“நான் சூப்பர் மார்க்கெட்டில்தான் பொருட்களை வாங்குகிறேன். கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று சிலர் கூலாகச் சொல்வார்கள். அதிக விலைகொடுத்து வாங்கினால் கலப்படம் இருக்காது என்பதும் பலரின் நம்பிக்கை. உண்மையில் பாலில் தொடங்கி பனீர் வரை எங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் சர்வசாதாரணமாகக் கலப்படங்களைச் செய்கிறார்கள் கலப்பட மன்னர்கள். தரம் குறைந்த பொருட்களை வாங்கிவந்து, செயற்கை நிறம் கலந்தும் பாலீஷ் செய்தும் தரமான பொருட்களைப் போல விற்கிறார்கள்.
குறைவான விலை என்பதாலும், நம்மை எல்லாம் ஒன்றும் செய்யாது எனும் அசட்டு நம்பிக்கை காரணமாகவும் கலப்படப் பொருட்கள் விற்பனை எந்தத் தடையும் இன்றி நடந்துகொண்டே இருக்கிறது.
கலப்படம் என்பது, ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, உயிருக்கே உலைவைத்துவிடும் மரண வியாபாரம். அது ஒரு சமூக அநீதி எனும் புரிதலும் விழிப்புஉணர்வும் விற்பவர்களுக்கும் தேவை. நுகர்வோருக்கும் தேவை.
கலப்படத்தைக் கண்டறிய…
*****************************************
1) டீ
– கடைகளில் பயன்படுத்திய டீ தூள் கசடை (Tea dust) குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்கின்றனர். குறைவான விலையில் கிடைக்கும் டீ தூள்களில், இந்த சிவப்பு நிறம் கலக்கப்படுகிறது. சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளிகள் நீர் விட்டால், சிவப்பு நிறம் தனியே பிரிவது தெரியும். குறிப்பாக, ஊர்களை மையப்படுத்தி விற்கும் ஸ்பெஷல் டீ தூள்கள் பெரும்பாலும் கலப்படங்களே.
2) கடுகு
– தரமான கடுகை, கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். கசகசா வகையைச் சார்ந்த அர்ஜிமோன் விதைகள் கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.
3) மஞ்சள் தூள்
– மஞ்சள் தூளில், ஸ்டார்ச் பவுடர் மற்றும் மெட்டானில் எல்லோ எனும் ரசாயனம் கலக்கப்படுகின்றன. அரை ஸ்பூன் மஞ்சள்தூளை, 20 மி.லி இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் மெட்டானில் எல்லோ கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.
4) பச்சைமிளகாய், பச்சைப் பட்டாணி
– பச்சைமிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிவதற்காக, மாலசைட் கிரீன் (Malachite green) எனும் ரசாயனத்தில் முக்கி விற்கப்படுகின்றன. இதேபோல, உலர் பட்டாணி ஊறவைக்கப்பட்டு, மாலசைட் கிரீன் கலந்து ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் விற்கப்படுகிறது. இவற்றை வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால், அதில் மாலசைட் கிரீன் கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
5) பட்டை
– பட்டையில், கேசியா (Casia), சுருள் பட்டை (Cinnamon) எனும் இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகள் நிறம் சேர்த்துக் கலக்கப்
படுகின்றன. ஓரிரண்டு பட்டையைக் கசக்கிப் பார்த்தால், கைகளில் எந்த நிறமும் ஒட்டக் கூடாது.
6) மிளகு
– பப்பாளி விதைகளைக் காயவைத்தால், மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில் மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது. மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில் 50 மி.லி தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட வேண்டும். மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.
7) சீரகம்
– சீரகத்தில், குதிரைச் சாணம் சேர்க்கப்படுகிறது. தவிர, அடுப்புக் கரியும் சேர்க்கின்றனர். சீரகத்தைத் தண்ணீரில் போட்டால், சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சீரகம் போன்ற தோற்றம்கொண்ட ‘சதகுப்ப’ எனும் பொருளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். இதைப் பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே கண்டறிய முடியும்.
8) டீலக்ஸ் தனியா
– தனியா அடர்பழுப்பாக இருக்கும். ஆனால், டீலக்ஸ் தனியா என்பதை வெள்ளையாக மாற்ற, சல்பர் டை ஆக்சைட் சேர்க்கப்படுகிறது. வெள்ளையாக்கப்பட்ட தனியாவைத் தவிர்த்துவிடலாம். அதுபோல, ஒரு ஸ்பூன் தனியா தூளில் தண்ணீர் விடும்போது, மேலாக தூசு போல படிந்தால் அதில் மரத் தூள் கலந்திருக்கலாம்.
