Wednesday, November 28, 2012

ஆயிரத்தொரு இரவுகள்



அரேபியன் இரவுகள், இதன் மறுபெயர் ஆயிரத்தொரு இரவுகள். இது பண்டைய நாட்டுக் கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் யாவும் இந்தியாவில்இருந்து அரபு நாட்டுக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

பலர் கூறிய கதைகளின் தொகுப்பாக இருப்பினும், இவை யாவும், ஒரே ஒருவரால் கூறப்பட்டது போல் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணை மணந்தார் ஷெக்ரியார் என்ற மன்னர். அவள், மன்னனை ஏமாற்றி விட்டாள். சினமுற்ற மன்னன், பின், மணம் செய்து கொண்ட ஒவ்வொரு பெண்ணையும் அடுத்த நாள் காலையில் கொன்று விடுவது வழக்கம்.

கடைசியில் ஷெக்ரசாத் என்பவளை மணந்தார். அடுத்த நாள் காலையில் அவள் கொலை செய்யப்படுவதற்கு முன், தன் தங்கையை ஏவி விட்டுக் கடைசி கதை ஒன்று தங்கைக்குச் சொல்ல, ஷெக்ரசாத்திற்கு அனுமதி தரவேண்டுமென்று கேட்கச் சொன்னாள்; அரசனும் அனுமதித்தார்.

கதையை ஆரம்பித்தாள் ஷெக்ரசாத். அரசனும் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். கொலை செய்யும் நேரம் வந்தது. கதை முடியவில்லை. கதை கேட்கும் ஆர்வத்தில் மூழ்கி இருந்த அரசன், அடுத்த நாள் காலை வரை கொலை செய்வதை தள்ளிப் போட்டான்.
கதையை ஒன்றன்பின் ஒன்றாகப் பின்னி, 1001 இரவுகள் கடத்தி விட்டாள் ராணி ஷெக்ரசாத். மன்னனும் கொலை செய்வதை ஒவ்வொரு நாளும் தள்ளிப் போட்டு வந்தான். ஷெக்ரசாத்தின் கதைகளில் மனம் லயித்த அரசன், கொலை செய்யும் கட்டளையைத் திருப்பிப் பெற்று, ஷெக்ரசாத்தை ராணியாக்கிக் கொண்டான்.

இக்கதைகள் யாவும் அரசர்களின் வீரச் செயல்களையும், அவர்களுடைய பிரபுக்கள், அடிமைகள், வியாபாரிகள், நடன மாதுகள், அபூர்வ மிருகங்கள் ஆகியவற்றைப் பற்றி கூறுபவை. அலிபாபாவும், 40 திருடர்களும் என்பது இக்கதைகளில் ஒன்று. இக்கதைகள் பல ஆசிய, ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment