Saturday, November 24, 2012

தர்மம்!

உணவு தேடிச் சுற்றித் திரிந்த காகம் ஒன்று இரை எதுவும் கிடைக்காமல் சோர்ந்து போய் தோட்டத்தில் போடப்பட்டு இருந்த குடிசை மீது அமர்ந்தது. சோகமாய் "கா...கா..'' என கரைந்தது.

உடனே அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு அழகிய

குழந்தை இருந்தது. அவள் கூரை மீது கொஞ்சம் சோற்றைப் போட்டாள். தனக்கு உணவிட்டவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்ட காக்கை, தனக்குப் போடப்பட்ட உணவை வயிறு முட்டச் சாப்பிட்டது. தன் குஞ்சுக்கும் வாய் நிறைய உணவை அடக்கிக் கொண்டு பறந்தது.

அதன்பின் தினமும் அது அங்கு வந்தது. அந்த அம்மாவும் அதற்குச் சோறு, இட்லி, தோசை, பிஸ்கட் என தன்னிடம் இருப்பதைப் போட்டு வந்தார். காகம் கரைந்து தனது சுற்றத்தாரை அழைத்து கூட்டுச் சேர்ந்து சாப்பிட்டு வந்தது. அந்த வீட்டில் தினமும் தங்களுக்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு உறுதியாகிவிட்டது.

ஒருமுறை அவை உணவுக்காக அந்த வீட்டுக்கூரை மீது வந்தமர்ந்தபோது பாம்பு ஒன்று கூரை கழியிலிருந்து வீட்டிற்குள் புக முயற்சிப்பதைக் கண்டன. "இந்தப் பாம்பு வீட்டிற்குள் போக முயற்சிக்கிறது. வீட்டில் குழந்தை உள்ளது. உடனே வீட்டில் உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்கள் வரும் வரை பாம்பை மேற்கொண்டு நகரவிடக் கூடாது. கவனமாய் இதை செய்ய வேண்டும். ஆம், அவர்களை காப்பதும், எச்சரிப்பதும் நம் கடமை! நமக்கு உணவிட்டவருக்கு நாம் நம் நன்றியைக் காட்ட வேண்டிய தருணம் இது.'' ஒரு நிமிடத்தில் காக்கைகள் கூடிப் பேசி, பீதி நிறைந்த குரலில் ஒட்டுமொத்தமாய் கத்திக் கொண்டு சிறகைப் படபடவென அடித்தன. சுற்றிச் சுற்றி வந்து பறந்தன.

"இது என்ன? இந்த காக்கைகளுக்கு இன்று என்ன வந்தது? போட்டதைச் சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு போய்விடுமே? இன்று ஏன் இப்படி அலறிக்கொண்டு வட்டமிடுகின்றன? சோற்றை போட்ட பின்பும் சத்தம் அடங்கவில்லையே? இந்த காக்கைகளுக்கு நாம் ரொம்பவும் இடம் கொடுத்து விட்டோமோ? குழந்தை வேறு தூங்குகிறது. இதுகள் போடும் இரைச்சலில் குழந்தை விழித்துக் கொண்டால்...'' என்று எண்ணியபடி எரிச்சலோடு வெளியே வந்து கூரையைப் பார்த்தாள் அந்தப் பெண்.

கூரை மீது பாம்பு ஒன்று படம் எடுத்துச் சீறிக் கொண்டு நிற்பதையும், அதை காக்கைக் கூட்டம் சுற்றி வந்து மேலே நகர விடாமல் தடை செய்வதையும் கண்டு பயமும், நன்றி உணர்வும் கொண்டவளாய் உடனே தனது கணவரை அழைத்து பாம்பை அடிக்கச் சொல்லிவிட்டு நன்றியோடு காக்கைக் கூட்டத்தைப் பார்த்து புன்னகை காட்டினார்.

"வாயில்லா ஜீவன்களான காக்கைகளும் கூட நன்றிக்கடன் செலுத்துகின்றனவே'' என்று அதிசயப்பட்டார் பாம்பை அடித்து முடித்த அந்தப் பெண்ணின் கணவர்.

நண்பர்களே ! நாம் நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது நமக்கு தக்க சமயத்தில் திரும்பக் கிடைக்கும். அதுவே தர்மம்! புரிந்து கொண்டீர்களா!

No comments:

Post a Comment