முனுசாமி என்பவன் அந்த கிராமத்தில் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தான். இவன் மிகவும் கெட்டவன். ஊர் மக்கள் அனைவரும் தன்னைத் தெய்வமாக எண்ண வேண்டும் என்று முனுசாமி நினைப்பான். அதற்காக அவன் பல சூழ்ச்சிகளையும் செய்வான்.
இவனைப் பற்றி கந்தனுக்கு நன்றாக தெரியும். முனுசாமி சூழ்ச்சி செய்தாலும் கந்தன் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
இல்லை என்று வருபவர்களுக்கு தன்னிடம் இருக்கும் உணவைக் கொடுத்து நல்ல முறையில் உபசரித்து வழி அனுப்புவான் கந்தன். அதனால் ஊர் மக்கள் அவனை மனமார வாழ்த்துவார்கள். அதேபோல் முனுசாமியிடம் `இல்லை' என்று சென்றால் அவன், `என்னிடம் எதுவும் இல்லை, உங்களுக்குக் கொடுத்தால் நானும் உங்களைப் போன்றே ஆகிவிடுவேன்' என்று அவர்களை அடித்து விரட்டுவான். இதனால் அவர்கள் மிகவும் வேதனையுடன் திரும்புவார்கள்.
"நம்மிடம் பணம் இருக்கு. அதனால் நம்மை யாரும் ஒன்று செய்துவிட முடியாது. எதையும் பணத்தால் சரி செய்துவிட முடியும்'' என்ற எண்ணம் முனுசாமியிடம் இருந்தது. அதனால் அவன் தன் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும் கூட மிகவும் உதாசினப்படுத்தினான். ஆனால் கந்தன் ஏழையாக இருந்தாலும் அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் உறவு வைத்து இருந்தான்.
கந்தனை எப்படியாவது இந்த ஊரைவிட்டு விரட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று முனுசாமி நினைப்பான். அதனால் கந்தனுக்கு பல இடைஞ்சல்கள் செய்து வந்தான். ஆனால் அவனது திட்டங்கள் தோல்வியில்தான் முடிந்தது.
ஒருநாள் கந்தனின் வீட்டுக்கு மிகவும் வயதான முனிவர் ஒருவர் வந்தார். அவர் பசியால் மிகவும் வாடிப் போயிருந்தார். கந்தன் வீட்டு முன்வந்து நின்று, "ஐயா எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள், பசி உயிர் போகுது!'' என்றார். அந்த முனிவரின் குரல் கேட்டதும் கந்தன் அதிர்ச்சியடைந்தான். உடனே முனிவரை தன் வீட்டிற்குள் அழைத்து அமர வைத்து அவருக்கு மிகவும் அன்பாக அறுசுவை உணவுகளைப் பரிமாறி உபசரித்தான். முனிவரின் வயிறும் மனமும் குளிர்ந்தன.
உடனே அந்த முனிவர் கந்தனைப் பார்த்து, "என் பசியைப் போக்கினாய், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்று கூறினார்.
அதற்குக் கந்தன், "எனக்கு ஒன்றும் வேண்டாம் ஐயா. இல்லை என்று என்னிடம் வருபவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று கூறும் நிலை எனக்கு வராமலிருந்தால் போதும்'' என்றான்.
அதற்கு அந்த முனிவர், "உன் எண்ணம்போல நடக்கும்'' என்று கூறி அங்கு இருந்து புறப்பட்டார். பிறகு கந்தனின் எண்ணம்போல எல்லாம் நடந்தது. வருவோருக் கு எல்லாம் சாப்பாடு போடும் வகையில் அவன் வீட்டில் வளமை பொங்கியது.
அதைக் கேள்விப்பட்ட முனுசாமி அந்த முனிவரை தேடிப்பிடித்து அவரை வலுக் கட்டாயமாக உணவு உண்ணவைத்து உபசரித்தான். முனுசாமியின் எண்ணம் முனிவருக்குப் புரிந்தது. முனிவர் சாப்பிட்ட பிறகு முனுசாமி, " கந்தனுக்கு வரம் கொடுத்தது போல எனக்கும் நீங்கள் வரம் தர வேண்டும் சாமி'' என்றான். அதற்கு அந்த முனிவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார். அதற்கு முனுசாமி, "இந்த ஊரில் நானே பெரிய செல்வந்தன் ஆக வேண்டும்'' என்றான். அதற்கு முனிவர் "உன் எண்ணம்போல நடக்கும்'' என்றார்.
பிறகு முனுசாமியின் எண்ணம் முழுவதும் செல்வம் சேர்க்கும் நோக்கத்துக்கு மாறியது. அதனால் உறவினர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டான். முனுசாமி தனிமைக்கு ஆளானான். ஊரில் ஏற்கனவே அவனை வெறுத்த மக்கள் அனைவரும் மேலும் ஒதுக்க ஆரம்பித்தனர்.
பிறகு அவன் என்ன செய்வது என்று தெரியாமல் வாடினான். அவனிடம் செல்வம் மிகுந்திருந்தும் நிம்மதியின்றித் தவித்தான்.
கந்தன் நல்லதே நினைத்து நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து வந்தான். அவனைச் சுற்றியும் நல்ல உறவுமுறைகள் இருந்தன. அதனால் கந்தன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
மீண்டும் ஒருநாள் அந்த முனிவர் அந்த கிராமத்திற்கு சென்றார். அப்போதும் கந்தன் அவரை வணங்கி வரவேற்றான். உணவு அளித்து உபசரித்தான். அப்போது முனிவர், "என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.
அதற்கு கந்தன், ``எல்லாரும் நல்லா இருக்க வேண்டும்'' என்றான். உடனே முனிவர்,
"நல்லதே நடக்கும்'' என்று புறப்பட்டார். பிறகு முனுசாமியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அவனின் நிலையைக் கண்டு வருத்தம் கொண்டார்.
அவரிடம் முனுசாமி, "ஐயா... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?'' என்றான். முனிவர் "எல்லாம் அவரவர் எண்ணப்படிதான் நடக்கும்'' என்றார்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, "நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதே நடக்கும்'' என்று. அன்றிலிருந்து அவன் தன்னிடம் இருக்கும் அனைத்துச் செல்வங்களையும் அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தான். பிரிந்து சென்ற உறவுகளும் மீண்டும் வந்து சேர்ந்தன. முனுசாமியும் நிம்மதியாக வாழத் தொடங்கினான்
No comments:
Post a Comment