500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கையில் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து தெரிந்து கொள்வோம்..
* நாடுமுழுவதும் இன்று வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்கள் கைகளில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நாளை முதலே மக்கள் வங்கிகள் அல்லது அஞ்சல் நிலையங்களில் மூலம் மாற்ற முடியும்.
* 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் அவற்றைக் கொடுத்து அதே மதிப்புள்ள வேறு ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். ஆனால் 4,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை மாற்ற முயன்றால், 4,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ளவை வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
* நோட்டை மாற்றும்போது புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்களாகவும் பெறலாம். 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்யலாம். பணத்தை மாற்றும்போதோ, டெபாசிட் செய்யும்போதோ அடையாள அட்டைகளில் ஒன்று அவசியம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும். இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* 500, 1000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற கூடுதல் வேலை நேரம் செயல்படவும் வங்கிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. 4,000 ரூபாய் என்பது போதாது என்றால், அதற்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கிச் சேவை, டெபிட் கார்டு ஆகிய வழிகளில் செலவிடலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால், புதிய வங்கிக் கணக்கு தொடங்கி மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.
* ரிசர்வ் வங்கிக் கிளைகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். 4,000 ரூபாய் வரை மாற்ற, எந்த வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தையும் அணுகலாம். அதற்கு மேல் தொகையை மாற்ற, கணக்கு வைத்துள்ள வங்கியை மட்டுமே அணுக வேண்டும்.
* கணக்கு வைத்துள்ள வங்கியின் எந்தக் கிளையிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். வங்கிக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள் பிரதிநிதியை அனுப்பி அத்தாட்சிக் கடிதம் தர வேண்டும். பணத்தை செலுத்துபவர் தனது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
* புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வழங்குவதற்கான தொழில்நுட்பம் வர சில நாட்கள் ஆகலாம். அதன் பிறகு 18-ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 2,000 ரூபாயும், 19-ம் தேதி முதல் 4,000 ரூபாயும் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பிறகு இந்த உச்ச வரம்பு 10,000அதிகரிக்கப்படும்.
*அதேபோல, வரும் 24-ம் தேதி வரை வங்கிகளில் பணமெடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாய் வரையும், காசோலையில் 20,000ரூபாய் வரையும் மட்டுமே பணம் பெற முடியும். அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை வழக்கம்போல ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்யலாம்.
* ரொக்கம் தவிர்த்து, மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான டிக்கெட் ஆகியவை 11-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் ஏற்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் தகவல்கள் உள்ளன. சந்தேகங்கள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02 -22602201, 22602944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment