Monday, November 14, 2016

கருப்பு பணம்: சென்னையில் பணத் தொட்டி திறப்பு

சென்னை : கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் ,அப்படி கொடுக்க பயமாக இருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என்று இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.

கருப்புப்பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 9 முதல் ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தார். ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் கடும் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் சில இடங்களில் பணம் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தனர்.

இதனையடுத்து வீணாகும் கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் எனவும் அப்படி கொடுக்க பயமாக இருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்தக்கட்சியின் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் கூறுகையில், "2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தால் வரி விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் நிச்சயம் வரி செலுத்தாமல் பதுக்கி வைத்துள்ள பணத்தை, வெளியில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். மேலும் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் கறுப்புப் பணத்தை மாற்றவும் இயலாது.

இதனால் அந்தப்பணத்தை ஏழைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அவர்களது வாழ்க்கை முன்னேறும். ஏழைகளுக்கு பணம் கொடுக்க தயங்கும் மற்றும் பயப்படுபவர்கள் எங்கள் கட்சி தலைமை அலுவலகத்தை நாடலாம். எங்களிடமும் தகவல் சொல்லத் தயங்கினால் அலுவலக வாசலில் பணத்தொட்டி திறக்கப்பட்டுள்ளது. அதில் உங்களது பணத்தை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் செல்லலாம்.

எங்களிடம் தகவல் தெரிவித்தாலும் அது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இந்த பணத்தொட்டி என்பது அட்டைப் பெட்டியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாய்களை போடலாம். இந்த பணத்தொட்டி 339, காயிதே மில்லத் ரோடு, ஆதம் மார்க்கெட் வளாகம், திருவல்லிக்கேணி என்ற முகவரியில் உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment