Friday, November 23, 2012

ஜல்காரிபாய்

இந்தியக் கிளர்ச்சியின் போது ஜான்சிப் போரில் முக்கிய பங்கு வகித்த ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் விவசாயிகளான சடோபா சிங்-ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம்தேதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரின் தாயான ஜமுனா தேவி இறந்து போனார். அதன் பின்னர், சடோபா சிங் இவரை ஓர் ஆணைப் போல் வளர்த்தார்.

ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் அறிந்து கொண்டார். அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆயினும் விரைவிலேயே நன்றாகப் பயிற்றப்பட்ட வீராங்கனையாக வந்தார். காட்டிலே ஒரு புலியால் தாக்கப்பட்டப் போது, தனது கோடரியைப் பயன்படுத்திப் புலியைக் கொன்றதிலிருந்து புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவத் தொடங்கியது. இன்னொரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயததாரிகளிடம் சவால் விட்டு, அவர்களைப் பின்வாங்கச் செய்தார்.

ஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்தார். இச்சந்தர்ப்பத்திலே, ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். பூரண் சிங், ஜல்காரிபாயை ராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் இணைந்து கொண்டார். ஜான்சியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு கரிசனம் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக விளங்கினார் ஜல்காரிபாய்.

1857-58ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார்.

1858ஆம் ஆண்டு மார்ச் 23 பொழுது புலராத அதிகாலை.
ஜான்ஸியின் ராணி லக்ஷ்மி பாய் தன் அரண்மனையின் ஆலோசனை மண்டபத்தில் தன் அமைச்சர்களுடனும் தளபதிகளுடனும் போர்கால அவசர கூட்டத்தில் வீற்றிருந்தார். அனைவரும் போர்களத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்டு பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஹுயூக்ஸின் படை சூழ்ந்து நெருங்கிவிட்டது. வெகுநேரமாக தடுத்துப் போராடிகொண்டிருக்கும் நம் படை வீரார்கள் இனி ஒரு முழு நாள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்பது உறுதி.
நானா சஹேபின் படைதளபதி, மஹாவீரன், என் ஆருயிர் நண்பன் தாந்தியா தோப்பே நம்மையும், நம் படைகளையும், இந்த ஜான்ஸி மண்ணையும் காப்பாற்ற படை அனுப்பியதாக ஓலை வந்தும் இதுவரை படைகள் வந்த சேரவில்லை. மெய்யான நிலமை இன்று மதியத்திற்குள் அவர்கள் வந்து சேரவில்லையென்றால் நம் படை சர்வ நாசம் அடையும்.

போர்களத்தின் தற்போதைய நிலவரமும், அங்கிருந்து வரும் மற்றச் செய்திகளும், நான் உடனே ஜான்ஸியை விட்டு வெளியேறாவிட்டால் அவர்கள் நாளை காலைக்குள் என்னைப் சிறைப்பிடித்து விடுவார்கள் என்பது தின்னம். நான் அப்படி தப்பிச் சென்றேன் என்றால் எஞ்சியிருக்கும் நம் படை உடனே சரணடைந்து விடும். நமக்கு வேண்டிய அவகாசமெல்லாம் தாந்தியாவின் படை வந்தடையும் வரைதான். அதன் பின்னர் ஹுயூக்ஸின் படைகளை நாம் ஜான்ஸியை விட்டு பின்னடையச் செய்யலாம்” என்று லக்ஷ்மி பாய் சபையில் கூறினார்.

“மகாராணி, உங்கள் எண்ணம் புரிகிறது. அதுவே என் எண்ணமும். ஆனால் தளபதி தாந்தியாவின் படையை நம்பி நாம் வாழாயிருந்தால், அது ஆபத்தில் முடியும். முதலில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்றார் சேனாதிபதி.
அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஜல்காரிபாய் “ராணியாரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பலரும் உங்களுக்கும் எனக்கு உருவ ஒற்றுமையிருப்பதாக கூறியிருக்கிறார்கள். நான் உங்களைப் போல் உடையணிந்து உங்களுக்கு பதில் தளபதி தாந்தியாவின் படை வரும் வரை நம் படைகளுக்கு தலைமை தாங்கி போராடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதற்குள் தப்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்.

ஜல்காரிபாயின் யோசனையக் கேட்ட அனைவரும் அவருடைய வீரத்திற்க்காகவும், ராஜதந்திரத்திற்க்காகவும் அவரை பெரிதும் பாராட்டினார்கள்.

ராணி , ஜல்காரிபாய்ப் பார்த்து “என் அருமை தோழியே, எனக்காகவும், நம் நாட்டிற்க்காகவும் உன் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த வீரச் செயலுக்காக துணிந்துள்ளாய். உன் வீரம் நம் பாரத வரலாற்றில் நீங்காத இடம் பெரும்” என்று கூறி விடைபெற்றார்.

இதனையடுத்து, ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார்.

ஆங்கிலேய அதிகாரிகள், தாம் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஜல்காரிபாய் துணிச்சலுடன் தூக்கிலிடுங்கள்! என்று கூறினார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் உண்மையைச் சிறிது தாமதமாக அறிந்து கொண்டனர். ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிக்கு ஜல்காரிபாயின் வீரமும், தங்கள் நாட்டின் மேல் உள்ள பற்றும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தார்.

ஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment