Saturday, November 5, 2016

துரு ஏறாத இரும்பு

உலக விஞ்ஞானத்துக்கு எல்லாம் தலையாயது நமது இந்திய விஞ்ஞானம்தான். இது வெறும் வார்த்தையல்ல, வரலாறு. உலக விஞ்ஞானிகள் எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் நீந்தியிருக்கிறார்கள். வானத்தின் மேலே பறந்திருக்கிறார்கள். பூமியின் ஆழத்தை ஊடுருவிச் சென்று புதையல் தேடியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஆச்சரியப்பட்டு பெருமூச்சு விடுகிற விஞ்ஞானம்தான்.ஆனாலும், உலக நாடுகள் ஒன்றிணைந்து நம் அறிவியல் சாதனைகளோடு போட்டி போட்டால்கூட இந்தியாவின் சாதனையை சமன் செய்துவிட முடியாது.

பாரதத்தின் பழமையான விஞ்ஞானம் என்பது அவ்வளவு பெரியது. மூர்த்தி சிறியது என்றாலும், கீர்த்தி பெரியது. உலகில் விஞ்சி நிற்பது இந்திய அறிவியலா? பிற நாடுகளின் அறிவியலா? என்று பட்டிமன்றம் நடத்தினால் பாரத விஞ்ஞானமே என்று பட்டென்று சொல்லிவிடலாம்.

பேசிக்கொண்டே போனால் எப்படி? ஆதாரத்தை எடுத்து வையுங்கள். ஒப்புக்கொள்கிறோம் என்று கேட்பவர்களுக்கு இதோ ஓர் ஆணித்தரமான ஆதாரம். ஆணித்தரமான என்றால், ஆணியை வைத்தே ஆதாரம். ஆணி செய்கிற இரும்பை வைத்தே ஆதாரம்.டெல்லி அருகே ஓர் இரும்புத் தூண் இருக்கிறது. எல்லாரும் இதனை ‘டெல்லி இரும்புத் தூண்’ என்றுதான் சொல்வார்கள்.

துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், டெல்லிக்கு அருகே மேகரூலி என்ற இடத்தில் இந்த இரும்புத் தூண் உள்ளது. இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்டது இது. குப்தர்கள் சாம்ராஜ்யத்தில் தலைசிறந்த மன்னர்களுள் ஒருவரான இரண்டாம் சந்திர குப்தரால் இந்த இரும்புத் தூண் நிறுவப்பட்டது (இரண்டாம் சந்திர குப்தருக்கு ‘சந்திரகுப்த விக்ரமாதித்யா’ என்ற பெயரும் உண்டு) குப்தர்கள் காலம் என்பது கி.பி. நான்காம் நூற்றாண்டு. இன்றிலிருந்து 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது வரலாறு.

அறிவியல் ஆச்சரியம் என்னவென்றால், வெட்டவெளியில் வெயிலிலும் மழையிலும் நனைந்து காயும் இந்தத் தூண் 1600 ஆண்டுகளாக துருப்பிடிக்கவில்லை. உலகத்தின் எந்த விஞ்ஞானிகளாலும் இப்படியொரு இரும்புத் தூணை நிறுவ முடியவில்லை. பட்டிமன்றத் தீர்ப்புக்கு இந்த ஒரு வரி போதும்.

இது ஏன் துருப்பிடிக்கவில்லை என்று காரணத்தைக் கண்டுபிடிக்க பல நூற்றாண்டுகளாக உலக விஞ்ஞானிகள் திக்கித் திணறியிருக்கிறார்கள்.காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என்பார்கள். ஆனால் இந்த இரும்புத் தூண் விஷயத்தில் அது கைகூடவில்லை. காலம் தன் விரல்களால் கூட இந்த இரும்புத்தூணைத் தொட முடியவில்லை.

பல நூறு ஆண்டுகளைத் தாண்டி அந்த தூண், இன்று நிறுவியது போல புதிதாகக் காட்சியளிக்கிறது என்பது காலம் தனக்குத் தானே செய்து கொண்ட துரோகம்தான். ஆம், உலகின் எல்லா பொருட்களையும் அரித்து, சலித்து கொன்று குவிக்கக்கூடிய ‘அரிப்பின்’ காரணங்களால் இரும்புத்தூணை உரசிக்கூட பார்க்க முடியவில்லை.

