சூரியகுமாருக்கு மிகவும் பழக்கமான ஆன்மிக அன்பர் ஒருவர், ‘‘மனதில் ஒரு குருவை நினைத்துக் கொள். அவரையே சரண் அடைந்து விடு. அவரிடம் உன் பிரார்த்தனையை வை. நிச்சயம் உனக்கு என்ன தேவையோ, அதை அருளுவார்’’ என்று சொல்லி இருந்தார்.
அதன்படி தன் குடும்பத்துக்கு மிகவும் இஷ்டமான காஞ்சி மகா ஸ்வாமிகளையே குருவாக மனதில் வரித்துக்கொண்டு, அவரிடம் தன் பிரார்த்தனையை வைத்தார். தினமும் மகா ஸ்வாமிகளை வணங்கினார். நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தன.
அன்றைய தினம் மகர சங்கராந்தி. இரவு சூரியகுமாரின் கனவில் மகா பெரியவா வந்தார். சூரியகுமாரிடம், ‘எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்’ என்று கேட்டார் பெரியவா. சிலிர்ப்புடன் துணுக்குற்று எழுந்தார் சூரியகுமார். ‘பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்கிறாரே… எப்படியாவது காஞ்சிபுரம் சென்று அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும்’ என்று அந்த நள்ளிரவிலேயே மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதற்கேற்றாற்போல் அப்போது மகா பெரியவா காஞ்சிபுரத்தில்தான் இருந்தார்.
அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் சென்னை நகர் முழுதும் கொய்யாப்பழத்தைத் தேடி அலைந்தார் சூரியகுமார். அது சீஸன் இல்லாததால், எங்கேயும் கொய்யாப்பழம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக சூரியகுமாரின் அண்ணன் ரவிகுமார் பாரிமுனையில் ஒரு கடையில் இருந்து கொய்யாப்பழங்களை எப்படியோ தேடி வாங்கி வந்து விட்டார்.
மாட்டுப் பொங்கல் அன்று காலை ரவிகுமார், சூரியகுமார் & இருவரும் தம்பதி சமேதராக காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் புறப்பட்டனர். பெரியவா கேட்ட கொய்யாப்பழத்தோடு வேறு சில பழங்களும் வாங்கி வைத்திருந்தனர்.
விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் தாங்க முடியாத கூட்டம். பெரியவாளின் சந்நிதிக்குச் சென்று திரும்புவதே சிரமம் என்பதால், சென்னையில் இருந்து வந்திருந்த பல பக்தர்களும் தொலைவில் இருந்தே மகா பெரியவாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்கள் !
இத்தனை கூட்டத்தில் நீந்திப் போய் எப்படிப் பெரியவாளிடம் சென்று, கொய்யாப்பழங்களைக் கொடுப்பது என்று சகோதரர்கள் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர்
அந்த நண்பரும், இவர்களை முகம் மலரப் பார்த்துவிட்டு, ‘என்ன?’ என்பது போல் கேட்டார்.
அதற்கு சூரியகுமார், ‘‘பெரியவா நேத்து என் கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதான் வாங்கிண்டு வந்திருக்கோம். பெரியவாகிட்ட அதைக் கொடுத்துட்டு ஆசிர்வாதம் வாங்கணும்’’ என்றார்.
அந்த நண்பரின் முகம் மாறியதே பார்க்கணும். ‘‘தோ பாருப்பா… நீ என் ஃப்ரெண்டுதான். அதுக்காக, பெரியவாளை உடனே பாக்கணும்கறதுக்காக ‘என்கிட்ட கொய்யாப்பழம் வாங்கித் தரச் சொன்னார். மெட்ராஸ்லேர்ந்து வாங்கிண்டு வந்திருக்கேன்’னு பொய்யெல்லாம் சொல்லாதே’’ என்று படபடவென்று பேச… ரவிகுமாரும் சூரியகுமாரும் அதிர்ந்தார்கள்.
கேட்டவருக்குத் தெரியாதா, இதை எப்படி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று?!
“இன்னிக்கு எத்தனை நேரமானாலும் பரவால்லை. வரிசையில் நின்னு, இந்தக் கொய்யாவை பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுத்தான் மெட்ராஸ் கௌம்பப் போறோம்’’ என்று தன் அண்ணன் ரவிகுமாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார் சூரியகுமார். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் அதே வரிசையில் இணைந்தனர்.
பெரியவா கேட்ட கொய்யாப்பழங்களை மட்டும் பயபக்தியுடன்
தன்வசம் ஒரு பையில் வைத்துக்கொண்ட சூரியகுமார், அவர் சந்நிதானத்தில் சமர்ப்பிக்கவேண்டிய மற்ற பழங்களைத் தன் அண்ணன் ரவிகுமாரிடம் கொடுத்தார்.
மதியம் ஒண்ணரை மணி வாக்கில் பெரியவா திருச்சந்நிதி அருகே வந்துவிட்டனர் சூரியகுமாரும் ரவிகுமாரும். இருவர் முகங்களிலும் பெரியவாளை தரிசிக்கப் போகிற பரவசம். அந்த மகானின் அருகே நெருங்கிவிட்டோம் என்கிற ஆனந்தம். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் எங்கும் முழங்கியபடி இருந்தது.
