Monday, December 17, 2012

காக்கோரி ரயில் கொள்ளை!

இந்திய விடுதலைப் போர் காந்தியின் வழிகாட்டுதலில் பெரும்பாலும் சாத்வீகப் போராகத்தான் இருந்தது. எனினும் வெள்ளை அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களாலும் சுரண்டல் கொள்கைகளாலும் அதிகார ஆணவத்தாலும் வெறுப்புற்ற பொது மக்கள் ஆங்காங்கே ரகசியமாகப் புரட்சி இயக்கங்களையும் நடத்தினர். அந்த இயக்கங்கள் கொலை, கொள்ளை, பழிவாங்குதல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டன. அவற்றுள் ஒன்
று ரயில் வண்டிகளில் போகும் அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தல் ஆகும்.

1853-இல் முதல் ரயில் வண்டி பம்பாயிலிருந்து தாணாவுக்கும் அடுத்தது 1854-இல் ஹெளரா-ஹூக்ளிக்கு இடையிலும் விடப்பட்டது. 1900-க்குள் இந்தியாவின் பல பாகங்களும் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டன. அப்படி ஒரு வண்டி லக்னொவையும் ஷாஜஹான்பூரையும் இணைத்தது.

1897-இல் ஷாஜஹான்பூரில் பிறந்த பிஸ்மில் ராம் பிரசாத் இளமையிலேயே பள்ளிப் படிப்பை விட சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்ற விரும்பினான். அதற்குப் புரட்சி வழியைத் தேர்ந்தெடுத்தான். 1925-இல் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கல் அசோசியேஷன் என்ற அமைப்பைத் துவக்கினான். ஒருவனது கடுமையான உழைப்பினால் மற்றொருவன் பணக்காரன் ஆவதோ, ஒருவன் மற்றவனுக்கு எஜமானன் ஆவதோ தவறு. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதே அந்த அமைப்பின் நோக்கம். ஆனால் புதிய அமைப்பை வளர்ப்பதற்கு வேண்டிய பணத்திற்கு எங்கே போவது? தன் நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். அவர்களும் அவனைப் போல் 20-25 வயது இளைஞர்கள், எந்தவிதமான அனுபவமும் இல்லாதவர்கள்.

ஒருநாள் ராம்பிரசாத் ஷாஜஹான்பூரிலிருந்து ரயிலில் லக்னெü போய்க் கொண்டிருந்தான். வண்டி பல ஸ்டேஷன்களில் நின்றது. நின்ற இடங்களில் எல்லாம் பணப் பைகள் ஏற்றப்பட்டதைக் கண்டான். "இந்தப் பணத்தையெல்லாம் நாம் எடுத்துக் கொண்டால் என்ன?' என்ற எண்ணம் திடீரென அவனது உள்ளத்தில் பளிச்சிட்டது.
லக்னொவிலிருந்து ஊருக்குத் திரும்பிய பின் சில நெருக்கமான நண்பர்களை ஷாஜஹான்பூருக்கு வருமாறு சொல்லி அனுப்பினான். அவர்களும் வந்தார்கள்.

அஷ்ஃபகுல்லா கான் செல்வக் குடும்பத்தில் பிறந்தவன். ராம் பிரசாதைவிட மூன்று வயது சிறியவன். இருவருக்கும் சொந்த ஊர் ஷாஜஹான்பூர். லாஹிரி ராஜேந்திரநாத் காசியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தான். தட்சிணேஸ்வரில் வெடிகுண்டு தயாரிப்பதைக் கற்றான். தாய்நாட்டு பக்தி மிகுந்தவன். மற்றொரு நண்பன் ரோஷன் சிங்கும் ஷாஜஹான் பூரைச் சேர்ந்தவனே-

பிஸ்மில் ராம் பிரசாத் தன் திட்டத்தை விவரித்தான்:

"ஷாஜஹான்பூர் - லக்னொ மெயில் வண்டியில் குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கார்டு வண்டியில் பணம் ஏற்றப்படுகிறது. கார்டைத் தவிர விசேஷமாகக் காவல் எதுவுமில்லை. ரயிலை நிறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக் கொள்வது மிக எளிதாகச் செய்யக்கூடியது. அரசாங்கப் பணம் கொடுங்கோலர்களான ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து பறிக்கும் பணம்தான். அதை எடுத்து நமது அமைப்பை வளர்ப்போம். மக்களுக்கு உதவுவோம். மற்றொரு முக்கியமான விஷயம். நாம் ரயிலில் பயணம் செய்யும் நமது மக்களுக்கு எந்தவிதமான தொல்லையும் தரக்கூடாது.''

