Friday, November 18, 2016

பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்!

இந்திய மக்களிடம் 80 சதவீதம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணிநேரத்தில் செல்லாக் காசாகி விட்டன. மீதமுள்ள 20 சதவீதம், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை வைத்துதான், கடந்த 8 நாட்களாக மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வங்கிகளில் போதிய அளவு பணம் கையிருப்பு இல்லாததால், நாட்டில் அவரசநிலை ஏற்பட்டுள்ளது போல மக்கள் உணர்கிறார்கள்.

இப்போது இந்தியப் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை கடந்த 40 ஆண்டுகளில் பல நாட்டு அதிபர்களும், சர்வாதிகாரிகளும் எடுத்துள்ளனர். 'கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன், ஊழலைத் தடுக்கிறேன்' என்று கூறி, மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை திடீரென செல்லாது என கானா, நைஜீரியா, மியான்மர், சயீர், வடகொரியா நாடுகளின் சர்வாதிகாரிகளும், சோவியத் யூனியன் அதிபரும் அறிவித்தார்கள். இதன் மூலம் அந்தந்த நாடுகளில் கறுப்புப் பணம் ஒழிந்ததா? பணவீக்கம் குறைந்ததா? மக்கள் சுபிட்சம் அடைந்தார்களா? வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?

1982-ல், கானா நாட்டில், ஊழலை தடுப்பதற்கும், மக்களிடம் அதிகப்படியாக உள்ள பணப்புழக்கத்தை குறைக்கவும் அதிக மதிப்பு கொண்ட பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஏழை மக்களும், விவசாயிகளும் தங்களது பணத்தை மாற்ற பல கிலோ மீட்டர் நடக்க வேண்டியதாயிற்று. இதனால் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, வெளிநாட்டு பணங்களையும், சொத்துக்களையும் வாங்கினர்.

1984-ம் ஆண்டில், நைஜீரியாவை ஆண்டு வந்த முகம்மது புகாரி தலைமையிலான இராணுவ அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை ரத்துசெய்துவிட்டு, புதிய நிறம் கொண்ட புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கையால் விலைவாசி அதிகரித்ததுடன், நாடும் கடன் சுமையில் சிக்கியது.

1987-ம் ஆண்டில், மியான்மரை ஆட்சி செய்த இராணுவ ஆட்சிக் குழு, புழக்கத்திலிருந்த 80 சதவீத பணங்களை செல்லாது என அறிவித்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததால், பெருமளவு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் கொன்றனர்.

1990-களில் ஆப்பிரிக்க நாடான சயீர் (தற்போது காங்கோ மக்களாட்சிக் குடியரசு) நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்தது. இதனால் நாட்டை ஆண்டு வந்த சர்வாதிகாரி மொபுடு சேசே, பணத் தாள் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 1993-ல் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்திற்கு தடை விதித்தார். இந்த சீர்திருத்தம் பொருட்களில் விலைவாசியை பல மடங்கு உயர்த்தியதுடன், அந்நாட்டு பணத்தின் டாலருக்கு மாற்று விகிதமும் அதலபாதாளத்திற்குச் சென்றது. அதன் பிறகு உள்நாட்டுப் போர் ஏற்பட்டு, மொபுடு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்து கொண்டிருந்த, கோர்பசேவ், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அதிக மதிப்புள்ள ரூபிள்களை செல்லாது என அறிவித்தார். இந்த சீர்திருத்தம் அதிகரிக்கும் பணவீக்கத்தை தடுத்து நிறுத்தத் தவறி விட்டது. விலைவாசி உயர்ந்தது. கோர்பசேவ் அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை சிதைந்தது. சோவியத்தில் நிலவிய அரசியல் மோதல்கள் பொருளாதாரத்தை சரிவை நோக்கி இட்டுச் சென்றது. சில மாதங்களில் கோர்பசேவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளும் நாட்டிற்குள் நடந்தன.

2010-ல் வடகொரியாவை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி கிம் ஜோங், நாட்டின் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை இறுக்கவும், கறுப்பு சந்தைகளை முடக்கவும் அதிக மதிப்புள்ள நாணயங்களை தடை செய்தார். இந்த நடவடிக்கையால், விவசாயம் முடங்கி கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அரசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததால், நாட்டில் அசாதரண சூழ்நிலை உருவானது. மக்களின் கோபத்துக்கு உள்ளான சர்வாதிகாரி கிம் ஜோங், மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

No comments:

Post a Comment