9) ஜவ்வரிசி
– மஞ்சள் நிறமாக இருக்கும் ஜவ்வரிசி டினோபால் போன்ற, பளீர் வெள்ளை நிறத்தைத் தரும் ரசாயனங்களால் தீட்டப்
படுகிறது. சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துங்கள்.
10) பால்
– அதிகாலை கறக்கும் பால் சில்லிங் சென்டருக்கு போகும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. பாலையும் தண்ணீரையும் 10 மி.லி அளவில் சமமாகக் கலக்கும்போது, நுரை வந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம். மேலும், அருகில் விற்கும் பால்காரரிடம் பால் வாங்குவதே கலப்படங்களிலிருந்து தப்பிக்க எளிய வழி.
11) மிளகாய்த் தூள்
– இதில், புற்றுநோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளைக் கலக்குங்கள். அதில் பளீர் சிவப்பு வண்ணம் வெளிவந்தால், அதில் சிவப்பு வண்ணம் கலந்திருக்கலாம்.
12) தேங்காய் எண்ணெய்
– தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வையுங்கள். தடிமனான திக்கான படிமம் எண்ணெயின் மேல் படிந்தால், அது சுத்தமான தேங்காய் எண்ணெய். நீர்த்த நிலையில் அப்படியே இருந்தால், அதில் மலிவான எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.
13) தேன்
– பஞ்சைத் தேனில் நனைத்து, நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனைத் தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும். கரைந்தால், அது வெல்லப்பாகு.
14) காபி பொடி
– ஒரு கிளாஸ் தண்ணீரில் காபி பொடியைப் போட்டதும், காபி பொடி மேலே மிதக்கும். சிக்கரி கலந்திருந்தால், நீரில் மூழ்கும்.
15) எண்ணெய்
– எண்ணெயை ரீஃபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம். எண்ணெயில், 20 சதவிகிதம் அளவுக்கு வேறு ஒரு எண்ணெயைக் கலக்கலாம். அரசின் இந்த அனுமதி, பல கலப்படங்களுக்குக் காரணமாக இருக்கிறது.
16) தோசை மாவு
– மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுகிறது. இதில் சுகாதாரமற்ற தண்ணீர் சேர்ப்பதால் இ-கோலை பாக்டீரியா (மலக்கழிவில் இருக்கும் கிருமி) இருக்கும். பல நோய்களை உருவாக்கும் கிருமி இது. எனவே, வீட்டில் மாவு அரைத்துச் சாப்பிடுவதே நல்லது.
17) பனீர்
– ஒரு கப் தண்ணீரில் ஒரு பனீர் துண்டைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஆறியதும், சில துளிகள் அயோடின் சொல்யூஷன் கலக்கவும். பனீர் நீல நிறமாக மாறினால், அது கலப்படம். பனீர் தயாரிக்கப்பட்ட பாலில் கஞ்சி, மாவுப் பொருட்கள் (Starch) கலந்திருக்கலாம்.
18) நெய்
– வனஸ்பதி அல்லது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு கலந்திருக்கும். இதைப் பரிசோதனை மையங்களில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெண்ணெயை வாங்கிக் காய்ச்சுவது நல்லது.
யாரிடம் புகார் செய்யலாம்?
*****************************************
தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். எந்தப் பொருளால் உடல்நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளைப் பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் எனத் தெரிந்தால், விற்றவர் மற்றும் தயாரித்தவர் மேல் வழக்குப் போடப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் பரிசோதனைக்குச் செலவான பணமும் திரும்ப வழங்கப்படும். நுகர்வோருக்கு உண்டான அலைச்சல், மன உளைச்சலுக்குத் தகுந்த தொகை தரப்படும்.
பாதிப்புகள்
*******************
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அனுமதிக்கப்படாத வண்ணங்கள் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். அர்ஜிமோன் விதைகள், பெட்ரோலிய பொருளான மினரல் ஆயில் போன்றவையும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதே. ஆப்பிள் மேல் பூசப்படும் மெழுகில் ‘லெட்’ இருக்கிறது. இது வாந்தி, வயிற்றுப்போக்கில் தொடங்கி நரம்பு மண்டலத்தையே பாதிக்கலாம். உணவால் ஏற்படும் கழிவுகளைச் சிறுநீரகமும் கல்லீரலும் சுத்தம் செய்கின்றன. வீரியமுள்ள ரசாயனங்களால் இந்த இரண்டு உறுப்புகளும் பாதித்து, செயலிழந்து போக நேரிடும். எப்போதோ ஓரிரு முறை கலப்பட உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. மாதங்கள், ஆண்டுகள் எனத் தொடர்ந்து சாப்பிடும்போது, உடல்நலம் கெடுவது உறுதி. உடலை உருக்குலைக்கும் நோய்களுக்கான வாசலும் இதுவே