இந்த இரும்புத் தூண் துருப்பிடிக்காமல் இருக்கும் காரணத்தைக் கண்டறியப் போய், பல பேர் பலவிதமான கதைகளை அள்ளி விட்டார்கள். ‘‘இந்த இரும்புத்தூண் மனிதனால் நிறுவப்படவே இல்லை. வேற்றுக் கிரகவாசிகள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் தங்களது நினைவாக பூமியில் நிறுவிச் சென்றிருக்கிறார்கள்’’ என்றுகூட கூறினார்கள்.

இந்திய விஞ்ஞானம், அதுவும் 1600 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அதி உன்னதமாக இருந்திருக்கிறது பார்த்திருக்கிறீர்களா? ‘இப்படியொரு படைப்பை மனிதன் உருவாக்கியிருக்கவே முடியாது’ என்பதுதான் உலக விஞ்ஞானிகளின் கருத்து என்றால் இந்தியர்கள் மனிதர்கள் அல்லவே, தெய்வங்கள்தானே! சமீபத்தில், ஒரு வழியாக இரும்புத்தூண் இதுநாள் வரை துருப்பிடிக்காமல் இருப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது.

ஒரே ஒரு காரணம் மிக முக்கியமானது. மிகச் சுத்தமான உலோகம் வெளிப்புறக் காரணிகளால் அரிக்கப்படுவதில்லை. (100 காரட்) சுத்தமான இரும்பினால் அந்தத் தூண் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுத்தமான இரும்பினையோ, சுத்தமான வேறு உலோகத்தையோ துரு தொடுவதில்லை. (நம வீட்டு ஜன்னல் கம்பிகள் துருப்பிடிக்கிறதே, அப்படியென்றால் அது சுத்தமான இரும்பு இல்லையா? நிச்சயமாக சுத்தமான இரும்பு இல்லை!)

‘அப்படியென்றால் பரிசுத்தமான இரும்பினால் இன்றைக்கும் எஞ்சினியர்கள் அதுபோன்ற தூண்களை நிறுவ வேண்டியதுதானே’ என்றால், அது அவ்வளவு சுலபமல்ல. அதி சுத்தமான உலோகங்கள் கிடைப்பது கடினம். மேலும் அவை மிக விலை உயர்ந்தவை. அதி சுத்தமான உலோகங்களைக் கொண்டு பொருட்கள் செய்வதும் கடினம். (தூய தங்கத்தில் ஆபரணங்கள் ெசய்ய முடியாதல்லவா? அதனால்தானே செம்பு கலந்த கலவையைப் பயன்படுத்துகிறார்கள்.) அதனால் தூய இரும்பில் தூண் செய்யும் முயற்சியை நம் எஞ்சினியர்கள் கைவிட்டு விட்டார்கள்.

மேலும், பொருட்களோ, தூணோ... அவை துருப்பிடிக்காமல் இருக்க பொருட்களின் வெளிப்புறம் சமதளமாக வழவழப்பாக செய்யப்பட்டிருப்பது அவசியம். மேடு பள்ளங்களுடனும், சில டிசைன்களுடனும் செய்யப்படும் உலோகப் பொருட்கள் அரிமானத்திற்கு ஆளாகின்றன.

மேடு பள்ளங்களில் அல்லது சொரசொரப்பான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் துருப்பிடிப்பதை துரிதப்படுத்திவிடும். இன்று பொருட்களை வழவழப்பாக செய்வதற்காக பாத்திரங்களின் மேற்புறத்தில் ெவள்ளீயம் பூசுகிறார்கள். இவ்வாறு வெள்ளீயம் பூசப்பட்ட பாத்திரங்கள் சில வருடங்களுக்கு மட்டும் துருப்பிடிக்காமல் இருக்கும்.

டெல்லி இரும்புத்தூண் துருப்பிடிக்காமல் இருக்க இதுபோன்ற மேம்போக்கான மேல்பூச்சுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. அந்த இரும்பு மிக சுத்தமானது. காலவெள்ளத்தையும் தாண்டி நிற்கும் உண்மையைப்போல.

டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்

No comments:

Post a Comment