Tuesday, September 29, 2015

இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் அப்பேர்ப்பட்ட வசனம்

நமது வைகைப்புயல் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் அப்பேர்ப்பட்ட வசனம் தான் இது:

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…”

இது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இதற்கு பின்னணியில் ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும் என என் பட்சி சொல்லிற்று. சரி அலசித்தான் பார்ப்போமே என்று கூகுள்'ல என் தேடலை ஆரம்பித்தேன்.

எங்கெங்கோ புகுந்து நெளிந்து வளைந்து ஒரு வழியா அந்த விளக்கம் ஒரு வடிவம் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, அடடடா! யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், மேலும் படியுங்கள்…

இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.....??

குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்…

அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில் ஆகி மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.
இது தான்
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…” என்ற விடுகதைக்கான விளக்கம்.

இது தான் சாக்குன்று யாராவது அந்த படத்தில் வரும் இன்னொரு விடுகதைக்கு விளக்கம் கேட்டால் என்ன செய்வது என பதறினேன். யாமிருக்க பயமேன் என மீண்டும் கூகிள் கைகொடுத்தது…

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…”
இதற்கும் புராணத்தை வைத்து விளக்கிவிடலாம். ரொம்ப முத்தீருச்சின்னு நினைக்கிறேன்(!).

தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். சரி, சட்டை எதற்காக போடுகிறோம்? நெஞ்சை மறைப்பதற்கு. தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது, அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள் சரிதான்...??

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?

ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார்.
இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…" என்பதற்கான சிறந்த விளக்கம்…
ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொலவடை உண்டு;

“If you can’t convince them,
Just confuse them!”.

அதாவது, உங்கள் பதில் ஒருவருக்கு திருப்தி அளிக்காது என்று தோன்றினால், அவர் மறுகேள்வி எழுப்பாத வண்ணம் அவரை குழப்பிவிட வேண்டும்.
ரொம்ப சீரியஸான வாழ்க்கைக்கு நடுவில் இந்த மாதிரி நகைச்சுவைகள் தரும் தெம்பே தனி.

No comments:

Post a Comment