விவாதத்திற்குப் பின், ஆள் பலம் தேவை என்பதால் மேலும் நெருங்கிய சிலரைச் சேர்த்துக் கொள்வதென்றும், அந்த வண்டியைப் பல நாட்கள் ஆழ்ந்து கவனித்து அதன்பிறகு தான் திட்டத்தை அமல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பல நாட்கள் அந்த மெயில் வண்டியை கூர்ந்து கவனித்து, அது வரும் நேரம், ஸ்டேஷன்களில் நிற்கும் நேரம், கார்டு, வண்டி, அங்கே பணம் வைக்கப்படும் இடம், வைக்கப்படும் முறை, வண்டியில் உடன்வரும் காவல் ஏற்பாடுகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்த பின்னர், காக்கோரி ரயில் நிலையத்துக்கருகில் ஜனசஞ்சாரமற்ற இடத்தில் ரயிலை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடித் தப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது.

1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் 8 ரயில் வண்டி ஷாஜகான்பூரிலிருந்து லக்னொயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வண்டி காக்கோரியை நெருங்கிய நேரத்தில் புரட்சிக்காரர்களில் ஒருவன் அபாயச் சங்கிலியை இழுக்க, ரயில் நின்றது. அதன் காரணத்தை அறியும் பொருட்டு விரைந்து வந்த ரயில்வே கார்டை செயலற்றவராகச் செய்துவிட்டு, புரட்சிக்காரர்கள் கார்டு வண்டியிலிருந்த பணப் பெட்டியின் பூட்டை உடைத்து, அதிலிருந்து அரசாங்கப் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு லக்னொவுக்குத் தப்பியோடினர்.

உண்மையில் வண்டியை நிறுத்திப் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பத்தே பத்து பேர்தான். உடனடியாக அரசாங்கம் தீவிர விசாரணையில் இறங்கியது. ஷாஜஹான்பூர், ஆக்ரா, அலகாபாத், காசி, கொல்கத்தா, எட்டாவா, ஹர்டோய், கான்பூர், லாகூர், லக்கிம்பூர், லக்னொ, மதுரா, மீரட், ஓரை, பூனா, ராய்பரேலி, ஷாஜஹான்பூர், டெல்லி, பிரதாப்கர் ஆகிய பதினெட்டு இடங்களிலிருந்து 40 பேர் கைது செய்யப்பட்டனர். முதன் முதலாக 1925 செப்டம்பர் 26-ந்தேதி ஷாஜஹான்பூரில் பிஸ்மில் ராம்பிரசாத், ரோஷன் சிங் மற்றும் ஏழு பேர் போலீசாரிடம் சிக்கினார்.

ராஜேந்திரநாத் லாஹிரி கல்கத்தாவில் பிடிபட்டான். அஷ்ஃபகுல்லாகான் பத்து மாதங்களுக்குப் பின் வழக்கு முடிந்து தீர்மானிக்கப்பட்ட பிறகே டெல்லியில் கைது செய்யப்பட்டு, மீண்டும் வழக்கு நடத்தப்பட்டு தண்டனை பெற்றான். ஷாஜஹான்பூரைச் சேர்ந்த பனாரசிலாலும், இந்து பூஷன் மித்ராவும் அப்ரூவர் ஆனார்கள். ஐந்து பேர் தலைமறைவானார்கள். அவர்களில் இருவர் பின்னர் பிரபலமானார்கள். சந்திரசேகர் ஆசாதும், கேசவ் சக்கரவர்த்தி என்ற பெயரில் மறைந்து வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவாரும்.

சந்திரசேகர் ஆஸாத் 1928-ல் ஹிந்துஸ்தான் புரட்சி இயக்கம் துவங்கினார். 1931 பிப்ரவரி 27-ம் நாள் போலீஸ் தாக்குதலில் மாண்டார்.

சரியான சாட்சியங்கள் இல்லாததால், வழக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் பேரில் (ராம்பிரசாத் பிஸ்மல்லும் பிறரும்) செக்ஷன் 121-ன் கீழ் (பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தல்), செக்ஷன் 120 (அரசியல் சதி), செக்ஷன் 396 (கொள்ளையும் கொல்லையும்), செக்ஷன் 302 (கொலை) ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன. வழக்கு 1926 மே 21-ந் தேதி தொடங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட இளம் தேச பக்தர்கள் சார்பில் பிரபலமான தலைவர்கள் கோவிந்த வல்லப பந்த், மோகன் லால் சக்சேனா, சி.பி.குப்தா, சுஜீத் பிரசாத் ஜெயின் மற்றும் சிலர் அடங்கிய ஒரு குழு வழக்கை நடத்தியது. மோதிலால் நேரு, மாளவியா, மகமது அலி ஜின்னா, லாலா லஜபத் ராய், ஜவஹர்லால் நேரு, கணேஷ் சங்கர் வித்யார்த்தி, சிவ பிரசாத் குப்தா, ஸ்ரீபிரகாசா, ஆசார்ய நரேந்திர தேவ் ஆகியோர் ஆதரவளித்தனர். சிறப்பு செஷன்ஸ் நீதிபதி ஒ.ஹாமில்டன் வழக்கை விசாரித்தார், பண்டிட் ஜகத் நாராயண் முல்லா சர்க்கார் தரப்பு பிராசிகியூட்டர்.

இன்று போல் அல்லாமல் வழக்கு ஒரே ஆண்டுக்குள் முடிந்துவிட்டது. ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், ராஜேந்திர நாத் லாஹிரி, ரோஷன் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறருக்கு மூன்றாண்டுகளிலிருந்து பதினான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
நாடெங்கும் இத்தண்டனைகளை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் எழுந்தன.

1927 செப்டம்பர் மாதத்தில் மத்திய சட்டசபை உறுப்பினர்கள் 78 பேர்கள் கையொப்பமிட்ட ஒரு விண்ணப்பத்தை பண்டிட் மதன் மோகன் மாளவியா அரசுக்கு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. செப்டம்பர் 16-ந் தேதி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி, இங்கிலாந்து மன்னருக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. 1927 டிசம்பர் 19-ம் தேதிக்குள் தூக்குத் தண்டனைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டும் என்ற கடுமையான உத்தரவோடு கருணை மனு பிரிவு கெüன்சிலால் நிராகரிக்கப்பட்டது.

1925 ஆகஸ்டு ஒன்பதாம் நாள் ரயில் கொள்ளையினால் எழுந்த இந்திய மக்களின் எதிர்ப்புக் குரல் 1927 டிசம்பரில் நிகழ்ந்த தூக்குத் தண்டனைகளால் அடங்கியது.

தேசபக்த புரட்சிக்கார வாலிபர்களின் ரத்தத்தால் மேலும் நனைந்து சிவப்பாக்கியது பாரத மண், அவர்களது நினைவில் காக்கோரியில் ஒரு நினைவு மண்டபம் எழுந்துள்ளது.

ராம் பிரசாத் ஒரு கவியும் கூட, அவன் பாடிய வரிகள் பிரசித்தமாகிவிட்டன. அதுவே இப்பாடல் வரிகள்:
பிஸ்மில், ரோஷன், லாஹிரி, அழ்ஃபகுல்லா கொடுங்கோன்மையால் உயிரிழக்கின்றனர். ஆனால் அவர்களது ரத்தத்திலிருந்து அவர்களைப் போன்று நூற்றுக்கணக்கானவர் தோன்றினார்கள்.

-மு.ஸ்ரீனிவாஸன் (தினமணி)

No comments:

Post a Comment