பென்னி குயிக்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறாக இல்லை. அவரைப் பற்றி அறிந்த பொறியாளர்கள் மத்தியில் மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். சிறு அளவில் கருத்தரங்குகளில் பேசப்படுகிறார். இப்போது, இந்த மணிமண்டபம் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருப்பதன் மூலம், தமிழர் அனைவருக்கும் குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு இந்த மாபெரும் மனிதரின் அளப்பரிய சேவை மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார்.
இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.
தெருச் சாக்கடை திட்டத்துக்கும்கூட 10 விழுக்காடு எதிர்பார்க்கும் இந்த நாளில், தன் சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடிக்க பென்னி குயிக் முற்பட்டதன் காரணம், நம்மவர்களைவிட ஆங்கிலேயரான அவர் இந்த மக்களின் வேதனையைப் புரிந்துகொண்டவர் என்பதுதான். அணுக முடியாத காட்டுப் பகுதியில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தது மட்டுமல்ல, எத்தகைய வெள்ளம் வந்தாலும் தாங்கி நிற்கும் அளவுக்கு இந்த அணையைப் புவியீர்ப்பு விசை அணையாகக் கட்டினார். அதாவது, அணையில் 156 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கும்போது, அணையைத் தகர்த்து வெளியேற முட்டுகின்ற நீரின் விசையைத் தாங்கும் அளவுக்கு, அணையின் மொத்த எடை (அல்லது நிறை) இருக்கும் வகையில் அமைக்கப்படுவதே புவியீர்ப்பு விசை அணை! கற்களாலும் சுண்ணாம்பாலும் அமைந்த இந்த அணையின் நிறை மேலும் கூட்டப்பட்டுள்ளதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. ஆனால், 156 அடி உயரத்துக்கு நீர் தேக்காமல், தற்போது 132 அடி உயரம்தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது அணை நீரின் விசை மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், கேரளத்தின் அழுகுணிக் குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
தமிழர் வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணிப்பு செய்த பென்னி குயிக் மணிமண்டப வளாகம், தமிழகத்தின் சிறுவிவசாயிகளுக்கு தங்கள் பகுதி நீராதாரத்தை எப்படிச் செவ்வனே பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லித் தரும் வளாகமாக மாறட்டும்.
No comments:
Post a Comment