பெரியவா தன் வலக் கையை உயர்த்தி, தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சகோதரர்கள் இருவரையும் பார்த்து ஆசிர்வதித்தார். கனிவும் புன்னகையும் மாறா முகத்துடன் இருவரையும் தன் பார்வையால் ஏறிட்டார் பெரியவா.
கொய்யாப்பழங்கள் இருந்த பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மகா ஸ்வாமிகளின் அருகே கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக அவரது திருமுகத்தையே ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் சூரியகுமார். பக்திப் பரவசத்தின் வெளிப்பாடாக அவரது கண்கள் கலங்கிக் காணப்பட்டன.
‘‘பெரியவாளை எப்படியும் இன்னிக்கு தரிசனம் பண்ணியே ஆகணும்னு ஒரு சங்கல்பம்.. அதான் குடும்பத்தோட புறப்பட்டு வந்துட்டோம்’’ சூரியகுமார் நா தழுதழுத்தபடி சொன்னார்.
‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டு வந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.
கூடவே, பெரியவாளுக்கு அருகே கைங்கர்யத்துக்காக நின்று கொண்டிருந்த இவர்களின் நண்பரும் (‘பெரியவா தரிசனத்துக்காகப் பொய் சொல்லாதே’ என்று சொல்லி விட்டுச் சென்றாரே, அவர்தான்!) அதிர்ந்து போனார். ‘இதைத்தானே முதலில் என்னிடம் சொன்னார். பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றல்லவா சொன்னார்?! நான் அதைக் கிண்டலும் கேலியுமாக பரிகசித்துவிட்டு வந்தேனே’ என்று தனக்குள் மருகினார். ‘என்னை மன்னிச்சிடுப்பா’ என்று சூரியகுமாரைப் பார்த்துச் சொல்லாத குறையாகக் கையெடுத்துக் கும்பிட்டார், மன்னிப்புக் கோரும் தொனியில்!
பெரியவாளே வாய் திறந்து கேட்டதும், துணிப்பையில் இருந்து கொய்யாப்பழங்களை பரபரப்புடன் வெளியில் எடுத்தார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதிக்கு முன்னால் இருக்கிற ஒரு காலி மூங்கில் தட்டில் அவற்றை வைத்தார்.
அந்தப் பரப்பிரம்ம சொரூபி மூங்கில் தட்டைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து ஒரு கொய்யாவைத் தன் கையில் எடுத்தார். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து நல்ல பழுத்த பழமாகக் காட்சி அளித்தது பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த கொய்யா. தன் வலது உள்ளங்கையில் அதை வைத்துக்கொண்டு இடது உள்ளங்கையால் அதன் மேல் ஒரு அழுத்து அழுத்தினார். அவ்வளவுதான். கொய்யாப்பழம் ‘பொளக்’கென இரண்டு சரி பாதியாக உடைந்தது.
க்ஷண நேரத்துக்குள் ஒரு பாதியைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார் மகா பெரியவா. மற்றொரு பாதியை சூரியகுமாரிடம் கொடுத்து அவரையும் அவருடைய மனைவியையும் சாப்பிடச் சொன்னார்.
மிகுந்த பவ்யத்துடன் பெரியவா தந்த பிரசாதமான பாதி கொய்யாவை வாங்கிக்கொண்டார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதியிலேயே சாப்பிடும்படி உத்தரவானது. எனவே, பாதி கொய்யாவில் ஒரு பகுதியை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மறு பாதியைத் தான் சாப்பிட்டார்.
அங்கு கூடி இருந்த அனைவரும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள். ‘இந்தத் தம்பதிக்கு எப்பேர்ப்பட்ட ஆசி கிடைத்திருக்கிறது’ என்று நெகிழ்ந்து போனார்கள்.
அதன்பிறகு கொய்யாப்பழத்தின் சிறப்பு, அதன் மருத்துவ குணம், என்னென்ன நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நீண்ட உரையாற்றினார் மகா பெரியவா. சூரியகுமார் குடும்பம் உட்பட வந்திருந்த அனைவரும் இமை கொட்டாமல் இந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
‘கொய்யாப்பழ படலம்’ முடிந்தது. மகா பெரியவா எழுந்து தன் ஜாகைக்குச் சென்றார். பக்தர்கள் கன்னத்தில் போட்டு தரிசித்துவிட்டு, அங்கிருந்து நகர ஆரம்பித்தனர்.
மதியம் ஸ்ரீமடத்திலேயே போஜனத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினர் சூரியகுமார் குடும்பத்தினர்.
அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே கர்ப்பம் தரித்தார் சூரியகுமாரின் மனைவி.
பெரியவா தந்த பிரசாதத்தின் மகிமை அதுதான்.
அதுவும் பெரியவாளே விருப்பப்பட்டுக் கனவில் கேட்டு வாங்கி, திரும்பித் தந்த பிரசாதம் ஆயிற்றே!
பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்தோடு சூரியகுமார் தம்பதிக்குத் தாமதமாகப் பிறந்த ஒரே மகளான மதுராம்பிகா, தற்போது பொறியியல் படித்து வருகிறாள்
No comments:
Post a Comment