற்று பெரிய அளவில் பலருக்கும் உதவிவருகின்றன.

பல்லாயிரம் சங்கங்கள், ஜாதிச் சங்கங்கள், பல்வேறு பொருட்களைத் தயாரிப்போர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், கல்விப் பணி, இலக்கியப் பணி மற்றும் ஊனமுற்றோருக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. பல்கலைக்கழகங்களைத் தொடங்குவது என்றால்தான் பல கோடிகள் செலவிட வேண்டும்.

ஆனால், இந்த சங்கங்கள் தொடங்க பதிவுச் சட்டப்படி (Indian Societies Registration Act 1982) பதிவு செய்ய சில ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். மாவட்டப் பதிவாளரிடம் சென்று அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து குறைந்தது 9 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ரூ.555 கட்டணம் செலுத்தினால் போதும் பதிவுச் சான்றிதழ் பெற்றுவிடலாம்.

இதை வைத்து சங்கத்தின் பெயரில் PAN கார்டு வாங்கி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். வருமான வரித் துறையில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அது சரியான சங்கமாக செயல்பட முடியும். அனைவரின் உதவி, மானியம், நன்கொடை பெறலாம். ஒவ்வொரு வருடமும் மாவட்டப் பதிவாளரிடம் கணக்கு காட்டி சங்கத்தை புதுப்பிக்க வேண்டும்.

அதேபோல் அறக்கட்டளை தொடங்குவது மிக மிக எளிதாகும். அறக்கட்டளைகளில் குடும்ப அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளை, பப்ளிக் (Public) அறக்கட்டளை, சாரிட்டேபிள் அறக்கட்டளை என்று பல வகைகள் உண்டு. தொடங்க விரும்பும் நிர்வாக அறங்காவலர், தேவையான DEED எனப்படும் அறக்கட்டளை ஆவணத்தை வழக்கறிஞர் அல்லது ஆடிட்டர் மூலம் டைப் செய்து அறங்காவலர் வசிக்கும் பகுதிக்கான சார் பதிவாளரிடம் சென்று பதிவு செய்ய வேண்டும்.

பதிவு பெற்றதும், அந்த ஆவணத்தைக் கொண்டு PAN கார்டு அந்த ‘அறக்கட்டளை’ பெயரில் வாங்க வேண்டும். பின் அறங்காவலர் சேர்ந்து வங்கியில் கரன்ட் அக்கவுன்ட் தொடங்கி, பிறகு வருமான வரித்துறையில் 10A எனப்படும் பதிவு எண் பெற்று, ஒவ்வொரு வருட இறுதியிலும் கணக்கு காட்டி ரினிவல் செய்ய வேண்டும்.

85G சட்டப்படி வருமான வரி விலக்கும் பெறலாம். 150க்கு மேற்பட்ட சமூக சேவைகளை அறக்கட்டளை / சங்கங்களால் செய்ய முடியும். யாரும் இந்த NGOக்களைத் தொடங்கலாம். மேலும் இது பற்றி அறிய www.karmayog.org, www.nabard.org, www.tamilnaduwomen.com, www.ngosindia.com ஆகிய இணையதளங்களைப் பாருங்கள். 

நன்றி - குங்கும சிமிழ்

No comments:

Post a Comment