Tuesday, November 18, 2014

டிஎன்பிஎஸ்சி | குரூப் - IV மாதிரி வினா – விடை 1

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது. அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது. அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாண வர்கள் பொது தமிழ் பாடத் தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
`வெற்றிக்கொடி' பகுதி மூலம் உயர்கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக ஏராளமான தகவல்களை மாணவ, மாணவி களுக்கு வழங்கிக் கொண்டி ருக்கும்
இந்து' நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவி களுக்கு உதவும் வகையில் நல்ல தரமான மாதிரி வினா-விடைகளை வெளியிட இருக்கிறது.
டிப்ஸ்.. டிப்ஸ்..
• அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது. இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.
• கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
• முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.
• என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தால் உடனுக்குடன் ஏற்படும் சந்தேகமும், தயக்கமும் நீங்கிவிடும். மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.
• தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும். ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
• உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!

நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)
 

No comments:

Post a Comment