லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.
லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.
மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.
புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது மியூரல் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை.
இவருடைய கலைத்துவ வேலைகளிலும் பார்க்க அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.
அறிவியல் சம்பந்தமான இவரது அணுகுமுறை அவதானிப்பு சார்ந்தது. விபரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். சோதனைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விபரமான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு லத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், லியோனார்டோ என்ற விஞ்ஞானி அக்கால அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment