Tuesday, November 8, 2016

திருவண்ணாமலையில் எட்டுக்கால் எந்திரன்!



இது ரோபோ யுகம். ரோபோக்களை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் முதல் சினிமாக்கள் வரை உருவாக்கப்பட்டு சூப்பர்ஹிட் ஆகின்றன. மேலைநாடுகளில் தனிப்பட்ட பயன்பாடு தொடங்கி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் என்று பலதரப்பட்ட ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. ரோபோ உருவாக்கத்தில் இந்தியா சற்றுப் பின்தங்கி இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குறையைச் சரிசெய்யும் வகையில் இந்திய மாணவர்களும் விஞ்ஞானிகளும் முயற்சித்துவருகின்றனர். அந்த வரிசையில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் உருவாக்கியுள்ள ரோபோவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பார்க்க எட்டுக்கால் சிலந்தியைப் போல இருக்கும் இந்த ரோபோவை பி.இ. இறுதி ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் பாலாஜி வடிவமைத்து உள்ளார். தயாளன், ஆனந்த் மற்றும் ஆனந்த குமார் என்ற மாணவர்கள் குழு பாலாஜிக்கு உதவி இருக்கிறது. ரொம்பவே உற்சாகத்தோடு தங்கள் ரோபோ குறித்து பேசத் தொடங்கினார்கள் பாலாஜியும் தயாளனும்.

'' இப்போதுள்ள பெரும்பாலான ரோபோக்கள் சக்கரம் மூலமே இயங்கக் கூடியதாக உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்த ரோபோவுக்கு எட்டு இரும்புக் கால்களை பொருத்தி அதன் மூலம் நகரும் வகையில் வடிவமைத்து உள்ளோம்.

இதுவரை கால்களுடன் உருவாக்கப்பட்டுள்ள சில ரோபோக்கள் மிகவும் பொறுமையாக நகரக்கூடியவை. அதேபோல், பல மோட்டார்கள் மற்றும் பல மின்சாரக் கருவிகளைக் கொண்டுதான் அவை இயங்குகின்றன. அதனால், பழுதடையும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. நாங்கள் தயாரித்துள்ள ரோபோவில் இரண்டு ஸ்டெப்பர் மோட்டார்கள் மட்டுமே பொருத்தியுள்ளோம். இதனால் பழுதடையும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

இந்த ரோபோவை உளவு பார்க்கப் பயன்படுத்தலாம். நிலத்தின் அடிப்பரப்பிலும், சுரங்கத்திலும், கடலுக்கு அடியிலும், அபாயங்கள் உள்ள இடங்களிலும் அனுப்பி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம். இதில் பொருத்தப்படும் மோட்டாரின் தன்மைக்கு ஏற்ப ரோபோ பளு தூக்கும்.

கரடுமுரடான மலைப் பகுதியில் கூட சாய்ந்துவிடாமல் நடக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த ரோபோவை இன்னும் மேம்படுத்தி விண்வெளி ஆராய்ச்சிக்கும் பயன் படுத்தலாம்.

இந்த ரோபோவைத் தயாரித்துமுடிக்க 18 ஆயிரம் ரூபாய் செலவானது. இன்னும் இதை அட்வான்ஸ்டாக மாற்ற கூடுதலாகச் செலவழிக்க வேண்டி இருக்கும். இந்த ரோபோ உருவாக்கத்தில் எங்கள் ஹெச்.ஓ.டி. டாக்டர் ரவிச்சந்திரன் உறுதுணையாக இருந்து எங்களை ஊக்கப்படுத்தினார். இன்னும் கூடுதலான வசதிகளும் வாய்ப்புகளும் அமையும்போது இன்னும் சூப்பரோ சூப்பரான ரோபோவை உருவாக்கமுடியும்'' என்கிறார்கள் நம்பிக்கை யுடன்!

No comments:

Post a Comment