விருதுகளும் பெருமைகளும்
சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருதுக்காகவும், தி கிரேட் டிக்டேடர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டாலும், விருதுகள் பெறவில்லை. 1972 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 1952 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டாலும் மெக்கார்த்திசத்தினால் சாப்ளினுக்கேற்பட்ட பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்சில் வெளிவரவில்லை. 1972 ஆம் ஆண்டிலேதான் விருதுக்குத் தேர்வாவதற்கான கட்டுப்பாடுகளை நிறைவு செய்தது. "லைம்லைட்" திரைப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தனர். இதுவே இவ்விரு நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம்.
மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார். இவருக்கு இந்தப் பெருமையை வழங்கக் கோரி 1956ஆம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது. சாப்ளின் ஒரு பொதுவுடைமையாளர் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள். அக்காலத்தில் தான் பனிப் போர் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது; மேலும் சூயஸ் கால்வாயினை கைப்பற்றும் முயற்சியும் இரகசியமாக திட்டமிடப்பட்டு வந்தது.
சாப்ளின் "ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்" இடம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதனை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற சர். ரிச்சர்ட் அட்டன்பரோ. இதில் நடித்தவர்கள் ராபர்ட் டௌனி ஜூனியர், டான் ஐக்ராய்ட், ஜெரால்டின் சாப்ளின் (சாப்ளினின் மகள் சாப்ளினின் தாயாக நடித்திருந்தார்), சர் அந்தோனி ஹாப்கின்ஸ், மில்லா ஜோவோவிச், மொய்ரா கெல்லி, கெவின் கிலைன், டயானா லேன், பெனிலோப் ஆன் மில்லர், பால் ரைஸ், மரீசா டோமை, நான்சி டிராவிஸ் மற்றும் ஜேம்ஸ் வுட்ஸ்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்"கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள்.
சாப்ளினைப் பற்றிய சுவையான செய்திகள்
1) சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
2) சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார்.
3) சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
No comments:
Post a Comment