Tuesday, September 22, 2015

பண்டையகால தமிழர்களின் கருவி வளரி !!!


வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

அமைப்பு

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பாவிக்கப்பட்ட பூமராங்
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.

எறியப்படும் முறைகள்

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில்கள்ளர் நாடு, சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன்சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் வளரி

“வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது

நன்றி ‘
ஜெய்வந்த் செலவகுமார்

No comments:

Post a Comment